நோன்புக் கஞ்சி இல்லாமலும், பெண்களுக்கான தொழுகை வசதிகள் இல்லாமலும் பரிதவிக்கிறது சுஹதா பள்ளிவாயல்!

suhada masjidசம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கவனம் செலுத்தவும்

– நமது நிருபர்

காத்தான்குடி: காத்தான்குடி, பொதுமைதான சதுக்கத்தில் அமைந்திருக்கும் சுஹதாப் பள்ளிவாயல் 1990, காத்தான்குடி மக்களின் உயிரிழப்புக்களை ஞாபகப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளி மஹல்லாவில் வறுமைக் கோட்டுக் கீழ் வாழும் பல குடும்பங்களும், சாதாரண வருமானங்களைப் பெறும் மக்களுமே வாழ்ந்து வருகின்றனர்.

இறைவனின் உதவியால் மிகச் சிறப்பாக இப்பள்ளிவாயல் இயங்கி வருகிறது. சிறுவர் குர்ஆன் மதர்ஸாவும் இப்பாள்ளிவாயில் இடம்பெற்று வருகிறது.

எனினும் அரசாங்கக் கட்டமொன்றிற்காக இப்பள்ளிவாயல் காணி, திட்டமிட்டு அபகரிக்கப்பட்டதன் பின்னர், குர்ஆன் மதரஸாவை நடாத்துவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பள்ளிவாயலின் ஒரு பகுதியில்தான் இந்த சிறுவர் குர்ஆன் மத்ரஸா இயங்கி வருகிறது.

இப்பள்ளிவாயலுக்கு சொந்தமான குர் ஆன் மத்ரஸா, திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு, தகர்க்கப்பட்டதால், பெண்கள் தறாவீஹ் தொழுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த வருடம், பள்ளிவாயலுக்குள் திறை அமைத்தே பெண்கள் தொழுது வந்தனர். எனினும் போதிய வசதிகள் இல்லாமல் இருந்தன.
இதுவரைக்கும் இப்பள்ளி வாயலின் குர்ஆன் மத்ரஸா கட்டட விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அசமந்தப்போக்குடையவர்களாகவே இருந்து வருகின்றனர்.

suhada masjid
சுஹதா பள்ளிவாயல் காத்தான்குடி

இதன் காரணமாக, பள்ளிவாயில் மேல் கட்டப்பட்டுவரும் (மேல் மாடியில்) பகுதியில் பெண்கள் ரமழான் இரவு நேரத் தொழுகைகளை மிகச் சிரமத்துக்கு மத்தியில் தற்பொழுது தொழுது வருகின்றனர்.
நான்கு பக்கமும் தடுப்புச் சுவர் எதுவுமில்லாமல் பெண்கள் தொழுவதால், குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இத்தொழுகைக்கு அழைத்துவர வேண்டாம் என நிர்வாகம் கேட்டுள்ளது. தவறிவிழும் அபாயம் இருப்பதால்தான் இந்த அறிவித்தலை நிர்வாகம் வழங்கி இருக்கின்றது.

இதற்கிடையில் பிரதி வருடமும் நோன்புக் கஞ்சி மஹல்லா வாசிகளுக்கு முடிந்த வகையில் வழங்கப்பட்டு வந்தது. எனினும் பள்ளிவாயலில் இடப்பற்றாக்குறையாலும், கஞ்சிக்கான பணம் திரட்டுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களாலும், இம்முறை இம்மஹல்லா மக்களுக்கு நோன்புக் கஞ்சி இல்லை.

அன்னியவர்களை அழைத்து நோன்பு திறப்பு ஏற்பாடுகள் நடாத்தும் எமது சகோதரர்கள், பொது அமைப்புக்கள் தயவு செய்து இச் சகோதரர்களின இப்தார் விடயத்தில் அதிகூடிய கவனம் செலுத்துமாறு கேட்கப்படுகின்றனர்.

இதேபோல் இடித்தகற்றப்பட்ட குர்ஆன் மத்ரஸாவுக்கு, புதிய கட்டத்தை வழங்கி, இப்பகுதி சிறார்கள் குர்ஆனைக் கற்க வழிசமைக்குமாறும் கேட்கப்படுகின்றனர்.

Published by

2 responses to “நோன்புக் கஞ்சி இல்லாமலும், பெண்களுக்கான தொழுகை வசதிகள் இல்லாமலும் பரிதவிக்கிறது சுஹதா பள்ளிவாயல்!”

  1. இப் பள்ளிவாயல் நிர்வாக விடயத்தில் சபைக்குள்ளேயே ஆயிரம் பிரச்சினை புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டு 18 மாதங்கள் ஆகியும் இது வரை வக்பு சபையில் பதிவு செய்யாமல் காலத்தை கடத்தும் தலைவர் செயலாளர் இப்படி பல பிரச்சினைகளுடன் இருக்கும் நிர்வாகம் இதை எங்கே கவனிக்க போகிறது. இவ் விடயத்தில் ஊர் தலைமைகள் கவனிக்குமா?

  2. இப்பகுதியில் எத்தனையோ படித்த இளைஞர்கள் அரசாங்க உத்தியோகத்தவர்கள் பலரும் இருந்தும் இப்பள்ளிவாயல் நிர்வாக விடயத்தில் அக்கறை இன்மையயேஈ தகுதியில்லாதவர்கள் நிர்வாகத்தில் வந்து இவ்வளவு பிரச்கினை. இது இப்பள்ளிவாயல் ஆரம்பித்ததில் இருந்து வரும் வேதனையான விடயம் தற்போதைய நிர்வாக சபை உறுப்பினர்களை பெயர் பட்டியலை ஒரு தரம் எடுத்துப்பாருங்கள் ஒருவர் இரண்டு பேரைத்தவிர மற்றவர்களுடைய தராதரம் விளங்கும் அல்லாஹ் போதுமானவன்

Leave a comment