களுத்துறை: நடைபெற்ற தென்னிலங்கை வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் வதிவிடங்களுக்கு நேரடியாகச் செல்லும் பொலிசார், அங்கு பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களிடம் ஏற்பட்டிருக்கும் சேதத்தின் உண்மையான பெறுமதியைக் குறிப்பிடாமல் குறைவான பெறுமதியைக் குறிப்பிட்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்து கையொப்பங்களைப் பெற்று வருவதாக தற்போது களத்தில் நின்று கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அரசியல் தலைமைத்துவ சபை பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அரசியல் தலைமைத்துவ சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர். நஜா மொஹமட் இதுபற்றி தெரிவித்துள்ளதாவது:
இன்று (18.06.2014) புதன்கிழமை பொலீசார் வன்முறைகளில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று முறைப்பாடுகளைப் பதிவு செய்கின்றனர். பொதுமக்களும் தாம் பொலிஸ் நிலையங்களுக்குச் செல்வதிலுள்ள சிரமங்களைக் கருத்திற் கொண்டு பொலிசாரின் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைத்து வருகின்றார்கள். ஆனால் பொலிசார் இவர்களின் முறைப்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் சேதங்களின் உண்மையான பெறுமதியைக் குறிப்பிடாமல் மிகவும் குறைவான தொகைகளையே பதிவு செய்து வருவதை எம்மால் நேரடியாக அவதானிக்க முடிந்தது.
முற்று முழுதாக எரிந்து சேதமடைந்த ஒரு வீட்டிற்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு பல மில்லியன்களாக இருக்கும் நிலையில், பொலிசார் அந்த வீட்டிற்கு வெறும் 150,000 ரூபாவே சேதம் ஏற்பட்டிருப்பதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டு அந்த வீட்டு உரிமையாளரிடம் கையெழுத்தும் பெற்றுச் சென்றுள்ளனர். இது பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களுக்கு அரசாங்கம் செய்கின்ற பாரிய துரோகமாகும்.
எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் தமது முறைப்பாடுகளையும், ஏற்பட்ட சேதம் பற்றிய விவரங்களையும் பொலிசார் உரிய முறையில் சரியாகப் பதிவு செய்கின்றார்களா? என்பதில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். எமது முன்னணியின் உறுப்பினர்கள் தற்போது களத்தில் நின்று இவ்வன்முறையில் சேதமடைந்த வீடுகள், கடைகள், வாகனங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் போன்றவற்றை பொதுமக்களின் கருத்துக்களுடன் ஆவணமாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். எமது முயற்சிகளுக்கு சகல பொதுமக்களும், பிரமுகர்களும் ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.
இக்குழுவில் வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment