வேலைத்தளத்தில் இடம்பெறும் பாலியல் தொந்தரவிற்கு எதிரான கொள்கை

azeesஅரசதுறை நிறுவனங்களிற்கான வழிகாட்டல்கள்

– அப்துல் அஸீஸ், புலனாய்வு அதிகாரி

இன்று அனேகமான இளைஞர், யுவதிகளுக்கு அரச துறையில் வேலை வாய்ப்புக் கிடைத்துள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகம் என்பதால் கூடுதலான வருமானங்களை பெற வேண்டும் என்பதற்காக எமது நாட்டிலுள்ள இளைஞர்கள் அரச துறையில் ஆர்வம் காட்டாமல் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்று உழைத்து வருகின்றனர்.

குறிப்பாக பாடசாலைகள் கற்பிக்கும் ஆசிரியர்கள், உட்பட பல்துறைகளில் நியமனம் பெற்று வேலை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களே. இதன் காரணமாக பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள் மற்றும் இம்சைகளால் எத்தனையோ பெண்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டு வெளியில் கூற முடியாமல் வேதனைகளை அனுபவித்து வருகின்றனர்.

வேலைத்தளங்களில் பாலியல் தொந்தரவினை முற்றாக இல்லாதொழிப்பதிற்கும் பாலியல் தொந்தரவிற்காளானவர்களிற்கு உரிய நடவடிக்கைகளையும் பரிகாரங்களையும் வழங்குவதற்கும் சகல அரசதுறை நிறுவனங்களும் பாலியல் தொந்தரவிற்கு எதிரான கொள்கையினை ஏற்றுக்கொள்ள வேண்டும். இக்கொள்கையானது சகல அரசதுறை நிறுவனங்களிலும் பாலியல் தொந்தரவு சம்பந்தமான விடயங்களை தீர்மானித்து கொள்வதற்குரிய செயற்குழு ஒன்று அமைக்கப்படல் வேண்டும் என்பதையும் உள்ளடக்குகின்றது

பாலியல் தொந்தரவு என்றால் என்ன?

பாலியல் தொந்தரவானது பாரபட்சத்தின் ஒர் அம்சமாக இருக்கின்றது. இலங்கையில் பாலியல் தொந்தரவானது குற்றவியல் குற்றமாகவே கருதப்படுகின்றது. வரவேற்கத்தகாத பாலியல் நோக்குடனான நடத்தை, உடலியல் ரீதியான தொடுகையும் அதற்கு மேலானவையும், பாலியல் சாயமூட்டப்பட்ட குறிப்புக்கள், ஆபாச படங்களை காண்பித்தல், வார்த்தைகளாகவோ அல்லது செய்கையாலான பாலியல் கோரிக்கை போன்றவற்றை பாலியல் தொந்தரவு உள்ளடக்குகின்றது. இவ்வாறான நடத்தை சுயமரியாதையை காயப்படுத்துவதுடன் உடல் நலம் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளையும் தோற்றிவிக்கலாம். மேலும் தொந்தரவுக்கு ஆளானவர்களுக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு போன்ற விடயங்களில் தாக்கம் ஏற்படும் என்ற நியாயமான அடிப்படை எழலாம் அதேவேளை பாரபட்சத்திற்கும் இட்டுச்செல்லக்கூடியதாக இருப்பதுடன் வேலைத்தளத்தில் அசௌகரியமான சூழல் தோன்றவும் வாய்ப்பு இருக்கும்.

எவ்வாறு முறைப்பாடுகளை செய்வது?

இது தொடர்பான முறைப்பாடானது எழுத்து மூலம் செய்யப்படல் வேண்டும் அத்துடன் அவரது சொந்தக் கையெழுத்துடன் கூடியதான சத்தியஒலையினை பாலியல் தொந்தரவின் புலன் விசாரணைக்காக சம்பவம் நிகழ்ந்து ஒரு மாத காலத்திற்;குள் செயற்குழுவிடம் சமர்பித்தல் வேண்டும்.

முறைப்பாடானது பின்வரும் விபரங்களை உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.

• முறைப்பாட்டாளரின் முழுப்பெயரும் முகவரியும்
• பிரதிவாதியின் முழுப்பெயரும் முகவரியும்
• குற்றச்சாட்டு அல்லது குற்றச்சாட்டின் விபரங்கள்
• சம்பவம் தொடர்பான சுருக்கமான வாக்குமூலம்

abuse

பாலியல் தொந்தரவினை புலன் விசாரணை செய்யும் செயற்குழு

• இது ஆண் பெண் பிரதிநிதித்துவத்தினை நியாயமான அளவில் உள்ளடக்கியிருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு பெண் அங்கத்தவர்களை உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.

