மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ்,முஸ்லிம் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோருக்குமிடையிலான விஷேட சந்திப்பொன்று 07-07-2014 நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இயங்கும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் விஷேட சந்திப்பு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமை தாங்கினார்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் சமூகச் செயற்பாடுகள் குறித்து ஊடகவியலாளர்களின் பங்கு முக்கியத்துவம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரினால் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அத்தோடு இங்கு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களின் பல்வேறு பிரச்சினைகள்,அவர்களின் நலநோம்பு விடயங்கள், பொது மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ்,முஸ்லிம் பிராந்திய ஊடகவியலாளர்களின் நன்மை கருதி ஒவ்வொரு மாதமும் ஒரு தடவை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்குமிடையில் சந்திப்புக்களை நடாத்துவதென தீர்மாணிக்கப்பட்டது.
இவ் விஷேட சந்திப்பில் மட்டு-மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா ,மனநல வைத்திய நிபுணர் ஜுடி ரமேஸ் ஜெயக்குமார், மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல் திணைக்கள அதிகாரி எல்.தேவஅதிரன் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்கள் ஆகியவற்றுக்குப் பணியாற்றும் முழுநேர, பகுதி நேர ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Published by



Leave a comment