தர்ஹாநகர்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான அஷ்ஷெய்க் MR.நஜா முஹம்மத் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின் ஆகியோர் மேற்கொண்டிருந்த அளுத்கமவிற்கான கள விஜயத்தில் தற்போது தர்கா நகரிற்குள் பிரவேசித்துள்ளனர்.
மேற்படி பிரதேசத்தில் எங்குபார்த்தாலும் பேரினவாதிகளின் கோரத்தாண்டவத்தின் காரணமாக பள்ளிவாயல்கள், வர்த்தக நிலையங்கள், கடைகள், வீடுகள் என பல்வேறு வகையான அழிவுகளையே பார்க்கக் கூடியதாகவுள்ளதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்தார்.
இவ்வாறான நாசகார வேலைகளின் தடயங்களை அழித்து விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் இவ்வாறான முக்கிய தடையங்களாகவுள்ள இவ்வழிவுகள் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் எனவும், அவை கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிசாரின் ஒத்துழைப்போடு செய்யப்படுதல் வேண்டும் எனவும் அவர் அப்பகுதி மக்கள் மற்றும் ஊர் தலைவர்களிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனவே இவ்வாறான தடையங்களாகவுள்ள இவ்வழிவுகளை உடனடியாக துப்பரவு நடவடிக்கைகளை மேற்கொண்டு அழித்துவிட வேண்டாம் என பொதுமக்களிடத்தில் வினயமாகக் கேட்டுக்கொண்டுள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை தெரிவிக்கின்றது.
அதேவேளை மேற்படி பிரதேசங்களை அண்டியுள்ள பகுதிகளிலுள்ள சிங்கள மக்கள் மத்தியில் ‘முஸ்லிம்கள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடவடிக்களை மேற்கொள்ளக்கூடும் என்ற வகையான வதந்தி பரவியுள்ளது. இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a comment