1983ல் தமிழ் சமூகம் விட்ட தவறுகளை இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகமும் விட்டுவிடக் கூடாது. வடக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நீதியரசர். சி.வி.விக்னேஷ்வரன்

viknesvaran– PMGG ஊடகப்பிரிவு

யாழ்: வடக்கு மாகாண சபையின் 11வது அமர்வு இன்று 26.06.2014 வியாழக்கிழமை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை பேரவைக் கட்டிடத்தில் அவைத் தலைவர் கௌரவ சீ.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது ஆளுந்தரப்பில் அங்கம் வகிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அங்கத்தவர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் தேசிய முக்கியத்துவம் கருதியும், இந்நாட்டின் சிறுபான்மை மக்களின் நலன்களை முன்னிறுத்தியும் அண்மையில் பேருவளை, அளுத்கமை, வெலிப்பண்ணை, தர்ஹா நகர், பாணந்துறை, தெஹிவளை, மாவனல்லை போன்ற தென்னிலங்கைப் பிரதேசங்களில் இடம்பெற்ற இனவன்முறைத் தாக்குதல்கள் மீதான கண்டணப் பிரேரணை ஒன்றினை இச்சபை நிறைவேற்ற வேண்டும் என்ற வேண்டுகோளொன்றை முன்வைத்தார்.

இதனை ஏகமனதாக ஏற்றுக் கொண்ட சபை, இன்றைய நிகழ்ச்சி நிரலின் முதலம்சமாக குறித்த கண்டனப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது. இவ்விவாதத்தினை ஆரம்பித்து உரையாற்றிய கௌரவ அ. அஸ்மின் அவர்கள் தனதுரையில் கூறியதாவது:

அண்மையில் பேருவளை, அளுத்கம, தர்கா நகர், வெலிப்பண்ணை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற இனவன்முறைத் தாக்குதல்கள் மீதான கண்டனப் பிரேரணை தொடர்பாக இச்சபையில் உரையாற்றக் கிடைத்தமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

பல இனங்கள் வாழ்கின்ற தேசமொன்றில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் எழுவதும், அவை தீர்க்கப்படுவதும் சாதாரண விடயங்களாகக் காணப்பட்ட ஒரு யுகம் இருந்தது. ஆனால் இப்போது மனித நாகரீக வளர்ச்சியின் விளைவாக இத்தகைய நிலைமைகள் மாறி மனிதர்கள் தமக்குள் பரஸ்பர விட்டுக் கொடுப்புடனும், புரிந்துணர்வுடனும் வாழ்கின்றனர். உலக வாழ்வில் உயர்வான இலக்குகளை நோக்கி நகர்வது மனித குலத்தின் உயர் பண்பாகவும் மாறியிருக்கின்றது. இதுவே இன்றைய மனித நாகரீகம்.

இலங்கையின் அரசியல் யாப்பின் மூன்றாம் அத்தியாயத்தின் 10 முதல் 17ம் பிரிவுகள் வரை இந்த நாட்டு பிரஜை ஒருவரின் அடிப்படை உரிமைகள் குறித்து தெளிவாகப் பேசுகின்றன. ஆனால் இந்த விதிகளை மீறுவதற்கு எவருக்கும் தற்துணிவு அதிகாரம் இருப்பதாக நாம் அறியவில்லை. இந்த நிலையில், கடந்த 15-06-2014 ஞாயிற்றுக்கிழமை மாலை அளுத்கம கந்தே விகாரை என்னும் இடத்தில் ஒன்று கூடிய சிங்கள பௌத்த இனவாத அமைப்புக்களின் மதத் தலைவர்கள் சிலர், அங்கே கூடியிருந்த பௌத்த சிங்களப் பொதுமக்களின் முன்னால் இந்த நாட்டின் சட்டவிதிகளுக்கு முரணாக இனவாத விஷத்தைக் கக்குகின்ற வகையில் தமது உரைகளை ஆற்றினர், அடிப்படை உரிமைகளை மீறும்படி அழைப்பு விடுத்தனர்.

