வவுனியா: அளுத்கம சம்பவத்தைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று வெள்ளியன்று பிற்பகல் வவுனியா நகர பள்ளிவாசல் முன்னிலையில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை நடத்தவிடாமல், பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களைத் துரத்தியடித்துள்ளனர்.
நண்பகல் தொழுகையை முடித்துக் கொண்டு முஸ்லிம்கள் பள்ளிவாசலைவிட்டு வெளியில் வந்தபோது, அவர்களுடன் இணைந்து பள்ளிவாசலுக்கு எதிரில் திரண்ட சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அளுத்கம சம்பவத்தைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாகவும் அவர்கள் கோசங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவது குறித்து முன்கூட்டியே அறிந்திருந்திருந்த நிலையில், காவல்துறையினர் நகரின் பல இடங்களிலும் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்திருந்த பதாதைகளைப் பறித்தெடுத்த பொலிசார், அவர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட விடாமல் தடுத்து அங்கிருந்து இழுத்து அப்புறப்படுத்தினர்.
பொலிசாரும் ஆர்ப்பாட்டக்காரர்களும் இழுபறிபட்ட போதிலும், அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை.
இதேவேளை, தொழுகையை முடித்துக் கொண்டு வெளியில் வந்த முஸ்லிம்கள் சிலர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து கோசங்களை எழுப்பிய போதிலும் பலர் அமைதியாக வேடிக்கை பார்த்தனர். அருகில் இருந்த தமது வர்த்தக நிலையங்களைத் திறந்து அவர்கள் வர்த்தக நடவடிக்கைககளில் ஈடுபட்டிருந்தனர்.




Leave a comment