மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மாலையானதும் ஓய்ந்து விடும் பஸ் சேவைகள்

busமட்டக்களப்பு: மட்டக்களப்பு, கல்முனை ஆகிய இரு நகரங்களும் மிகவும் முக்கியமான இடங்களாக விளக்குகின்றன. இரு நகரங்களுக்குமிடையே எப்போதும் பரபரப்பான போக்குவரத்து காணப்படுகிறது. சுமார் நாற்பது கிலோமீற்றர் தூரமுள்ள இரு நகரங்களுக்கிடையிலும் தினமும் பெருந்தொகையான மக்கள் பயணம் செய்கின்றனர்.

இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் சேவையில் ஈடுபடுவதால் கல்முனை மட்டக்களப்பு பாதையில் பயணிகளுக்கு போக்குவரத்துப் பிரச்சினையே இருப்பதில்லை.

ஆனால் மாலையானதும் தான் பிரச்சினையே ஆரம்பமாகிறது. மாலை ஆறு மணியானதும் மட்டக்களப்புக்கும் கல்முனைக்கும் இடையே பஸ் சேவைகள் ஓய்ந்து விடுகின்றன. மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு வருவோர், ஊழியர்கள், மாணவர்கள் உட்பட பெருமளவானோர் கல்முனைக்கும் அதற்கு இடைப்பட்ட கிராமங்களுக்கும் செல்வதற்கு பஸ்ஸூக்காகக் காத்து நிற்கின்றனர்.

மாலை ஆறு மணிக்குப் பின்னர் ஒரு சில பஸ்களே கல்முனைக்குச் செல்கின்றன. மட்டக்கப்பு பஸ் நிலையத்தில் காத்துக் கிடக்கும் பயணிகள் பலர் ஏமாற்றத்துடன் சின்ன ஆஸ்பத்திரிச் சந்திக்கு வந்து தூர இடங்களிலிருந்து வருகின்ற பஸ்களில் ஏறி நின்றபடியே பயணம் செய்கின்றனர்.

கல்முனையில் இருந்து மட்டக்களப்புக்கான பஸ் சேவையும் மாலையானதுடன் இதேவிதமாகவே ஆகி விடுகிறது. மாலை வேளைகளில் மட்டக்களப்பு நோக்கிச் செல்வதற்காக கல்முனை நகரில் ஏராளமான பயணிகள் பஸ் கிடைக்காமல் தவித்துத் திரிவதைக் காண முடிகிறது.

கட்டாயமாகச் செல்ல வேண்டியவர்கள் ஆட்டோ வண்டியில் அதிக பணம் கொடுத்துச் செல்கின்றனர். மட்டு நகரில் இருந்து இரவு எட்டு மணி ரயிலில் செல்ல வேண்டியோர் மாலை ஐந்து மணிக்கே கல்முனையிலிருந்து புறப்பட வேண்டியுள்ளது.

நாடெங்கும் தற்போது அமைதிச் சூழ்நிலை காணப் படுகிறது. இரவு பகலாக தங்குதடையின்றி பஸ் சேவைகள் நடைபெறுகின்றன. போக்குவரத்து இலகுவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்முனை – மட்டுநகர் பாதையில் மட்டும் இந்த அவல நிலைமை ஏன்?

மட்டக்களப்பு, கல்முனை பஸ் டிப்போ அதிகாரிகள் இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். பயணிகளுக்கு தங்குதடையற்ற சேவை நடத்துவது பஸ் டிப்போக்களின் பொறுப்பாகும். பகல் முழுக்க போட்டி போட்டுக் கொண்டு சேவை நடத்தும் தனியார் பஸ் மாலையானதும் முடங்கிக் கொள்வது முறையற்ற செயலாகும்.

தனியார் பஸ் சேவையாளர்கள் வருமானம் கருதி மாத்திரம் செயற்படுவது நல்லதல்ல. இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைப்பது எப்போது?

– TK

Published by

Leave a comment