மீன்களுக்கு உத்தரவாத விலை: ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு

fishகொழும்பு: மீன்களுக்கு உத்தரவாத விலையினை நிர்ணயிப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மீனவ சமூகம், மீன்பிடி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் திறைசேரி ஆகியவற்றுடன் கூட்டு கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

மீன்பிடிதுறையிலுள்ள பிரச்சினைகள் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் வைத்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி அவர்கள் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவுக்கு மேற்படி பணிப்புரையினை விடுத்தார்.

மீன்களுக்கு உத்தரவாத விலையினை பெற்றுக் கொடுப்பதன் மூலம் மீனவ சமூகத்தினரின் அனேகமான பிரச்சி னைகளுக்கு தீர்வு காண முடியுமென ஜனாதிபதி கூறினார்.

இதன்போது சில மீனவர்களால் மீன்பிடித்தலுக்காக சட்டவிரோதமான முறையில் டைனமைட் பயன்படுத்தப் படுவது குறித்தும் அமைச்சர் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு இது குறித்து சம்பவங்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இச்சந்திப்பில் மீனவர்களின் பலதரப்பட்ட பிரச்சினைகள், மீன்பிடி துறைமுகங்களை முன்னேற்றுதல் உள்ளிட்ட பல விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

Published by

Leave a comment