கொழும்பு: அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளுவதற்காக எனக்கு வழங்கப்பட்ட விசா ரத்து செய்யப்பட்டுள்ளமையானது பெரிய விடயமல்ல எனத் தெரிவித்த பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், உண்மையான பயங்கராவாதிகள் யாரென்பதை அமெரிக்கா விரைவில் புரிந்து கொள்ளும் என்றும் தேரர் தெரிவித்தார்.
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அமெரிக்காவுக்கு செல்வதற்காக திறந்த விசா 2011ம் ஆண்டு வழங்கப்பட்டது. இவ் விசா ஐந்து ஆண்டுகளுக்கு பாவிக்கக் கூடியதாகவே வழங்கப்பட்டது.
இந்த விசாவை பயன்படுத்தி அவ் ஆண்டு அமெரிக்காவின் இந்தியானா பகுதியில் பல விகாரைகளுக்கு ஞானசார தேரர் பயணத்தை மேற்கொண்டிருந்தார். இந்த விசாவே ரத்து செய்யப்பட்டுள்ளது
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் தம்மை அழைத்து அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் வீசாவை ரத்து செய்துள்ளதாக அறிவிக்க சொன்னதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஞானசார தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பாக நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இங்கு இயங்கும் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் தூண்டுதலே இதற்கு காரணமாக இருக்கும்.
பயங்கரவாதிகள் யாரென்பதை அமெரிக்கா விரைவில் புரிந்து கொள்ளும்.
பௌத்தர்கள் பயங்கரவாதிகள் அல்ல, அஹிம்சைவாதிகள் என்பதை அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்திற்கு தெளிவு படுத்தவுள்ளோம் என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார்.
அண்மையில் களுத்துறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பொதுபலசேனாசின் காடைத்தனத்தின் பின்னர் உலக நாடுகள் இலங்கை விடயத்தில் அவதானம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment