அளுத்கம முஸ்லிம்கள் மீதான வன்முறைகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் -​ நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

PMGG-Logo[1]– PMGG ஊடகப்பிரிவு

நேற்றைய தினம் அளுத்கம, தர்ஹா நகர் மற்றும் வேருவளை பிரதேசங்களில் முஸ்லிம்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் ‘நல்லாட்சிக்கான தேசிய முன்னணி’ (NFGG) ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதோடு இதற்கெதிரான வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது.

இந்த வன்முறைகளின் பின்னணியினையும், அவை நிகழ்த்தப்பட்டுள்ள விதத்தினையும் பார்க்கின்றபோது இது எதிர்பாராத விதமாக நடந்து முடிந்த சம்பவமாகவன்றி நன்கு திட்டமிட்ட முறையில் நிகழ்த்தப்பட்ட இனவாத வன்முறையாகவே அமைந்துள்ளது.

கடந்த சில தினங்களாக அளுத்கம பிரதேசத்தில் பதட்டமான ஒரு நிலைமை நிலவிய சூழ்நிலையில் நேற்றைய தினம் பொது பல சேனா உள்ளிட்ட இனவாதக் குழுக்கள் சிலவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டமும், முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை நேரடியாகவே தூண்டும் வகையில் அங்கு நிகழ்த்தப்பட்ட உரைகளுமே நேற்றிரவு நடாத்தப்பட்ட முஸ்லிம்கள் மீதான வன்முறைக்கான ஆரம்பமாக அமைந்திருக்கின்றன.

கடந்த இரண்டு வருடங்களாக BBS, ராவண பலயே போன்ற அமைப்புக்களினால் முஸ்லிம்களுக்கு எதிராக பரவலாக மேற்கொள்ளப்பட்டு வரும் வெறுப்புணர்வு பிரச்சாரமும் இனவாத நடவடிக்கைகளும் நாட்டின் இனநல்லுறவுக்கும் அமைதிக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் பாதகமான சூழ்நிலையினை தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளன.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு இனங்களுக்கிடையிலான நல்லுறவின் அடிப்படையில் நிரந்தர சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டியது தேசத்தின் தலையான முன்னுரிமையாக மாறியிருக்கும் நிலையில் இது போன்ற குழுக்களின் இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு நாட்டின் சகல இன மத தரப்பு தலைவர்களும், புத்தி ஜீவிகளும் வினயமாக அரசாங்கத்திடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

ஆனால், அரசாங்கமோ அல்லது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட வேண்டிய பொறுப்பினைக் கொண்ட பாதுகாப்புப் பிரிவினரோ காத்திரமான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கவில்லை.

இந்த நிலையிலேயே அளுத்கமயிலும் பதட்டமான ஒரு சூழல்நிலவிய சந்தர்ப்பத்தில் BBS உள்ளிட்ட இனவாதக்குழுக்களினால் நேற்றைய தினம் பொதுக்கூட்டமொன்று பாரிய அளவில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனை அறிந்த முஸ்லிம் சமூக தலைமைகளும் ஏனைய சமூகப் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தை நடாத்த அனுமதிக்கப்பட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் எனும் அடிப்படையில் இதனை தடுத்து நிறுத்துமாறு அரசாங்கத்திடமும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடமும் மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

எனினும், சமாதானத்தை இலக்காகக் கொண்ட இக்கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டு இனவாத வன்முறைகளை இலக்காகக் கொண்ட குறித்த பகிரங்கக்கூட்டம் அளுத்கம நகரில் நடைபெறுவதற்கான அனுமதியும் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை நேரடியாகவே தூண்டும் உரைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்தே நேற்றைய தினம் நடந்தேறிய கொடூரமான வன்முறைகள் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன.

இதுவரை கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏறத்தாள 15 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.60 பேரளவில் காயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஐந்து பள்ளிவாயல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பல வர்த்தக ஸ்தாபனங்களும் கடைகளும் தீக்கிரையாகியுள்ளன.

நேற்று மாலை தொடங்கிய வன்முறைகள் இன்று அதிகாலை வரை நடந்தேறியுள்ளன. பூரணமான அரச ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த சூழ்நிலையிலேயே இவையனைத்தும் நடந்தேறியுள்ளன. இந்நாட்டின் வரலாற்றில் சிறுபான்மை சமூகங்கள் மீது நடாத்தப்பட்ட மற்றுமொரு இனவாத வன்முறையாகவே அளுத்கம சம்பவம் வரலாற்றில் பதிவுசெய்யப்படும்.

சர்வதேச ரீதியில் மனித உரிமை விசாரணைகளுக்கும் இன்னும் பல சவால்களுக்கும் நம் நாடு முகம் கொடுத்திருக்கின்ற இக்கட்டான சூழ்நிலையில் நாட்டின் நற்பெயருக்கு இதுபோன்ற சம்பவங்கள் படு மோசமான சேதத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

பல்கலைக் கழக மாணவர்களினாலும், தொழில் சங்கங்கள் போன்ற வற்றினாலும் அமைதியான முறையில் நடாத்தப்படும் கூட்டங்களையும், ஊர்வலங்களையும் “அமைதியைச் சீர்குலைக்கும்” எனக் காரணம் காட்டி தடுத்து நிறுத்துகின்ற பொலிஸார் நேரடியாகவே வன்முறையைத் தூண்டும் நேற்றைய பொதுக்கூட்டத்தை நடாத்த அனுமதித்திருக்கிறார்கள். அது போலவே, முழுமையான ஊரடங்குச் சட்டம் அங்கு அமுல்படுத்தப் பட்டிருந்த நிலையிலும்கூட வன்முறையை தடுத்து நிறுத்துவதற்கு தவறியிருக்கிறார்கள்.

எனவே, முஸ்லிம்கள் மீதான இந்த மிலேச்சத்தனமான வன்முறைகளுக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமும், பாதுகாப்புத் தரப்பினருமே ஏற்க வேண்டும் என நாம்வலியுறுத்துவதோடு தமது அடிப்படைக் கடமையை அவர்கள் செய்யத் தவறியமை தொடர்பில் வன்மையான கண்டனத்தையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.

நேற்றைய தினம் அளுத்கம பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகள் களுத்துறை மற்றும் தெஹிவளை பகுதிகளுக்கு பரப்புவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது அனுமதிக்கப்பட்டால் நம் நாட்டின் ஒட்டு மொத்த அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் படுமோசமான சேதங்களை அவை ஏற்படுத்தும் என்பதனால் உடனடியாக இவற்றை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்த விரும்புகின்றோம். அத்தோடு நேற்றைய வன்முறைச் சம்பவங்களை தூண்டியவர்களையும் அவற்றை முன்னின்று நடாத்தியவர்களையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்துவதன் மூலம் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுத் தரும் என்பதனை நிரூபிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

அதே போன்று அளுத்கம, பேருவளைப் பிரதேசத்தில் பாரபட்சமின்றி சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டி சுமூக நிலைமையினை மீளக் கொண்டு வருமாறும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ ரீதியான, சட்ட ரீதியான, மற்றும் பொருளாதார ரீதியான நிவாரணங்களை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கவிரும்புகின்றோம்.

Published by

Leave a comment