• இச்செயற்குழுவானது முகாமைத்துவத்துறை பிரதிநிதியையும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதியையும் முகாமைத்துவத்தினதும் தொழிற்சங்கத்தினது சம்மதத்துடன் வெளியார் ஒருவரையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.

• செயற்குழு அங்கத்தவர்கள் கட்டாயமாக பால்நிலை உணர்திறன் சம்பந்தமான பயிற்சியை பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

செயற்குழுவின் தொழிற்பாடு

• பாலியல் தொந்தரவு சம்பந்தமான முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ளல், புலனாய்வு செய்தல் மற்றும் விசாரணை செய்தலுடன் பொருத்தமான பரிந்துரைகளுடன் கூடியதான அறிக்கையினைச் சமர்பித்தல்

• பாலியல் தொந்தரவு தொடர்பான சம்பவங்களை தடுத்தல் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள, பயிலுனர்கள், புதிதாகச் ஆட்சேர்க்கப்பட்டுள்ளவர்களுடன் பாலியல் தொந்தரவு தொடர்பாக அவர்களின் அறிவினை விருத்தி செய்ய சந்திப்புக்களை ஒழுங்கு செய்தல்.

• வேலைத்தளத்தில் சிறந்த பண்புகளையும் மரியாதையையும் பேணுவதற்குரிய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகள் சம்பந்தமான அறிவுறுத்தல்களை வழங்குதல்.

• ஓவ்வொரு செயற்குழு அங்கத்தவர்களின் பொறுப்புக்கள், வேலைத்தளம் மற்றும் தொலைபேசி இலக்கம் போன்ற தகவல்களை வேலையாட்களிற்கு வழங்குவதுடன் பாலியல் தொந்தரவு சம்பந்தமான தகவல்களை வழங்குபவர்கள் சம்பந்தமான விடயங்களை பிற வேலையாட்களிற்கு வெளிப்படுத்தாமல் இரகசியத்தன்மையை பேணல்.

 முறைப்பாடு செய்யும் முறை

முறைப்பாட்டினை மேற்கொள்ளும் போது பின்வரும் அடிப்படை விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

• முறைப்பாட்டினை புலனாய்வு செய்வதிற்கும் அறிக்கையிடுவதற்குமான சகல படிமுறைகளுக்கும் போதுமான கால அவகாசம் வழங்கப்படுதல் வேண்டும். சகல படிமுறைகளும் முறைப்பாடு கிடைக்கப்பெற்று ஆறு மாத காலத்தினுள் நிறைவு செய்தயப்படல் வேண்டும்.

• புலனாய்வு படிமுறைகளுக்குரிய விதிகள் அமைக்கப்படல் வேண்டும்.

• புலானாய்வு விசாரணைகளின் வெளிப்பாட்டில் திறத்தவர்கள் திருப்தியடையாத விடத்து மேலான அதிகாரசபையிடம் மேன் முறையிடுவதற்கான மேன்முறையீட்டுப் படிமுறையை தயார் செய்தல்.

தண்டனைகள் பதிவேடு

எவரேனும் ஆளொருவர் பாலியல் தொந்தரவிற்கு பொறுப்பானவரென கண்டுபிடிக்கப்பட்டால் பின்வரும் தண்டனைகள் கொடுக்கப்படலாம்.

• முறைப்பாட்டிற்கு பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் எழுத்தாலான அறிக்கையானது குற்றத்தினை புரிந்தவரின் பிரத்தியேக கோவையில் இணைக்கப்படல்.

• இவ் அறிக்கையானது குற்றத்தின் தன்மை, கண்டிப்பு மற்றும் எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் உள்ளடக்குதல் வேண்டும்.

• கடுமையான தாக்குதல் மற்றும் கற்பழிப்பாயின் வேலையிலிருந்து இடைநிறுத்தலும் பொலிஸிக்கு அறிக்கையிடலும்.

• கடுமையான தாக்குதல் தவிர்ந்த ஏனைய பாலியல் தொந்தரவுகளிற்கு எழுத்து மூலமான எச்சரிக்கை, தற்காலிக பணி நீக்கம் அல்லது குற்றத்தின் தன்மை மற்றும் அதன் கடுமைக்கு அமைவாக அவனை ஃ அவளை வேலையிலிருந்து இடை நிறுத்தல்.

• பழிவாங்குதல் – சிலவேளையில் முறைப்பாட்டாளர் மீது பாலியல் தொந்தரவு சம்பந்தமாக முறைப்பாடு செய்த காரணத்தினால் பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுமாயின் வாய்மூல அறிவுறுத்தல்கள் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்க போதுமானதாக அமையாது. திறத்தவரால் மேலும் இதனை தொடர்ந்தால் திறத்தவர் பணி நீக்கம் செய்யப்படல் வேண்டும்.

Published by

Leave a comment