– றஹ்மத்துல்லா முஹம்மத் இர்ஷாத்
கொழும்பு: இலங்கையின் பேருவளை மற்றும் அளுத்கம பகுதியில் இடம் பெற்ற முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் அக்கறையற்ற முறையில் செயற்படுவது தெட்டத்தெளிவாகிறது.சிங்கள இனவாத காடையர்களால் நன்கு திட்டமிடப்பட்ட இந்த சம்பவம் தொடர்பில் ஜக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தில் முன்வைத்த உரை அதற்கு போதுமானது.
இலங்கையினை பொறுத்த வரையில் இன்று சட்டம், ஒழுங்கு என்பது பக்கச்சார்பானதாகவே இருக்கின்றது.யுத்தத்தை வெற்றிக் கொண்ட மஹிசாந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பினை சரியாக செய்யவில்லை என்பதை கடந்த சில காலங்களாக இலங்கையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் சிங்கள பெருமபான்மை இனவாத அமைப்பினரின் செயற்பாடுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.
இந்த துர்பாக்கிய சந்தர்ப்பத்தில் இருந்து இனியும் முஸ்லிம்கள் பாதுகாக்கப்படுவார்களா ? என்பது கேள்விக்குரியானது.இந்த அரசாங்கத்தை நம்பி இனியும் சிறுபான்மை மக்கள் பாதுகாப்புக்காக நம்பிக்கை கொள்ள முடியாது என்ற உண்மையினை நாட்டின் ஜனாதிபதி முதல் பொலீஸ் மா அதிபர் வரை வெளியிட்டுவரும் கருத்துக்கள், அரசாங்கத்திற்கு வக்களாளத்து வாங்கும் அமைச்சர்களால் தெரிவிக்கப்பட்டுவரும் பேச்சுக்களில் பிரகாசிக்கின்றது.
அதே வேளை முஸ்லிம்கள் தேர்தல் காலங்களில் பிளவுபட்டு பெரும்பான்மை அரசியல் தலைமைகளை ஆதரிப்பதும், அவர்களின் பின்னால் செல்வதும், அவர்களுக்கு சேவகம் செய்வதும் வறையரைக்குள் இல்லாத ஒன்று. நாம் விடும் தவறுகளால் தான் எமது அரசியல் பலம் இழக்கப்படுகின்றது.இந்தகாரணம் இந்த தருணத்தில் தேவையில்லை என்றாலும், இது எதிர்காலத்தில் தேவையானது என்பதை மனதில் கொள்வது அத்தியவசியமானதாகும்.
பேருவளை, மற்றும் அளுத்தகம பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இனத்தாக்குதலின் பிண்ணணியில் பாதுகாப்பு தரப்பு இருக்கின்றது என்பது ஒரு புறம் மறுபுரத்தில் இந்த இனவாதத்தை இயக்குவதும் இதே தரப்பு என்பதும் தெளிவாகியுள்ளது.
தாக்குதலின் போது கைகட்டி பார்த்துக் கொண்டிருந்த சாட்சிகள் அதிகம் அதிகம் இருந்த போதும், பாதுகாப்பு தரப்பின் உயர்மட்டம் அதனை அழட்டிக் கொள்ளாத நிலையினையே காணமுடிகின்றது.பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டும், காயங்கள் ஏற்படுத்தப்பட்டும், சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள அழிவுகள் பலகோடியினை தாண்டிய நிலையிலும், அரசாங்கம் இம்மக்களுக்கு வழங்கப்போகும் நஷ்டயீடுகள் எவ்விதத்திலும் போதுமானதாக இருக்காது.
இந்த நிலையில் இந்த அரசாங்கத்தின் முஸ்லிம் விரோத போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்ற நிலையில் நாளை என்ன நடக்கும் என்று அச்ச சூழ்நிலையில் வாழும் மக்களின் அன்றாட தேவைகள் மிகவும் முக்கியமானதாகும்.
இந்த மக்களுக்கு உள்ளுர் மக்களும் புலம் பெயர்ந்து வாழும் இஸ்லாமியர்களும் தங்களது உதவிகளை பெரும் எண்ணிக்கையில் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளும் முன் வைக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றதை காணணமுடிகின்றது.
இது இவ்வாறு இருக்கின்ற போது இலங்கைக்கு எதிராக ஆரம்பிக்கப்படவுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விசாரணையின் முக்கிய கருவாக இந்த இனப் பிரச்சினை முக்கிய வடிவம் பெறவுள்ளது.அது இவ்வாறு இருக்க சிறுபான்மை மக்களை பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புபடுத்தி உண்மைக்கு புறம்பமான அபத்தமான பிரசாரத்தினை ஜாதிக ஹெல உரமய என்கின்ற மற்றுமொரு பொதுபலசேனாவின் இரகசிய அமைப்பு முன்னெடுத்துவருகின்றது.
