டெல்லி: இந்தியப் பிரதமர் மோடியை, வெளிப்படையானவர், தைரியமானவர், எதையும் துணிச்சலாக செய்பவர்.. அவரும் இஸ்ரேலியர் போலத்தான்.. இப்படிப் பாராட்டித் தள்ளியுள்ளனர் இஸ்ரேலியர்கள். அதுவும் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்.
இஸ்ரேலியின் புதிய சிறந்த நண்பராக மோடி இருப்பார் என்றும் அந்த நிகழ்ச்சியின்போது சிலாகித்துப் பேசப்பட்டுள்ளது. உறுதியான மனப் போக்குக் கொண்டவர், திடமான முடிவெடுப்பவர், புத்திசாலியானவர், நேரடியாக பேசக் கூடியவர், எடுத்த முடிவில் பின்வாங்காதவர் என்றெல்லாம் மோடியை அந்தக் கூட்டத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
இதன் மூலம் மோடியின் ஆட்சிக்காலத்தில், இந்தியா, இஸ்ரேல் இடையிலான தொடர்புகள் புதுப் பரிமாணத்தை அடையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பெரிய அளவில் நெருக்கமோ, நட்போ கிடையாது. காரணம், இதுவரை இருந்து வந்த அரசுகள் பாலஸ்தீன ஆதரவுக் கொள்கைக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்ததால்.
ஆனால் மோடி காலத்தில் இந்த நிலைமை மாறிப் போய் விடுமோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. காரணம், இஸ்ரேலியர்கள் மத்தியில் மோடிக்கு பெரிய வரவேற்பு எழுந்துள்ளதால்.
டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்ரேல் தேசிய பாதுகாப்புக் கல்விழக் கழக கூட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மோடியை வெகுவாகப் புகழ்ந்து பேசியுள்ளனர். உறுதியானவர், வெளிப்படையானவர், அதி புத்திசாலியானவர், நேரடியானவர்.. அவரும் மனதளவில் இஸ்ரேலியர் போன்றவர்தான் என்றெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளனர் கூட்டத்தில் பேசியவர்கள்.
மேலும் மோடிக்கு முதல் ஆளாக போன் போட்டு வாழ்த்தியவர்கள் வரிசையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதன்யாஹுவும் ஒருவர். பின்னர் தனது அமைச்சரவைக் கூட்டத்தில் நதன்யாஹு தனது அமைச்சர்களிடம் கூறுகையில், தனது காலத்தில் இஸ்ரேலனுடனான இந்தியாவின் நட்பையும் பொருளாதார உறவுகளையும் மேலும் ஆழப்படுத்த தான் விரும்புவதாக மோடி குறிப்பிட்டதாக கூறியுள்ளார் நதன்யாஹு.
மோடிக்கு இஸ்ரேல் புதிதல்ல. அங்குள்ள பலருடன் மோடிக்கு நல்ல நட்பு உள்ளது. குறிப்பாக பல்வேறு வர்த்தக நிறுவனங்களுடன் நல்ல தொடர்பு உள்ளது. குஜராத் முதல்வராக அவர் இந்தத் தொடர்புகளை ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளார். எனவே மோடியின் வெற்றியைஇ இஸ்ரேலியர்களும் ஆர்வத்துடன் வரவேற்றுள்ளனர் என்பதில் ஆச்சரியம் இல்லை.
அதேசமயம், பல காலமாகவே இந்தியா, இஸ்ரேல் இடையிலான நட்பு அமைதியானதாக, பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாததாகவே இருந்து வருகிறது. வெளிப்படையான நட்பாக இது இருந்ததில்லை.
1950ம் ஆண்டு இஸ்ரேலை தனி நாடாக இந்தியா அங்கீகரித்தது. ஆனால் அதன் பின்னர் வந்த அரசுகள், வெளிப்படையாக இஸ்ரேலுடன் நட்புப் பாராட்ட முன்வரவில்லை. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு இந்திய அரசுகள் தொடர்ந்து மதிப்பு கொடுத்த வந்ததாலும், பாலஸ்தீனர்கள் மீது கொண்ட அபிமானத்தாலும் இஸ்ரேலை இந்திய வெளியுறவுக் கொள்கை ஓரம் கட்டியே வைத்திருந்தது.
அதேபோல 1992ம் ஆண்டு வரை இஸ்ரேலுடன் அதிகாரப்பூர்வமான தொடர்புகளைக் கூட இந்தியா கொண்டிருக்கவில்லை. உலகின் பிற நாடுகள் கூட இஸ்ரேலுடன் நல்ல நட்பைப் பேணி வந்த போதிலும் இந்தியா மட்டும் இஸ்ரேலை ஒதுக்கியே வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சமீப காலமாக இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத் தொடர்புகள் அதிகரித்துள்ளன. தொழில்நுட்ப அறிவுப் பங்கீடு, விண்வெளித் துறையில் இணைந்த செயல்பாடுகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்பட பல துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளன.
மோடி முதல்ராக இருந்த காலகட்டத்தில் குஜராத்தில் பல இஸ்ரேலிய நிறுவனங்கள் வர்த்தகம் மேற்கொள்ள வரவேற்கப்பட்டன. தீவிரமான முறையில் அதற்கு ஆதரவும் கொடுத்தவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. துறைமுகம், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்டவற்றை இஸ்ரேலியர்கள்தான் பெற்றனர். இஸ்ரேலின் விவசாய தொழில்நுட்பம், பாராமெடிக்கல் துறை, மரபு சாரா எரிசக்தித் துறை அறிவு உள்ளிட்டவற்றை இஸ்ரேலிடமிருந்து பெற்று தனது மாநிலத்தை வளமாக்கியுள்ளார் மோடி.
2006ம் ஆண்டு இஸ்ரேல் அரசின் அழைப்பை ஏற்று இங்கு 5 நாள் பயணம் மேற்கொண்டார் மோடி. அப்போது இஸ்ரேல் வர்த்தகத் துறையின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார் மோடி. இஸ்ரேலிடமிருந்து பல நல்ல விஷயங்களை தனது மாநிலத்திற்கு வரவைத்தார். மோடியின் ஆர்வமும், செயல்பாடுகளும் அப்போது இஸ்ரேலிய ஊடகங்களால் பெரிதாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது மோடி பிரதமராகியுள்ளதால் இஸ்ரேலும் கூட ஆர்வமாகியுள்ளது. மோடி காலத்தில் இந்தியா, இஸ்ரேல் இடையிலான நட்பு மேலும் வலுவாகும் என்ற எதிர்பார்ப்பும் அங்கு எழுந்துள்ளது.
Published by

Leave a comment