‘பௌத்தர்களைப் பாதுகாக்க தலைவர் எவரும் இல்லை, இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பௌத்த சிங்களவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றனர், இவர்களுக்கு இன்று ஒரு பாடம் புகட்டாவிட்டால் சிங்களம் அழிந்தது என்று எண்ணிக் கொள்ளுங்கள். ஒரு பௌத்த துறவியின்மீதோ, அவரது காவியுடையின் மீதோ அல்ல, குறைந்தது ஒரு சிங்களவனின் மீது முஸ்லிம்கள் கை வைத்தாலும் அவர்களுக்கு என்ன நடக்க வேண்டும் என்பதை நாம் காட்ட வேண்டும்..’ என்று மிக ஆவேசமாக அங்கே உரை நிகழ்த்தப்படுகின்றது. சுருக்கமாக சட்டத்தையும் ஒழுங்கையும் மீறுவதற்கு அழைப்பு விடுத்தார்.

அதன் பின்னர் முன் அனுமதி பெறப்படாத விதத்தில் இக்கூட்டத்திலிருந்து உணர்வுகள் சூடேற்றப்பட்ட பௌத்த சிங்கள மக்கள் ஊர்வலமாக முஸ்லிம் பிரதேசங்களை நோக்கி ஊர்வலமாகச் செல்கின்றனர். அவ்வாறு சென்றவர்கள் தங்களுடைய ஆத்திரம் அடங்கும் வரை மிக மோசமான வார்த்தைகளால் முஸ்லிம்களைத் தூஷிக்கின்றார்கள். அவர்களுடைய உடமைகளுக்குச் சேதம் ஏற்படுத்துகின்றார்கள். இதன் மூலம் அங்கு ஒரு கலவரம் வலிந்து உருவாக்கப்படுகின்றது.

பொலிஸாரும், விஷேட அதிரடிப்படையினரும் பிரசன்னமாகி இருந்த வேளையில் அவர்களின் முன்னிலையிலேயே இந்த இனவெறித் தாக்குதல்கள் அனைத்தும் நடைபெற்றன. பொலிஸாரிடம் பொதுமக்கள் பாதுகாப்புக் கோரிய பல சந்தர்ப்பங்களில் அவை அலட்சியமாக மறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்அனர்த்தத்தினால் 4 பேர் மரணமடைந்தனர். 120 வியாபார நிலையங்கள், 180 வீடுகள், 2 ஆடைத் தொழிற்சாலைகள், 1 கோழிப்பண்ணை, 1 ஆட்டுப்பண்ணை, ஏராளமான வாகனங்கள் என்பனவும் தீவைத்தும், உடைத்தழித்தும் முற்றிலுமாகச் சேதமாக்கப்பட்டன. இதனிடையே வீடுகள், கடைகள் தோறுமாகப் புகுந்த காடையர் கும்பல்களால் அள்ளிச் செல்லப்பட்ட பல மில்லியன் பெறுமதியுடைய கொள்ளைப் பொருட்கள் அந்த மக்களின் வாழ்க்கைச் சேமிப்பை அடியோடு துவம்சித்திருக்கின்றது.

இவ்வளவும் நடந்து ஓய்ந்த பின்னரே ஜனாதிபதி அவர்கள் குறித்த இடத்திற்கு விஜயம் செய்தார். பாதுகப்பை பலப்படுத்தும்படி உத்தரவிட்டார், நஷ்டஈடுகள் வழங்கப்படும் என்றார், ஆனால் இனவாதத்தை தூண்டிய குறித்த பௌத்த தேரர் மீதான் சட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் வாய் திறக்கவில்லை.