அரசாங்கத்தின் அமைச்சராக இருக்கின்ற பாட்டலி சம்பிக்க ரணவக்க கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இலங்கை ஊடகங்களில் தோன்றி வெளியிடும் கருத்துக்கள் இவரது இனவாதத்தின் உச்சத்தை காட்டுகின்றது.இலங்கையில் ஜிஹாத் அமைப்பு இருப்பதாகவும், அதே போல் அல்-கைதா அமைப்புடன் இலங்கை முஸ்லிம்களுக்கு தொடர்பிருப்பதாக பகிரங்கமாக இவர் கூறியது.இலங்கை மக்கள் மத்தியில் பெரும் கவலையினை தோற்றுவித்துள்ளது.
கடந்த 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு எதையும் செய்யாத பாட்டலி சம்பிக்க என்னும் இனவாதியின் கடும் போக்கு கருத்து மேலும் சிங்கள மக்களை ஆத்திரமடையச் செய்யும் ஒன்றாகவே பார்க்க வேண்டியுள்ளது.பொது பலசேனாவின் ஞானசார தேரர் பகிரங்கமாக சிங்கள மக்களை உசுப்பேத்தும் வேளையினை செய்வது போன்று ஜாதிக ஹெல உருமய வேறு திசையில் முஸ்லிம்கள் மீது பதம் பார்க்கும் பிரயத்தனத்தினை செய்கின்றது.
குறிப்பாக இலங்கையில் காணப்படும் அமைப்புக்களில் இவ்விர அமைப்பும் தடை செய்யப்பட வேண்டும் என்பதில் சர்வதேசம் தேவையான காரணங்களை பெற்றுள்ளது.இலங்கையின் தற்போதைய சூழலை பொறுத்த வரையில் அரசுக்கு பெரும் நெருக்கடியானது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தக்களுக்கும் இடமில்லை என்பது தெளிவாகின்றது.
அரசுக்குள்ளும், சர்வதேசத்திலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசுக்கு பெரும் சவால்களை காத்திருக்கும் நிலையில் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டும், பறிக்கப்பட்டும் வருகின்றமைக்கு அண்மையில் இடம் பெற்ற பேருவளை சம்பவம் எடுத்துரைக்கின்றது.
அதே வேளை அரசுக்கு வழங்கும் ஆதரவு தொடர்பில் சர்வதேச நாடுகள் பல ஜனாதிபதிக்கு தமது கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளது.இது இன்னும் நிலையினை சிக்கலுக்குள்ளாக்கும் என்பது பகிரங்கமான உண்மை.இதனை அரசாங்கத்தின் மற்றுமொரு அமைச்சரான விமல் வீரவன்சவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு நெருக்கடிக்கு மேல் நெறுக்கடிகளுக்கு ஆட்பட்டுவரும் இலங்கை அரசாங்த்தினை அதிலிருந்து மீட்பது தொடர்பில் ஜனாதிபதி சில நடவடிக்கைகளை எடுத்த போதும், அது காத்திரமானதாகவும் போதுமானதாகவும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.இலங்கை முஸ்லிம்கள் மறைக்கப்பட்ட ஒரு சமூகமாகவே இற்றைக்கு சில மாதங்களுக்கு முன்னர் இருந்துவந்தனர்.
ஆனால் அண்மைக்கால பொதுபலசேனா கூட்டின் தாக்குதல்கள மற்றும் இன்னோரன்ன இஸ்லாமியர்களுக்கு எதிரான போராட்டங்கள் தற்போது முஸ்லிம் நாடுகளிள் பார்வையினை ஈர்த்துள்ளது என்று கூற முடிகின்றது.அரசன் அன்றே கொள்வான் ஆனால் தெய்வம் நின்றே கொள்ளும் என்ற பழமொழிக்கொப்ப பாதிக்கப்பட்ட சமூகத்தின் கையேந்தல் இன்று இந்த அரசாங்கத்திற்கு சோதணைகளை தொடராக கொண்டுவந்துள்ளது.
இதிலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்கு முடியுமா ? என்பது தொடர்பில் எதிர்வு கூறல்களுக்கு இடமில்லை.எவ்வாறு விடுதலைப் புலிகளை அரசு தோற்கடித்து அதன் பின்னர் தற்போதும் அதனது துாவானம் இருக்கின்றதோ அதே போன்று இந்த பொதுபலசேனாக்கல் உள்ளிட்ட அமைப்புக்களுக்கு தடை கொண்டுவந்த போதும் வேறு பெயர்களில் அதன் செயற்பாடு இருக்கும் என்பது உண்மையானதாகும்.
ஜனாதிபதி கடுமையான முறையில் எச்சரிக்கைவிடுத்தும் தொடர்ந்தும் பள்ளிவாசல்களும், முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீதும் இன்றும் தாக்குதல்களை பெரும்பான்மையில் உள்ள கடும் போக்கு இனவாதிகள் செய்கின்றனர்.இதனை தடுப்பதற்கு குற்றிவாளிகளை கைது செய்ய முடியாமல் உள்ளது என்று இயலாதத்தன்மையினை வெளிப்படுத்துவதை விட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு கடும் தண்டணைகளை வழங்குகின்ற போது இந்த குற்றவாளிகள் அடங்கிவிடுவார்கள்.
Published by

Leave a comment