கொழும்பு: ரமழான் மாத இரவுகளில் குழப்பங்களை ஏற்படுத்த சில விஷமிகள் முயல்வதால், இது தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டுமென தகவல், ஊடக அமைச்சின் மேற்பார்வை எம். பி. ஏ. எச். எம். அஸ்வர் நேற்று பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்ககோனைக் கேட்டுள்ளார்.
இரத்மலானை பகுதியில் ஞாயிறன்று மஸ்ஜித் ஒன்று தாக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரத்தில் பலறுவெல என்ற பகுதியிலும் விஷமிகள் முஸ்லிம்கள் மீது கலாட்டா செய்துள்ளனர்.
நெல்லியகம, திக்கந்தியாவ, நேகம. கலாவெவ போன்ற இடங்களிலும் முஸ்லிம்களைக் குழப்பி கலகங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிகிறோம் என்றும் அஸ்வர் எம். பி. பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற அவசர மாநாட்டிலும் ஜனாதிபதி இத்தகைய விடயங்கள் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் அவசரப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டி இருந்தார்.
மாலைதீவு சீஷல்ஸ் நாடுகளுக்கான ராஜாங்க விஜயத்தின்போதும் நேரம் கிடைத்த வேளைகளில் நாட்டுடன் தொடர்புகொண்டு பேருவளை, அளுத்கம, தர்காநகர் புனரமைப்பு பணிகளை துரிதமாக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
புனித ரமழானில் முஸ்லிம்கள் அமைதியாக தமது மதக் கடமைகளை நிறைவேற்றுவதில் பொலிஸார் பூரணமாக ஒத்துழைக்க வேண்டுமென்றும் அஸ்வர் எம். பி. பொலிஸ் மா அதிபரை கேட்டுள்ளார்.
Published by

Leave a comment