அவரது வருகையின் பின்னரும் ஒரு வார இடைவெளியில் கடந்த 21ம் திகதி அதிகாலையில் பாணந்துறை காவல் நிலையத்திற்குச் சமீபமாக அமைந்திருந்த நோ லிமிட் எனும் முஸ்லிம் வர்த்தகரின் பாரிய ஆடையகம் தீ வைக்கப்பட்டு முற்றாக எரித்து அழிக்கப்படுகின்றது. மீண்டும் பதற்றமான ஒரு சூழ்நிலை பாணந்துறைப் பிரதேசத்திலும் உருவாக்கப்படுகின்றது.

எனவே, இந்த இனவன்முறைகள் தொடர்பாக பின்வரும் வாசகம் அடங்கிய கண்டனப் பிரேரணையை நான் இச்சபையில் முன்மொழிகின்றேன். இச்சபையிலுள்ள கௌரவ உறுப்பினர்கள் அனைவரையும் இப்பிரேரனையில் இணைந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

பிரேரனை வாசகம் வருமாறு: அண்மையில் பேருவளை, அளுத்கம, தர்கா நகர், வெலிப்பண்ணை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற இனவன்முறைத் தாக்குதல்களைக் கண்டிப்பதோடு, நாட்டில் பரவலாக நடைபெறுகின்ற இனவாத அடிப்படையிலான தாக்குதல்களுக்கும் நாம் எமது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம், அத்தோடு இத்தகைய இனவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற தீவிரவாத அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரையும் சட்டமா அதிபரையும் இந்த சபை வேண்டிக் கொள்கின்றது.

அவரது உரை மற்றும் பிரேரணை முன் மொழிவையடுத்து வட மாகாண சபையின் ஆளுங்கட்சி சார்பாக இலங்கை தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களான கௌரவ.கேசவன் சயந்தன், கௌரவ இம்மானுவல் ஆர்னலட், கௌரவ. இந்திரராசா, கௌரவ ஆனந்தி சசிதரன், கௌரவ சுகிர்தன், , டெலோ அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களான கௌரவ விந்தன் கனகரத்தினம், கௌரவ. சிவாஜிலிங்கம், புளொட் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். சபையின் எதிர்க்கட்சி சார்பாக எதிர்க்கட்சித் தலைவரான கௌரவ தவராசா அவர்களும் கருத்துக்களை முன்வைத்தார்.

இவர்கள் அனைவரது கருத்துக்களிலும் இந்த வன்முறைத் தாக்குதலானது, முன்கூட்டியே நன்கு திட்டமிட்ட அடிப்படையிலும், அரசாங்கத்தினதும், அரச காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் போன்றோரின் முழுமையான அனுசரணையுடனுமே நடைபெற்றிருப்பதாக வலியுறுத்தப்பட்டன.

மேலும், தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலும் கடந்த காலங்களில் பலதரப்பட்ட முரண்பாடுகள் காணப்பட்டன. வன்முறைத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. வடக்கிலிருந்தும் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். இத்தகைய பல துன்பகரமான நிகழ்வுகள் நிகழ்ந்த போதிலும் யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னாலுள்ள இன்றைய காலகட்டத்தில் அத்தகைய கசப்பான நிகழ்வுகள் அனைத்தையும் தமிழ் சமூகம் நன்கு உணர்ந்துள்ளதுடன், அத்தகைய முரண்பாடுகளால் சிறுபான்மைச் சமூகங்கள் மேலும் பலவீனப்பட்டிருப்பதையும், அவ்வாறான பகைமை உணர்வும், முரண்பாடுகளும் தொடர்ந்தும் நீடிப்பதென்பது ஆரோக்கியமானதாக இருக்க முடியாது என்பதையும் இரு சிறுபான்மைச் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகள் யாவும் பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டு, களையப்பட்டு, அதனால் ஏற்பட்ட வடுக்கள் ஆற்றுப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்களையும் உறுப்பினர்கள் இந்த விவாதத்தின்போது வெகுவாக வலியுறுத்தியும் உரையாற்றினர்.

