யாழ்: சிறுவர்களது பொழுதுபோக்கு மையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ள பழைய பூங்காவின் சாகசப் பூங்காவை அனைத்துத் தரப்பினரும் பொறுப்புணர்வுடன் பாதுகாத்து பராமரிக்க வேண்டுமென யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் சிறார்களுக்காக நவீன வடிவமைப்புக்களுடன் நிர்மாணிக்கப்பட்ட சாகசப் பூங்காவை நேற்று (06) அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னொருகாலத்தில் இந்தப் பூங்கா வேறுதேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும், வடமாகாண ஆளுநர் சந்திரசிறியும் இப்பகுதியை எவ்வாறு சிறுவர்களது பொழுது போக்கு மையமாக மாற்றியமைக்க முடியும் என்பது குறித்து ஆராயத் தொடங்கினார்கள்.இதன்பிரகாரம், ஆரம்பக் கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது பத்திரிகைகளில் உண்மைக்குப்புறம்பான செய்திகள் பல பிரசுரிக்கப்பட்டன.
இருந்தபோதிலும் இன்று சிறார்களினதும் பெரியோர்களினதும் மனரம்மியமான சூழலாக இப்பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னைய பழைய பூங்காவானது தற்போது சிறுவர்களுக்கான சாகசப் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.
எனவே, இதனை உணர்ந்து அனைவரும் பொறுப்புணர்வுடன் பாதுகாத்து பராமரிக்க வேண்டுமென்பதுடன் இதன்மூலம் ஒவ்வொருவரும் மனதையும் உடலையும் ஸ்திரப்படுத்த முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.
முன்பதாக, சிறார்களின் இசை அணிவகுப்புடன் அமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோர் பிரதான வாயிலில் வரவேற்கப்பட்டதை அடுத்து மங்கள விளக்கேற்றிவைக்கப்பட்டது.
சிறப்பு பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நினைவுக்கல் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் சாகசப் பூங்காவின் ஏனைய பகுதிகளையும் அதிதிகள் பார்வையிட்டனர்.
இதில் பொய்க்காலில் நடத்தல், பொம்மலாட்டம் ஆகியன சிறுவர்களை மட்டுமல்லாது அங்கு வருகைதந்திருந்த அனைவரையும் ஈர்த்திருந்தது.
இதன்போது வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்றும் வடக்கு மாகாண சபையின் செயலாளர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்
Published by




Leave a comment