காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனையின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் கிராம சேவகர் பிரிவு தோறும் நடாத்தப்படும் நடமாடும் சேவை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பின்வரும் ஐந்து கிராம சேவகர் பிரிவுகளுக்கான 4 வது நடமாடும் சேவை 22-05-2014 இன்று வியாழக்கிழமை காலை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பரினால் மேற்படி நடமாடும் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இங்கு இடம்பெற்ற நடமாடும் சேவையில் பிறப்பு இறப்பு, திருமண பதிவுகள் வழங்குதல், தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், முதியோர் அடையாள அட்டை வழங்குதல், காணிப்பிரச்சினைக்கான தீர்வுகள், சமூர்த்தி பிரிவின் சேவைகள், இலவச கண் பரிசோதனை,ஆயுர்வேத வைத்திய சேவைகள், இலங்கை மின்சார சபையின் சேவைகள்,தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சேவைகள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் வெளிநாட்டில் பணி புரிபவர்களை பதிவு செய்தல்,பொலிஸ் சேவைகள் போன்ற பல்வேறு சேவைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.இதில் 164 கிராம சேவகர் பிரிவு, 164 ஏ கிராம சேவகர் பிரிவு, 164 பி கிராம சேவகர் பிரிவு,164 சி கிராம சேவகர் பிரிவு, 165 பி கிராம சேவகர் பிரிவு ஆகிய ஐந்து கிராம சேவகர் பிரிவுகளுக்காக பின்வரும் நடமாடும் சேவை நடைபெற்றது.
இந் நடமாடும் சேவை நிகழ்வில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நஸீர்தீன்,காத்தான்குடி மின்சார சபையின் பொறியியலாளர் நௌபல் ,காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி துஷார, காத்தான்குடி பொலிஸ் நிலைய சிவில் பிரிவு பொறுப்பதிகாரி செல்வராஜா ,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கருநாகரன் ,ஆயர்வேத வைத்தியர்கள்,பிரதேச செயலக கணக்காளர் எஸ்.ரூபாகரன்,நிருவாக உத்தியோகத்தர் எஸ்.சுந்தரராஜா,நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.கோமளேஸ்வரன்,பிரதேச செயலக சமுர்த்திப் பணிப்பாளர் ஈ.குணரத்தினம்,மேலதிக மாவட்ட பதிவாளர் ஜெ.எம்.பைறூஸ் உட்பட பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Published by




Leave a comment