அபுஜா: நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளில் மேலும் நான்கு பேர் தப்பி வந்துள்ளதாக அந்நாட்டு கல்வி ஆணையாளர் தெரிவித்துள்ளார். வடக்கு நைஜீரியாவை இஸ்லாமியர்களுக்கான தனி நாடாக அறிவிக்கக்கோரி போகோஹாரம் தீவிரவாதிகள் நீண்ட நாட்களாகவே போராடி வருகின்றனர்.
சமீபத்தில் 300 மாணவிகளைக் கடத்திய தீவிரவாதிகள் அவர்களை பாலியல் அடிமைகளாக விற்கப் போவதாக மிரட்டல் விடுத்தனர். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து சுமார் 53 மாணவிகள் சாமர்த்தியமாக தப்பித்து வந்தனர்.
இருந்தும், மீதமுள்ளவர்களை விடுவிக்க சிறையில் உள்ள அவர்களது இயக்கத்தைச் சேர்ந்தவர்களை விடுதலைச் செய்ய வேண்டுமென போகோ ஹரம் நிபந்தனை விதித்தது. ஆனால், அதற்கு நைஜீரிய அரசு உடன்படவில்லை.அம்மாணவிகளை மீட்கும் முயற்சியில் நைஜீரிய அரசு அண்டை நாடுகளின் உதவியோடு ஈடுபட்டு வருகிறது.
மாணவிகள் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விட்டதாகவும், மாணவிகளை உயிருடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நைஜீரிய ராணுவம் தெரிவித்திருந்தது. இதற்கிடையே நைஜீரியாவின் பல பகுதிகளில் போகோ ஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதுவரை ஆயிரக்கணக்காணோர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தற்போது தீவிரவாதிகள் பிடியில் இருந்து மேலும் நான்கு மாணவிகள் தப்பி வந்துள்ளதாக அந்நாட்டு கல்வி ஆணையர் மூஸா ஐனுவா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். ஆனால், அம்மாணவிகள் எவ்வாறு தப்பி வந்தனர் என்பது குறித்து தெளிவான தகவல்களை வெளியிட அவர் மறுத்து விட்டார்.
Published by

Leave a comment