கொழும்பு: ஹிலாபத் ஆட்சியை நிலை நிறுத்துவதாகக்கூறி தற்பொழுது கறுப்புக்கொடியுடன் ஈராக்கிலும், சிரியாவிலும் போராடிவரும் இஸிஸ் அமைப்பில் இலங்கையில் முஸ்லிம் இளைஞர்கள் கவரப்பட்டு வருகின்றனர்.
ஒரு இனத்துக்கான போராட்டங்கள் உலகில் எங்கு மேற்கொள்ளப்பட்டாலும் உலக நாடுகளில் எங்கேயோ இருக்கும் மக்களையும் தாக்கம் செலுத்தும் என்பது வரலாறு!
1970-1980 களில் லிப்யாவும், கடாபியும் உலகில் முஸ்லிம்களிடத்தில் புகழ்பெற்றிருந்தனர். 1990-1991 காலப்பகுதியில் ஈராக் உலகில் பேசப்பட்டது. இக்காலப்பகுதியில் அப்போதிருந்த இளைஞர்கள் தங்களது சிந்தனைகளை கடாபியாகவும், சதாமாகவும் சித்தரிக்க முயன்றனர்.
சிலபெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கும் இத்தலைவர்களின் பெயர்களை தங்களது பிள்ளைகளுக்கும் நாமம்சூட்டினர்.
மேலும், கடாபி, சதாம், பக்தாக் போன்ற பெயர்களில் உணவகங்களும், பெட்டிக் கடைகளும் உதயம் பெற்றன. இவ்விடங்களில் மேற்படி தலைவர்களின் புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டும் வந்தன.
இதேபோல்தால்தான் போராளிகள் என்று முஸ்லிம்களை அழைத்து வந்த, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அவரது புகைப்படங்களையும் முஸ்லிம் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு உணவகங்களிலும், தங்களது இல்லங்களிலும் தொங்கவிட்டு வந்தனர்.
இன்றும் அன்றுபோல் இளைஞர்களிடத்தில் இன உணர்வுகள் இருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு மாற்றம். இத்தகைய தலைவர்கள் என்று கருதுபவர்களது புகைப்படங்களை தங்களது இல்லங்களில் அன்று தொங்கவிட்டு வந்தனர். ஆனால் இன்று முகநூலில் தொங்கவிடுகின்றனர். இதுதான் வித்தியாசம்.
இசிஸ் போராளிகளிடம் எவ்வாறு நன்மை உள்ளது என வாதிடுபவர்கள், அவர்களிடம் தீமைகளும் இருப்பதாக வாதிடுகின்றனர்.
ஹிலாபத் ஆட்சியை நிநுவவேண்டுமானால் அமீர் களத்தில் இருக்க வேண்டும். மக்கள் முன்னிலையில் தன்னை அடையாளப்படுத்த வேண்டும். ஒழிந்துகொண்டு இருக்கக் கூடாது. ஆயிரக்கணக்கான சகோதர்களை கொண்று குவிக்கின்றனர். மன்னிப்பு என்கிற வார்த்தையே இஸ்லாத்தை பிரயோகிக்க நினைப்பவர்களிடம் இல்லை இது போன்ற இன்னும் பல விடயங்களை இஸிஸ் அமைப்புக்கு எதிராக மக்கள் கூறுகின்றனர்.
மாறாக, ஷியாவை ஒழிக்கிறார்கள், சுன்னத்தை அமல் படுத்துகிறார்கள், நன்கொடைகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குகிறார்கள் என மற்றுமொரு சாரார் இஸிஸ் அமைப்பைப் போற்றுகின்றனர்.
இஸ்லாம் என்ற பெயரில் உலகப் போராட்டக் குழுக்கள் பற்றி என்னதான் எங்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அல்கைதாவாக இருக்கட்டும், தலிபான்களாக இருக்கட்டும் அல்லது இஸிஸ் அமைப்பாக இருக்கட்டும் இவர்கள் எவருமே உலக முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பவர்களல்லர். இது அவர்களது நோக்கமுமல்ல!
ஒவ்வொரு இயக்கத்துக்கும் கொள்கைகள் இருக்கின்றன. அந்த கொள்கைக்கே அவர்கள் போராடுகிறார்கள். தங்களது கொள்கையை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் போட்டுத்தள்ளப்படுகின்றனர்.
