புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிகளுக்கு சிவில் பாதுகாப்பு படையில் இணைய சந்தர்ப்பம்

121117163807_tamil_army4_304x171_bbc_nocredit[1]கொழும்பு: முன்னாள் புலி உறுப்பினர்கள் 132 பேர் மாத்திரமே புனர்வாழ்வு பெற்று வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது. புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு முடிவுறும் தறுவாயில் உள்ளது.

அவர்கள் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை தங்கள் குடும்பங்களுடன் சமூகமயமாக்கப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்தார்.

இது தொடர்பாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க குறிப்பிடுகையில், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட அண்ணளவாக 12,000 விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கக்கூடிய வகையில் வினைத்திறன் மிக்கதான புனர்வாழ்வுத் திட்டம் இலங்கை அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.

இவ்விசேட திட்டத்தின் காரணமாக தற்போது சுமார் 11,000இற்கும் மேற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் அவர்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் 132 முன்னாள் புலி உறுப்பினர்கள் மாத்திரமே மீதமாக பயற்சி பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

விடுதலைப்புலிகளினால் உளவியல் மாற்றத்திற்கு உள்ளான இவர்களது மன நிலையை புத்துணர்ச்சியூட்டி நல் ஒழுக்கமுள்ள நற்பிரஜைகளாக மாற்ற பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இப்புனர்வாழ்வு நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

கல்வி, தொழிற்பயிற்சி, விளையாட்டு, தியானப் பயிற்சி, சமய அனுஷ்டானங்கள், சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உட்பட பல செயற்பாடுகள் இவர்களது நலன்கருதி முன்னெடுக்கப்பட்டு வந்தன.

புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கென அரசாங்கம் 2.5 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதுடன், கடந்த 2013ஆம் ஆண்டு இதற்கு மேலும் 300 மில்லியன் தொடக்கம் 500 மில்லியன் ரூபா வரையில் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

இவ்வாறு சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்களுக்கு பயனளிக்கும் முகமாக சுயதொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோருக்கு குறைந்த வட்டி வீதக் கடன் உதவியை அரசாங்கம் வழ ங்கியது. இக் கடன் உதவியானது சிறிய அளவிலான வியாபாரம், விவசாய நடவடிக்கைகள், குடிசைக் கைத்தொழில்கள் போன்ற தொழில் முயற்சிகளுக்கு வழங்கப்பட்டது.

இவர்களுக்கு 250,000 ரூபா கடன் தொகையானது 4வீத வட்டியில் 10 வருடகாலத்தில் மீள செலுத்தக்கூடிய காலவரையறையில் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது முன்னாள் புலி உறுப்பினர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக வழங்கப்பட்டுள்ளது.

இவர்களது எதிர்கால வாழ்வின் நலனைக் கருத்திற்கொண்டு தச்சுத்தொழில், மேசன், நீர்க்குழாய் திருத்தம், இலத்திரனியல், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், விலங்கு வேளாண்மை, அழகுக்கலை, உணவு உற்பத்தி மற்றும் மின் கம்பியிணைப்பு போன்ற தொழிற்பயிற்சிகளும் தகைமை மிக்க ஆசிரியர்களால் வழங்கப்பட்டன.

அவர்களது விருப்பத்திற்கும் திறமைக்கும் ஏற்ற வகையில் இத் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும் அவர்களில் பலர் அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்வாய்ப்புகளையும் பெற்று ள்ளனர். இதைத்தவிர முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு இலங்கையில் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவில் இணைவதற்கு இலங்கை அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment