– M முகமட் ஜலீஸ், ஐக்கிய இராச்சியம்
லண்டன்: சர்வதேச உதைப்பந்தாட்டத்தின் விதிகளில் மஞ்சள் மற்றும் சிவப்பு அடைகள் (Yellow Card, Red Card) பிரதான அம்சமானதொன்றாகும். வீரர்கள் உதைப்பந்தாட்ட விதிமுறைகளை மதித்து, ஆபத்தில்லாத போட்டியை நடாத்தி முடிப்பதற்கு இந்த மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகள் பிரதானமாதாகும்.
மஞ்சள் அட்டை:
மஞ்சள் அட்டை பிரதான 7 விடயங்களுக்காகக் காண்பிக்கப்படுகின்றன. மஞ்சள் அட்டை என்பதன் அர்த்தம் எச்சரிக்கை என்பதாகும்.
இவற்றுள், பவ்ள், சட்டையை இழுத்துப்பிடித்தல், விளையாட்டை குழப்பும் நடவடிக்கைகள், கெட்ட வார்த்தைப் பிரயோகம், போட்டியை (நேரத்தை) தாமதித்தல், பிரி கிக் உதைக்கப்படுவதற்கான 10 யார்ட் எல்லைக்குள் அத்துமீறல், மத்தியஸ்தரை அவமதித்தல் போன்ற 7 காரணங்களுக்காக மஞ்சள் அட்டை ஓர் வீரருக்குக் காண்பிக்கப்படும்.
ஒரு போட்டியில் ஒரு மஞ்சள் அட்டை பெற்றவர் தொடர்ந்தும் போட்டியில் விளையாட முடியும். இதே போல் அடுத்துவரும் போட்டியிலும் விளையாட முடியும்.
ஒரு போட்டியில் இரு மஞ்சள் அட்டைகள் பெறும் வீரர், சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு உடனடியாக வெளியேற்றப்படுவார்.
இன்று ஒரு போட்டி இடம்பெறுவது என்று வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு முன்னர் விளையாடிய போட்டியில் மஞ்சள் அட்டை பெற்ற வீரர், இன்றைய போட்டியிலும் மஞ்சள் அட்டை பெற்றால் அவர் தொடர்ந்தும் விளையாட முடியும். எனினும் தொடர்ந்து இரு போட்டிகளிலும் மஞ்சள் அட்டையைப் பெற்றதால், அடுத்த போட்டியில் விளையாட முடியாது.
இச்சம்பவங்கள் இடம்பெறும்போது (Next Match Misses) என ஹைலைட் செய்து தொலைக்காட்சிகள் காண்பிக்கும்.
சிவப்பு அட்டை:
சிவப்பு அட்டை (Send Off) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும். மைதானத்திலிருந்து குறித்த வீரரை வெளியேற்றல் என்பதாக சிவப்பு அட்டை கருதப்படும்.
சிவப்பு அட்டை காண்பிக்கப்படுவதற்கும் 7 காரணங்கள் இருக்கின்றன. அவை,
சீரியஸ் பவ்ள், வண்முறையைத் தூண்டுவதற்கு குத்துதல் அல்லது அதற்கு சமமான சம்பவங்கள், எதிர்கொள்ளும் வீரருக்கு அல்லது எதிரணி வீரருக்கு எச்சி துப்புதல், பந்தை கையால் பிடித்தல் அல்லது தடுத்தல், கோல் காப்பாளர் தனக்குரிய எல்லைக்கு அப்பால் வந்து பந்தை பிடித்தல், எதிரணியினர் கோல்போட முயற்சிக்கும் சந்தர்ப்த்தை பவ்ள் முலமாக தடுத்தல், குற்றச் சொற்களை (தகாத வார்த்தைப்பிரயோகம்), உபயோகித்தல் அல்லது சைகைகளை காண்பித்தல்.
– சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டவர்,
மைதானத்தலிருந்து உடனடியாக வெளியேறவேண்டும்– சகவீரர்களுடன் உட்கார்ந்து (Bench Area) போட்டியைக் காணமுடியாது.
– அவரது இடத்திற்கு இன்னுமொருவர் விளையாட முடியாது.
– அடுத்த போட்டியில் விளையாட முடியாது.
இரண்டு மஞ்சள் அட்டை அல்லது ஒரு சிவப்பு அட்டை பெறப்பட்டவர் அடுத்த போட்டியில் விளையாட முடியாது என்பதாகக் கூறினோம். ஆனால், ஓர் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி அல்லது குறித்த அணிக்கு இதுதான் இறுதிப்போட்டி என்றால் என்ன செய்வது?
ஆம். அவர் அந்நாட்டிற்கு ஆடும் அடுத்த சர்வதேசப் போட்டியில் அவர் விளையாட முடியாது.
1966ம் ஆண்டில் பீபா, மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகளை அறிமுகப்படுத்தி இருந்தது. எனினும் 1970ம் ஆண்டு மெக்ஸிகோவில் இடம்பெற்ற உலகக்கிண்ணப் போட்டியின் போதே முதன் முறையாக உத்தியோகபூர்வமாக இந்த மஞ்சள், சிவப்பு அட்டைகள் மத்தியஸ்தர்களால் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆக்கத்தில் இன்ஸா அல்லாஹ் இன்னும் சில முக்கிய விதிமுறைகளை ஆராய்வோம்.