மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது

 

abuse2_1633504c[1]மும்பை: மஹாராஷ்டிர மாநிலத்தின் மும்பையில் உள்ள ராஜிவ் காந்தி மருத்துவமனை மற்றும் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். டாக்டர் ஷைலேஷ்வர் நடராஜன் என்ற மருத்துவக் கல்லூரி பேராசிரியரை மும்பையின் தாணே பகுதி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் தாணே காவல் துறை ஆணையருக்கும் ராஜிவ் காந்தி மருத்துவமனை மற்றும் கல்லூரியின் முதல்வருக்கும், பாலியல் தொந்தரவு தொடர்பில் அனாமதேய புகார்கள் வந்ததை அடுத்து இந்த விவகாரம் வெளியே வந்தது. கல்லூரி மேலாண்மைக்கு பேராசிரியர் நடராஜன் குறித்த புகார் வந்தவுடன் இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள கல்லூரி தரப்பில் ஒரு உள் விசாரணை குழு அமைக்கப்பட்டது.

மாணவிகளை மார்பு புற்றுநோய்க்கான சுய பரிசோதனைகளை வகுப்பறையில் அனைவருக்கும் முன்னர் செய்து காட்டுமாறு அந்த பேராசிரியர் கட்டாயப்படுத்துவார் என்றும், பரிசோதனைகளுக்கு உதவுவது போல முறைகேடாக அவர்களை அவர் தொடுவார் என்றும் அவர் மீது 30 மாணவிகள் குற்றஞ்சாட்டினர்.

இந்த பாலியல் தொந்தரவு விவகாரம் தொடர்பில் அந்த கல்லூரியின் உள் விசாரணை குழு நடத்திய விசாரணையின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் கடந்த மே மாதம் 30ஆம் தேதி அந்த கல்லூரி முதல்வர் தாணே காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

பேராசிரியர் கைது

கடந்த செவ்வாய்க்கிழமையன்று மதியம் இரண்டு மணி அளவில் அம்மாநில மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் ஜிதேந்திர அஹ்வாத் அந்த கல்லுரிக்கு சென்று, மாணவர்களிடம் பேசியுள்ளார். அதையடுத்து காவல் துறையனரை சந்தித்த மாநில அமைச்சர் இந்த கடுமையான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள போதும், காவல் துறை ஏன் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சரின் வருகைக்குப் பிறகு அந்த கல்லூரி முதல்வர் சொய்டி மேத்ரா அளித்திருந்த புகார் தொடர்பில் நடராஜன் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 354இன் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, நேற்று செவ்வாய்கிழமை நடராஜன் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய அம்மாநில மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் ஜிதேந்திர அஹ்வாத், இது கடுமையான குற்றம் என்றும், இது தொடர்பில் மருத்துவக் கல்வித்துறை விசாரணை செய்து தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

இது தொடர்பில் பேசிய அம்மாநில மூத்த காவல் துறை அதிகாரி ஆர்.கே.மஹாலேகர்,‘அந்த கல்லூரி முதல்வர் புகார் அளித்ததை அடுத்து நடராஜன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தோம். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 354இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரியின் விசாரணைக் குழுவின் கண்டுபிடிப்புகளையும், மாணவர்களின் வாக்குமூலத்தையும் பார்த்த பிறகு, தேவைப்பட்டால் கூடுதல் சட்டபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.

– BBC

Published by

Leave a comment