லண்டன்: பாகிஸ்தானின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவரான, அல்தாப் ஹுசேன், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், லண்டனில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தியப் பிரிவினையின்போது, குறிப்பாக வட இந்தியாவிலிருந்து உருது மொழி பேசும் முஸ்லீம்கள் பலர் பாகிஸ்தானுக்குச் சென்றனர். ‘மொஹாஜீர்’ என்று குறிப்பிடப்படும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.க்யூ.எம் (முத்தஹிடா குவாமி இயக்கம்) என்ற கட்சியின் தலைவரான அல்தாப் ஹுசேன், பிரிட்டனில் நாடு கடந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான காலமாக வசித்து வருகிறார்.
இவரது கட்சியின் தலைமை நிர்வாகிகள் கூட்டம் கராச்சியில் நடந்து வரும்நிலையில், இந்த கைது வந்திருக்கிறது.
கராச்சியில் இந்தக் கட்சிக்கு பலத்த ஆதரவு இருக்கிறது. இந்தக் கட்சி கராச்சியின் உள்ளூர் அரசியலில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது.
கராச்சி நகரில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகவும், ஹுசேன் கைது செய்யப்பட்டதை அடுத்து வன்செயல்கள் நிகழலாம் என்ற பயத்தில் மக்கள் தங்கள் வீடுகளுக்கு விரைந்து கொண்டிருப்பதாகவும் அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹுசேனுக்கு ஒரு குறிப்பிட்ட உடல் நலப் பிரச்சினை இருந்ததாகவும், அவர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படவிருந்ததாகவும் எம்.க்யு.எம் கட்சியின் தலைவர் ஒருவர் கூறினார்.
பிரிட்டிஷ் போலிசார் எம்.க்யூ.எம் கட்சியினரின் நடவடிக்கைகள் தொடர்பாக பல விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அக்கட்சியினர் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் என்பது குறித்தும் இந்த விசாரணைகள் நடந்து வந்தன. இக்குற்றச்சாட்டுகளை அக்கட்சி மறுத்து வந்திருக்கிறது.
Published by

Leave a comment