கொழும்பு: இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா, மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன. போதைப் பொருட்களை கடத்தி செல்லும் படகுகள் இந்திய கடலோர காவல் படையினர், இந்திய கடற்படை பொலிசார் மற்றும் சுங்கத் துறையினரின் பாதுகாப்பை மீறி இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்து விடுகின்றன.
இலங்கை கடற்படையினர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் தமிழகத்தை சேர்ந்த படகுகளை சிறைப் பிடித்த பின்னர் இந்த கடத்தல் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடியிலிருந்து படகில் கடத்தி செல்லப்பட்ட 3 கோடி மதிப்புள்ள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். படகில் இருந்த 3 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இராமேஸ்வரம் பாம்பன் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளிலும் அவ்வப் போது பதுக்கி வைக்கப்பட்ட கஞ்சாவை கைப்பற்றும் அதிகாரிகள் கடத்தலில் தொடர்புடைய சிலரை கைது செய்துள்ளனர். கடந்த 2 மாதங்களில் இராமேஸ்வரம் பாம்பன் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் 600 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவதை தடுக்க தற்போது பாதுகாப்பு அதிகாரிகள் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தனுஷ்கோடியை சேர்ந்த மீனவர்கள் முத்துராஜ் நாகேந்திரன் மற்றும் இராமேஸ்வரம் வேர்கோடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் ஆகியோரை பிடித்து கடந்த 2 நாட்களாக தனுஷ்கோடி பொலிஸ் ஸ்டேஷனில் வைத்து இரகசிய விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் மூலம் இராமேஸ்வரத்தை சேர்ந்த இரண்டு பொலிஸாருக்கு கஞ்சா கடத்தும் கும்பலுடன் தொடர்பு உள்ளது என தெரிய வந்துள்ளது.
இரு பொலிஸாரும் கடத்தல் கும்பலுடன் பார்ட்னராக சேர்ந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தி வந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் தவிர மேலும் சில பொலிஸாரும் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற தகவல்களும் கிடைத்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸ் உயரதிகாரிகள் இது குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். TK
Published by
![ganja[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/ganja1.jpg?w=150&h=112)
Leave a comment