சுமார் ஒன்றரை மணித்தியாலம் நீடித்த இவ்விவாதத்தில் பேசிய முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டதாவது: 1983 ஆம் ஆண்டு ஆடிக் கலவரத்தில் தமிழ் இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவெறித் தாக்குதலுக்கு ஒப்பான ஒரு தாக்குதலாகவே இதனை நாம் நோக்க வேண்டியிருக்கிறது. அப்போதிருந்த அதேமாதிரியான சூழ்நிலை, திட்டம் மற்றும் அரச தரப்பு அனுசரணை என்பன தென்னிலங்கை முஸ்லிம்கள் மீதான இந்தத் தாக்குதலின்போதும் காணப்பட்டது. எனவே, எமது சகோதர சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலையும் நாம் எந்தளவிற்கும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. எதிர்காலத்திலும் கூட இனவாத சக்திகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மேலும் ஒரு பாரிய வன்முறைத் தாக்குதலுக்கும் தயாராகக் கூடும். 1983ல் தமிழ் சமூகம் விட்ட தவறுகளை இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகமும் விட்டுவிடக் கூடாது. எனவே இந்நாட்டின் சிறுபான்மையினராகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்யோசனையோடு செயற்பட வேண்டும்.

பேரினத்தின் புறத்திலிருந்து நாம் எதிர்கொள்ளும் வன்முறைத் தாக்குதல்களை கையாள்வது குறித்தும், நமக்கிடையேயுள்ள கருத்து முரண்பாடுகளைக் கையாள்வது குறித்தும் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல்கள் விரைவாகத் தொடங்கப்பட வேண்டும். இரண்டு சமூகங்களும் ஒன்றிணைந்து கூட்டான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும். அதுவே நமக்கும், நமது சந்ததியினருக்கும் காத்திரமான நடவடிக்கையாக அமையும். நடைபெற்ற தென்னிலங்கை வன்முறைத் தாக்குதல்களில் பாதிப்புக்குள்ளான அனைவருக்கும், உயிரிழந்தவர்களின் முடும்பத்தினருக்கும் வடக்கு மாகாண சபை ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது என்று குறிப்பிட்டார்.

வாதத்தின் இறுதியில் கருத்துப் பரிமாற்றங்களை நிறைவு செய்து உரையாற்றிய அவைத் தலைவர் கௌரவ சீ.வி.கே சிவஞானம் அவர்கள் கருத்துரைக்கையில், பேருவளை, அளுத்கம, தர்கா நகர் போன்ற பிரதேசங்கள் முஸ்லிம் சமூகத்தின் பூர்வீகத்தை உறுதிப்படுத்தும் பிரதேசங்களாகும். பாக்கிர் மாக்கார் போன்ற மூத்த அரசியல்வாதிகளும், நளீம் ஹாஜியார் போன்ற தேசியக் கொடை வள்ளல்களும் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, வாழ்ந்த இடங்களாகும். இந்த வன்முறைச் சம்பவங்களினால் வெகுவாகப் பாதிப்புற்றிருக்கும் தென்னிலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு வடக்கு மாகாண சபை ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வது மாத்திரமன்றி அவர்களுக்காக என்றும் நாம் குரல் கொடுக்கவும் செய்வோம் என்றும் குறிப்பிட்டார்.

இறுதியாக இக்கண்டனப் பிரேரணை கட்சி பேதமின்றி சபை உறுப்பினர்கள் அனைவரது ஆதரவுடனும் இலங்கையில் சிறுபான்மைச் சமூகத்தினரின் ஆட்சிப் பொறுப்பிலுள்ள ஒரேயொரு மாகாண சபையான  வடக்கு மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Published by

One response to “1983ல் தமிழ் சமூகம் விட்ட தவறுகளை இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகமும் விட்டுவிடக் கூடாது. வடக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நீதியரசர். சி.வி.விக்னேஷ்வரன்”

  1. TNA CHIEF MINISTER VIKNESWARAN AVARKALIN ANUPAVAPOORVAMAANA KARUTHTHUKKALAI VARAVEATKINROAM>>>>>>>>>>>>>>>

Leave a reply to satomansoor Cancel reply