தேசிய ரீதியில் சமூக ஒற்றுமை மற்றும் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான செயலமர்வு

ccc– பழுலுல்லாஹ் பர்ஹான்

தெஹிவளை: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஒருங்கிணைப்பிற்கும் ஒத்துழைப்பிற்குமான கவுன்ஸிலின் (Council for Cooperation and Coordination- CCC) ஏற்பாட்டில் தேசிய ரீதியில் சமூக ஒற்றுமை மற்றும் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான செயலமர்வு கடந்த 08.06.2014 அன்று தெஹிவளை முஹைதீன் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பத்வா குழு உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பிற்கும் ஒத்துழைப்பிற்குமான கவுன்ஸிலின் அங்கத்தவர்கள், ஜம்இய்யதுல் உலமாவின் அனைத்து மாவட்டக் கிளைகளிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட ஆலிம்கள், துறைசார்ந்தவர்கள், விஷேட பிரதிநிதிகள் என 250க்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்வு மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 2.00 மணி வரை நடைபெற்றது.

கிராஅத் பாராயணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வின் வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் முபாரக் அவர்கள் நிகழ்த்தினார்.

செயலமர்வு நடத்தப்படுவதன் பின்னணியையும் நோக்கத்தையும் தெளிவுபடுத்திய மௌலவி முபாரக் அவர்கள், சமூக ஒற்றுமையும் சகவாழ்வும் காலத்தின் தேவை என்பதை இரத்தினச் சுருக்கமாக விளக்கினார்.

தொடர்ந்து ஒருங்கிணைப்பிற்கும் ஒத்துழைப்பிற்குமான கவுன்ஸிலின் செயலாளரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவர்களுள் ஒருவருமான அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள், 2008இல் ஒருங்கிணைப்பிற்கும் ஒத்துழைப்பிற்குமான கவுன்ஸில் உருவாக்கப்பட்டதன் பின்னணி, அதனது கடந்த கால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் என்பவற்றை விலாவாரியாக விளக்கியதோடு சமூக ஒற்றுமை மற்றும் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதில் ஆலிம்கள், துறைசார்ந்தவர்களின் வகிபாகம் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

ccc (2)

அதனைத் தொடர்ந்து சமுகமளித்தவர்கள் நான்கு பிரதான குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.

01. தேசிய மட்டத்தில் சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான சவால்களை அடையாளம் காணலும் தீர்வுகளை முன்வைத்தலும்,

02. தேசிய மட்டத்தில் சகவாழ்வைப் பாதிக்கும் அச்சுறுத்தல்களை அடையாளம் காணலும் தீர்வுகளை முன்வைத்தலும்,

03. பிராந்திய மட்டத்தில் சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான சவால்களை அடையாளம் காணலும் தீர்வுகளை முன்வைத்தலும்,

04. ரமழானில் சமூக ஒற்றுமையையும் சகவாழ்வையும் பேணுவதற்கான வழிகாட்டல்களை வகுத்தல்

ccc

ஆகிய தலைப்புகளில் குழுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. பிராந்திய மட்டத்தில் சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான சவால்களை அடையாளம் கண்டு தீர்வுகளை முன்வைப்பதற்கான குழு வடக்கு- கிழக்கு, வடமேல், மத்திய மாகாணம், மேல், தென் மாகாணம் என உப குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அவ்வப் பகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி அவர்கள் சமூக ஒற்றுமை மற்றும் சகவாழ்வைக் கட்டியெழுப்புதலும் இறை தொடர்பும் எனும் தலைப்பில் உருக்கமான உரை ஒன்றை நிகழ்த்தினார்.

கலந்துரையாடி சமர்ப்பிக்கப்பட்ட சகல முன்மொழிவுகளும் தீர்வுகளும் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக தட்டச்சு செய்யப்பட்டு மாவட்ட பொறுப்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. மட்டுமன்றி, ஜம்இய்யதுல் உலமாவின் ஒருங்கிணைப்பிற்கும் ஒத்துழைப்பிற்குமான கவுன்ஸிலினால் ஏலவே நாட்டின் பல பாகங்களிலும் விநியோகிக்கப்பட்ட ஒற்றுமைப் பிரகடனம் காலத்தின் தேவை கருதி மீண்டும் சுமார் 3000 பிரதிகள் மீள்பிரசுரம் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் முடிவில் ஒருங்கிணைப்பிற்கும் ஒத்துழைப்பிற்குமான கவுன்ஸிலுக்கு 16 பேர் கொண்ட அமுலாக்கல் குழு (Working Committee) நியமிக்கப்பட்டு, நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் ஒருங்கிணைப்பிற்கும் ஒத்துழைப்பிற்குமான கவுன்ஸிலின் பொது அங்கத்தவர்களாக பிரகடனம் செய்யப்பட்துடன் ஆலோசனைக் குழு ஒன்றும் நியமிக்கப்படுவதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டமை நிகழ்வின் விஷேட அம்சங்கயாகும்.

நிகழ்வு சுமார் இரண்டு மணியளிவில் துஆவுடன் நிறைவு பெற்றதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஊடக செயலாளர் அஷ்-ஷைக் பாழில் பாறூக் தெரிவித்தார்.

Published by

Leave a comment