கொழும்பு: மரத்தில் விழுந்தவனை மாடேறி மிதித்த கதைகளைப் போன்று எமது முஸ்லிம் தலைமைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அபத்தமான செயற்பாடுகளில் குளிர்காயும் சக்திகள் தொடர்பில் நாம் கவனம் கொள்ள வேண்டும்.
இன்று எமது இலங்கையில் பிரதேச முஸ்லிம்களுக்கு எதிராகவும், தேசிய முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படும் வீரியத்துடனான போக்குக்கு மத்தியில் எமக்கிடையில் பிளவுகளை தோற்றுவிக்கும் ஒன்றாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், நீதி அமைச்சருமான அல்-ஹாஜ்.ரவூப் ஹக்கீம் அவர்கள் தொடர்பில் முகப்புத்தகங்களில் வெளிவரும் விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு பலரின் மத்தியில் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
இலங்கையினை பொறுத்த வரையில் அரசியலில் முஸ்லிம்களின் வகிப்பகத்தை அடையாளப்படுத்தி, தேசிய கட்சிகளின் வாழ்வுரிமையினை தீர்மாணிக்கும் ஒன்றாக அன்று தொடக்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இருந்துவந்துள்ளது.இன்றும் அந்த கட்சி ஏனைய கட்சிகளுக்கு சவால் மிகுந்ததொன்றாகவே இருக்கின்றது.என்பதை வெளிவரும் அறிக்கைகளும்,முகப் புத்தகத்தில் பாவிக்கப்படும் சொற் பிரயோகங்களும் எடுத்துரைக்கின்றன.
நம்மில் பலர் அரசியல் செய்வது தமக்கு பிடிக்காதவர்களை மானப்பங்கப்படுத்துவதற்கு என்பது உண்மை. அதே போல் முஸ்லிம்களுக்கு தேவையானபோது உதவிசெய்யாத கட்சிகளால் என்ன பலன்இருக்கின்றது என்ற கேள்விக்கு பதிலாக புதிய கட்சிகளை உருவாக்கி அதன் மூலம் பணியாற்ற முனைவது வரவேற்புக்குரியது.
இலங்கையினை பொறுத்த வரையில் குறிப்பாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை காணப்படுகின்ற போது இந்த கட்சிகள் தமது நிகழ்ச்சி நிரலை திருப்திபடுத்தும் வகையில் நகர்த்தி செல்வது யதார்த்தமாகும். இது இவ்வாறு இருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பில் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற வகையிலும் உரையாற்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சந்தரப்பம் கோரப்பட்ட போது அதனை நிராகரித்தார் பிரதி சபாநாயகர் என்று வெளியான செய்தியின் பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள முஸ்லிம் எதிர் போக்குடையவர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தொடர்பில் முரண்பாட்டுடன் செயற்படுபவர்களின் வாய்களுக்கு கிடைத்த அவலாக காணமுடிகின்றது.
இந்த நாட்டின் முக்கிய பிரச்சினை தொடர்பில் முஸ்லிமகள் மீது அக்கறையும், உணர்வும் கொண்டவர்கள் பேசுகின்ற போது அதனை நாம் அங்கீகரிப்பது உயர் குணமாகும். இவ்வாறு இல்லாத போது அதற்கு எதிராக செயற்படுவது என்பது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைமையின் மீது நாம் தீர்த்துக் கொள்ளும் பலி என்றே கருத முடிகின்றது.
சில முகப்பு புத்தகங்கள் (பேஸ் புக்) இவ்விடயத்தை சந்தைப்படுத்தி இன்னும் கட்சியின் தலைவைலை பலகீனப்படுத்தும் வேலையினை செய்வதை காணமுடிகின்றது. இந்த பலவீனம் என்பது எமது நாட்டு முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தில் பெறும் இழப்புக்களை ஏற்படுத்தும் என்பது இருவேறு கருத்துக்களுக்கு இடமிருக்காது.
இலங்கையில் தற்போது நிலை கொண்டுள்ள இனவாத புயலை எதிர் கொள்வது என்பது தனிக்கட்சியாலும், தனிப்பட்ட அரசியல் தலைமைகளாலும் முடியாத காரியமாகும். ஆளும் மற்றும் எதிர் தரப்புக்களுக்கும் விசுவாசமான செயற்பாடுகள் தேவையான ஒரு சந்தரப்பம் இதுவாகும்.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் தனிப்பட்ட ரீதியில் இருக்க முடியும். நாம் வளர்த்த மரத்தினை நாமே எமது கரங்களால் தரிப்பதன் மூலம் எமக்கு கிடைக்கும் நிழலை மற்றும் பாதுகாப்பினை நாமே இல்லாமல் ஆக்குகின்றே கைங்கரியத்தை செய்யப் போகின்றோமா என்பதும் கேள்வியாகி நிற்கின்றது.
அரசாங்கத்திடம பேரம் பேசும், தட்டிக் கேட்கும் திறமையினை அவ்வப்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்தவருவதை நாம் பாராட்ட வேண்டும்.
எனவே தற்போதைய நாட்டின் சூழலை கருத்திற் கொண்டு எமது சமூகத்தின் பாதுகாப்பு, இருப்பு, ஒற்றுமை என்பவைகளை தக்க வைக்க நாம் எமது ஆக்க பூர்வமான பங்களிப்பினை செய்ய வேண்டும்.
அரசியல் என்பது எவருக்கும் நிரந்தரமாக கொடுக்கப்படும் சொத்தல்ல. அது இறைவனால் மக்கள் உள்ளங்களில் ஏற்படுத்தப்படும் நல்லெண்ணத்தின் வெளிப்பாட்டின் ஒரு அம்சமாகும். இருக்கின்ற போது அதனை சரியாகச் செய்வதன் மூலம், அதில் வரம்பு மீறல்கள் ஏற்படுகின்ற போது அதனை சரிசெய்வதும், சகலரதும் பொறுப்பாகும்.
எனவே விமர்சனங்களை செய்யும் எமது சகோதரரர்கள் காத்திரமான, சமூகத்தின் ஒற்றுமையினையும், முஸ்லிம்களின் பன்பினையும் வெளிப்படுத்த வேண்டும்.
எவன் ஒருவன் மற்றைய முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றானோ, நாளை மறுமையில் அல்லாஹ் அவனது குறையினை மறைப்பான் இதனை நாம் எமது உள்ளங்களில் ஆழமாக பதித்து செயற்படுவோம்.
Published by
![A-hand-writing-with-a-pen-006[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/a-hand-writing-with-a-pen-0061.jpg?w=150&h=90)


Leave a comment