டெல்லி: ஈராக் ஐஎஸ்ஐஎஸ் போராளிகளின் மரண பிடியில் இருந்து 46 இந்திய தாதிகள் மீட்கப்பட்டது எப்படி என்பது குறித்த முழு விவரத்தை வெளியிட முடியாது என்றும், இந்த மீட்பு நடவடிக்கை எப்படி, யார், யார் உதவியுடன் நடந்தது என்ற தகவல்களை வெளியிட முடியாது என்றும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சயீத் அக்பரூதீன் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,
ஈராக்கில் 46 இந்திய தாதிகள் திக்ரித் நகரில் சிக்கி கொண்ட தகவல் கிடைத்த நாள் முதலே, நாங்கள் அவர்கள் பற்றி கண்காணித்துக் கொண்டிருந்தோம். போராளிகள் அவர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை. அவர்களை மருத்துவமனையிலேயே தங்க வைத்திருந்தனர்.
திக்ரித் நகரில் இருந்து 46 பேரையும் மொசூல் நகருக்கு போராளிகள் அழைத்துச் செல்ல திட்டமிட்ட போது, அதை தாதிகள் விரும்பவில்லை. போராளிகளுடன் செல்ல அவர்கள் பயந்தனர். இதையடுத்து நாங்கள் ஈராக்கில் உள்ள சமூக ஆர்வலர்கள் உதவியுடன் போராட்டக் குழுக்களுடன் தொடர்பு கொண்டு பேசினோம். ஆனாலும் 46 தாதிகளையும் தீவிரவாதிகள் வலுக்கட்டாயமாக பஸ்சில் மொசூல் நகருக்கு அழைத்துச் சென்றனர்.
நாங்கள் தாதிகளை தொடர்பு கொண்டு தைரியம் கொடுத்தோம். போராளிகள் சொல்வது போல மொசூல் செல்லுங்கள். உங்களை அங்கிருந்து மீட்க ஏற்பாடு செய்கிறோம் என்று உறுதியளித்தோம். ஆனாலும் தாதிகள் பயந்தபடியே சென்றனர். இதற்கிடையே நாங்கள் பல்வேறு முறைகள், ஆட்கள், தூதர்கள் மூலம் போராட்டக் குழுக்களுடன் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தினோம்.
தாதிகளை விடுவிக்க மிக நீண்ட போராட்டத்தை சந்திக்க வேண்டியதிருந்தது. பல இடங்களில் கதவுகளை தட்டினோம். அதிர்ஷ்டவசமாக ஒரு கதவு திறந்து கொண்டது. இதன் மூலம் 46 தாதிகளும் மீட்கப்பட்டனர். மற்றபடி இந்த மீட்பு நடவடிக்கை எப்படி, யார், யார் உதவியுடன் நடந்தது என்ற தகவல்களை வெளியிட முடியாது என்றார்.
இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு சவுதி அரேபியா உதவியிருக்கக் கூடும் என்று தெரிகிறது. மேலும் போராளிகளுக்கு பணம் ஏதும் தரப்பட்டதா என்பது தெரியவில்லை. அடுத்த சில நாட்களில் இது தொடர்பான விவரங்கள் வெளியில் வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Published by



Leave a comment