கொழும்பு: பொதுபலசேனா அமைப்பு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அனுசரணையுடன் செயற்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளிலோ செய்திகளிலோ எந்தவித உண்மையும் கிடையாது என்று இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
அதேபோன்று அளுத்கமையில் அண் மையில் இடம்பெற்ற சம்பவத்திற்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் எந்தவிதத் தொடர்புகளும் கிடையாது. அவ்வாறு கூறப்படும் செய்திகளை முற்றாகப் மறுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி காலியில் இடம்பெற்ற நிகழ் வொன்றில் பாதுகாப்புச் செயலாளர் பிரதம அதிதியாகக்கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்துக் கொண்டே சிலர் பொதுபல சேனாவுக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் தொடர்புகள் உள்ளன என திரிபுபடுத்தி செய்திகளை வெளியிட்டு திட்டமிட்ட அடிப்படையில் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு மற்றும் சமகால விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்றது. பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டு, பொதுபலசேனா அமைப்புடன் பாதுகாப்பு அமைச்சை தொடர்புபடுத்தி வெளியிட்டுள்ள செய்திகள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் விளக்க மளிக்கையில்,
ஜேர்மன் நாட்டின் தனவந்தர் ஒருவரின் நிதியுதவியில் காலி பிலான பிரதேசத்தில் அமைக்கப்பட்ட மெதசெவன என்ற பெயரிலான பெளத்த கலாசார மற்றும் ஆன்மிக பயிற்சி நிலையத்தின் திறப்பு விழா 2013 ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் திகதி ருஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பல்லத்தர் சுமனஜோதி தேரரின் தலைமையில் நடைபெற்றுள்ளதாகவும் இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளு மாறு மேற்படி நிலையத்தின் ஸ்தாபகரான கிரம விமலஜோதி தேரர் பாதுகாப்புச் செயலாளருக்கு அழைப்பிதழ் வழங்கியிருந்தார்.
பெளத்தர்கள் மத்தியில் பிரபலமான வேந்தர் மற்றும் மேற்படி நிலையத்தின் ஸ்தாபகர் ஆகிய இரு தேரர்களின் அந்த அழைப்பிலேயே பாதுகாப்புச் செயலாளர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார். பொதுபலசேனா என்ற பெயரில் அந்த நேரத்தில் இந்த நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. பெளத்த சமயத்துடன் தொடர்புடைய நிகழ்வு என்பதால் பொதுபல சேனாவின் தற்போதைய பொதுச் செயலாளரான கலபொட அத்தே ஞானசார தேரரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
அந்த நேரம் ஊடகங்களில் வெளிவந்த இந்த திறப்பு விழா தொடர்பான படங்களை பயன்படுத்தியே பொதுபல சேனாவுக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் தொடர்பு உள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் திரிபுபடுத்தி அந்த புகைப்படத்துடன் செய்திகளை வெளியிட்டு வருகின்றன என்று தெரிவித்த அவர்இ இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பாதுகாப்பு அமைச்சு முற்றாக மறுப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் பொதுபலசேனாவின் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் சில ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. இந்த குற்றச்சாட்டுகளிலும் எவ்வித உண்மையும் கிடையாது. பாதுகாப்பு அமைச்சுக்கு இது போன்ற எவ்வித தேவையும் கிடையாது என்றார். எமது நாட்டில் பெளத்த, இந்துஇ முஸ்லிம், கிறிஸ்தவம் என்ற சமயங்களின் பெயர்களில் பல்வேறு அமைப்புக்கள் செயற்படுகின்றன. இது ஒரு ஜனநாயக நாடு என்பதால் சகலருக்கும் சமமான சந்தர்ப்பம் உள்ளது. எனவே அவற்றில் குறிப்பாக ஒரு அமைப்புக்கு மாத்திரம் எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாது என்றார்.
எமது நாட்டில் முப்பது வருடகாலம் நிலவிய கொடிய யுத்தம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டலிலேயே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இனங்களுக்கு இடையில் இது போன்ற முரண்பாடுகளை ஏற்படுத்தி மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்த ஜனாதிபதிக்கோ பாதுகாப்புச் செயலாளருக்கோ எதுவித தேவையும் கிடையாது. அவ்வாறு ஏற்படுத்த அவர்கள் ஒரு போதும் விரும்பப் போவதில்லை. செயற்படுவதுமில்லை என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் செய்தியாளர் மாநாட்டில் இராணுவ ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர, கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய மற்றும் விமானப் படையின் பேச்சாளர் வின்ங் கொமாண்டர் கிஹான் செனவிரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர். tk
Published by
![Gotabaya[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/gotabaya1.jpg?w=120&h=150)
Leave a comment