அல்காதிப்: சவுதி அரேபியாவின் எண்ணெய் வளமிக்க ஓர் மிகப்பெரிய பிரதேசமே சவுதியின் கிழக்குப் பிரதேசமாகும். இங்கு தான் அல்காதிப் எனும் ஓர் இடம் அமைந்துள்ளது. இங்கு ஷியா பிரிவினர் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதுடன், ஷியா சமூகத்தவரின் ஊராகவும் அமைந்துவருகிறது.
அல் காதிப் கடற்பிரதேசமாக இருப்பதால் கடல் உணவுகளுக்கு இங்கு நல்ல கிராக்கிகளும் ஏற்படுவதுடன், இங்குள்ள ஷியா சமூகத்தவரின் பிரதான தொழிலாகவும் கடற்தொழில் அமைந்திருக்கின்றது.
சவுதி அரேபியாவில் சுமார் நூறு வருடங்களாக இத்தகைய ஷியா சமூகத்தவர்கள் வாழ்ந்துவருகின்றனர். இவர்களுக்கான பள்ளிவாயல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகள் இங்கு அமைந்திருக்கின்றன.
எனினும் சவுதி அரசாங்கத்தின் உதவிகளற்ற ஓர் சமூகமாக தாங்கள் கடந்த நூறு வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருவதாகவும், எங்களுக்கான அடிப்படை உரிமைகள் இந்நாட்டில் மறுக்கப்படுவதாகவும் இவர்கள் அச்சத்திற்கு மத்தியிலும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
ஊடகவியாளர்கள் சென்று குறித்த ஷியா பிரிவினருடன் பேட்டிகளை எடுப்பதற்கோ அவர்களின் வாழ்க்கை விபரங்களை அறிந்து கொள்வதற்கோ தயங்குகின்றனர். இதே போன்று ஷியா சமூகத்தவர்களும் ஊடகங்களுக்கு கருத்துக்களை வழங்கத் தயங்கி வருகின்றனர்.
சவுதி அரசாங்கத்துக்கு எதிராக எங்களது கருத்துச் சுதந்திரத்தை தெரிவித்தால், தாங்கள் சவுதி அரேபிய பொலிஸாரால் கைது செய்யப்படுவதாகவும், சிறைப்படுத்தப்படுவதாகவும் ஷியா சமூகத்தினரும், ஊடகவியலாளர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் அங்கு தற்பொழுது சில கிளர்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.
அவற்றுள்
‘சவுதியில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட வேண்டும்’
‘ எங்கள் சமூகத்தின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்’
போன்ற கோஷங்களை ஷியா சமூகத்தினர் பலத்த அச்சத்திற்கு மத்தியிலும் எழுப்பி வருகின்றனர்.
உலகிலேயே எண்ணெய் வளமுள்ள சவுதியின் கிழக்குப் பகுதியில் வாழும் நாங்கள், ஓர் வறுமை சமூகமாக சவுதி அரசாங்கத்தால் மாற்றப்பட்டிருக்கின்றோம் என பெயர் குறிப்பிட விரும்பாத ஷியா சமூகத்தவர் ஒருவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அல் காதிபில் வாழும் ஷியா பிரிவினரிடம் ஆயுதங்கள் இருப்பதாகவும், குறித்த ஆயுதங்கள் எங்கு மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதை தாங்கள் விரைவில் கண்டறிவோம் என்பதாகவும் அல் காதிப் பொலிஸ் அதிகாரி ஒருவர் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

![30saudi_arabia_shias[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/05/30saudi_arabia_shias1.jpg?w=390&h=256)
![qatif-protests-saudi-arabia[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/05/qatif-protests-saudi-arabia1.jpg?w=640&h=392)

Leave a comment