என்னதான இருந்தாலும் இந்தப் போராளிகள் எல்லோரும் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் எதிராகவே போராடுகிறார்கள் என்றும் மக்கள் கூறலாம். மறைந்த சதாம் ஹூஸைனும், கடாபியும் இவ்விரு நாடுகளுக்கும் எதிராக விரலை ஆட்டியதால்தான் ஒழிக்கப்பட்டார்கள் என்பதும் வரலாற்று உண்மை.
சிரியா விழ வேண்டும். அங்கு அமெரிக்க தரை இறங்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் விருப்பமும் எதிர்பார்ப்பும். அது நிறைவேறும்வரை காத்திருக்கிறது உலகப்படை!
இந்த இயக்கங்கள் இன்றுவரைக்கும் பாதிக்கப்பட்டுவரும் இலங்கை முஸ்லிம்கள் பற்றியோ, பர்மா முஸ்லிம்கள் பற்றியோ தங்களது கருத்துக்களை வெளியிடவில்லை. அவர்களுக்குத் தெரியாது போல.
எனவே, எமது சமூகப் பிரச்சனை எமது நாட்டில் தீயாய் எரிந்துகொண்டிருக்கின்றனது. இதற்காக நாங்கள் எவ்வாறு கடந்த காலங்களில் ஒற்றுமையாக செயற்பட்டு, இலங்கைக்கும் உலகுக்கும் எடுத்துக் காட்டினோமோ, அந்த அடிப்படையில் தொடர்ந்தும் சமூகத்துக்காக உழைக்கக்கூடிய மக்களாக, குரல் கொடுக்கக்கூடியவர்களாக, எங்கள் உயிர்களையும், சொத்துக்களையும், அல்லாஹ்வின் ஆலயங்களையும் பாதுகாக்கக் கூடிய முஸ்லிம் சமூகமாக நாம் வாழவேண்டும்.
மாறாக இந்த வெளிநாட்டுப் போராட்டக்குழுக்களை ஆதரிப்பதாலோ எதிர்ப்பதாலோ எங்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை!
மாறாக நாங்கள் ஓர் வெளிநாட்டுப் போராளியாக இனங்காட்டப்படுகிறோம். அதற்கு தைரியம் இருப்பவர்கள், தாங்கள் கைதுசெய்து விசாரிக்கப்படும் போது, தகுந்த நியாயங்களை எடுத்துக்காட்டி பொலிஸ் நிலையத்திலிருந்து அல்லது சிறையிலிருந்து வெளிவரக்கூடிய தகுதிகள் இருந்தால் முன்வந்து செயற்படுங்கள்.
இலங்கை முஸ்லிம் சமூகத்துக்காகப் போராடி உங்களுக்கு இந்நிலை ஏற்பட்டால் இலங்கை முஸ்லிம்கள் உங்களுக்காக உதவுவார்கள். ஏன் உயிரைவிடவும் தயங்க மாட்டார்கள். ஆனால், வெளிநாட்டுப் போராளிகளுக்காக குரல் கொடுத்து மாட்டிக்கொண்டால், வெளிநாட்டு இயக்கங்களோ, இலங்கை முஸ்லிம்களோ உங்களைக் காப்பாற்ற மாட்டார்கள்.
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு பெருங்குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை யுக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக்களிடையே பெரும் போர் நிகழும். ஆனால், அவ்விரு குழுவினரும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும்.
(முஸ்லிம் 5536)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு முஸ்லிம்கள் பரஸ்பரம் தம் சகோதரருக்கு எதிராக ஆயுதமேந்தும்போது, அவர்கள் இருவருமே நரகத்தின் விளிம்பில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மற்றவரைக் கொன்றுவிட்டால், அவர்கள் இருவருமே நரகத்திற்குள் நுழைந்துவிடுகின்றனர்.
இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது(முஸ்லிம் 5535)
சுன்னி முஸ்லிம் என்றாலும், ஷியா முஸ்லிம் என்றாலும், குர்திஷ் முஸ்லிம் என்றாலும், போராடும் போது அல்லாஹூ அக்பர் என்றுதான் போராடுகிறார்கள். அல்லாஹ்தான் யாவற்றையும் அறிந்தவன்.
எனவே தயவு செய்து எமது முஸ்லிம் இளைஞர்கள் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் மிக அவதானப்போக்குடன் செயற்படுங்கள். எல்லா விடயங்களும் மிக நிதானமாக சம்பந்தப்பட்டவர்களால் அவதானிக்கப்பட்டு வருகின்றன என்பதை சகோதரர்கள் மறந்துவிட வேண்டாம்!
Published by





Leave a reply to Omar Lebbe Cancel reply