கிழக்கு முஸ்லிம்களுக்கு தலைமைதாங்கும் தகுதி அதாஉல்லாவுக்கு மாத்திரமே உள்ளது

mta nizamநிந்தவூர்: கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு தலைமை தாங்குகின்ற தகுதி அமைச்சர் அதாஉல்லாவுக்கு மாத்திரமே உள்ளது இந்த பொறுப்பை அவர் தட்டிக்கழிக்கக் கூடாது. அவர் இதனை ஏற்கும் போது நாங்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்

எம். ரி. ஏ. நிஸாம் நிந்தவூர் அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் (31-05-2014) நடைபெற்ற நேசவினை நாவல் வெளியீட்டு வைபவத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

இவ்வைபவத்தில் அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் தொடர்ந்து பேசுகையில்

கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கும் தகுதி அமைச்சர் அதாஉல்லாவுக்கு மாத்திரமே இருக்கின்றது. இதனை ஒரு கல்விப் பணிப்பாளராக கூறவில்லை. ஒரு சாதாரண மனிதனாகவே தெரிவிக்கின்றேன் என்ற போதிலும் இந்தப் பொறுப்பை அவர் தட்டிக் கழித்துக் கொண்டு வருகிறார்.

இன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் இருப்பு, பாதுகாப்பு போன்றன கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களுக்கு இவ்வாறு அச்சுறுத்தல்கள் ஏற்படும் போது, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் அமைச்சர் அதாஉல்லா ஆக்ரோசமாக அவற்றை சுட்டிக்காட்டி தீர்வினை பெற்றுக்கொள்வதனை நாம் நேரடியாகக் கண்டுள்ளோம்.

முஸ்லிம்களுக்கு ஒரு கட்சி இருந்த நிலைமாறி இன்று பல கட்சிகள் எம்மிடையே உள்ளன. நமது ஒற்றுமை இவ்வாறு சிதைக்கப்பட்டதனால்தான் நாம் பலவீனப்பட்டுள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் பல இன்னல்களை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். அங்கு ஒரு நிர்வாகம் இருக்கின்றதேயன்றி, அதனால் முழுமையாக நன்மையடைந்து விட முடியாதுள்ளது.

ஆதலால், இவற்றை எல்லாம் கருத்திற்கொண்டு எம்மிடையே உள்ள கட்சிகள் யாவும் ஒற்றுமைப்படல் வேண்டும். அதன் பின்னர் பொருத்த மானவரை தலைவராகத் தேர்வு செய்ய வேண்டும் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு யார் தலைமை தாங்குவதற்கு தகுதியானவர் என்று பார்த்து அவரை அதற்கு நியமிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.tk

Published by

Leave a comment