றியாத்: சவுதி அரேபியாவில் தொழில்நிமித்தம் தங்கியிருக்கும், அரபு மற்றும் ஆசிய நாட்டவர்களுக்காக புனித ரமழானில் மக்கா சென்று உம்ரா செய்து வருவதற்கான இலவச சேவை ஒன்றினை றியாத் தஃவா நிலையம் தற்பொழுது அறிமுகப்படுத்தி இருக்கின்றது.
தனிநபர்கள் (Single) இவ் இலவசப் பயணத்தில் இணைந்துகொள்ள முடியும். போக்குவரத்தும், சாப்பாடும் மற்றும் தங்குமிடமும் இலவசமாக வழங்கப்படும். ஏற்கனவே உம்ரா செய்யாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என றியாத் தஃவா நிலைய பொறுப்பதிகாரி மௌலவி ரம்ஸான் தெரிவித்தார்.
இதன்படி, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, பங்களாதேஷ், நேபாள், சிரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாட்டவர்கள் இப்பயணத்தில் இணைந்துகொள்ள இருப்பதாகவும் மௌலவி ரம்ஸான் தெரிவித்தார்.
இந்த உம்ரா யாத்திரை ரமழான் மாதத்தின் பிரதி புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் இடம்பெறும். இலங்கை, இந்தியா நாட்டவர்கள் குடும்பத்தினருடன் உம்ரா செய்ய விரும்புவோர்கள் மிகச் சிறந்த விலைக் கழிவு சலுகை அடிப்படையில் தமது குடும்ப உம்ரா பெக்கேஜ் மூலமாக இணைந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
‘ஃபெமிலி பெக்கேஜ்’ 3 நாட்களுக்கு 150 றியால்களும், 5 நாட்களுக்கு 200 றியால்களும் அறவிடப்படுகின்றன. அதிகளவான மக்கள் இந்த பெக்கேஜ்ஜை விரும்புவதால், காலதாமதமின்றி உடனடியாக பதிவு செய்துகொள்ளுமாறும், இலவசமாக உம்ராவுக்குச் செல்வோரும் நேரகாலத்தோடு றியாத் தஃவா நிலையத்தில் பதிவு செய்துகொள்ளுமாறும் கேட்கப்படுகின்றனர்.
இலவச சேவை புதன்கிழமை செல்லும் பயணம் வெள்ளிக்கிழமையும், வியாழக்கிழமை செல்லும் பயணம் அதே நாளிலும் மக்காவிலிருந்து றியாத் நகருக்குத் திரும்பும்.
Published by

Leave a comment