காத்தான்குடி: காத்தான்குடி நகர சபை முன்னாள் தவிசாளர் அல்ஹாஜ் மர்சூக் அகமட்லெப்பை அவாகளிடம், ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி எம்.ஐ. றஹ்மத்துழ்ழாஹ் இன்று (21.05.2014) மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
மேற்படி பத்திரிகையில் மர்சூக் அகமட்லெப்பை அவர்களைப் பற்றி எழுதப்பட்ட செய்திகள் அவதூறானவை என பிரதம ஆசிரியர் மீது குற்றஞ்சாட்டி மர்சூக் அகமட்லெப்பை 26.11.2012-ஆம் திகதி மான நஷ்டம் கோரும் வழக்கொன்றை இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கு பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றைய வழக்குத் தவணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான் புவி. றஹ்மதுழ்ழாஹ், தான் இருதய சிகிச்சை பெறச் செல்ல வேண்டியுள்ளதால் வழக்காளியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
இதனை வழக்காளி மர்சூக் அகமட் லெப்பையும் ஏற்றுக் கொண்டதையடுத்து நீதிபதி எம்.ஏ. மனாப் அவர்கள் பிரதிவாதியை வழக்காளியிடம் திறந்த நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுமாறும், முஸாபஹாச் செய்து இருவருமத் சமாதானமாகிக் கொள்ளுமாறும் பணித்தார்.
இதன்படி பிரதிவாதி புவி. றஹ்மதுழ்ழாஹ், வழக்காளி மர்சூக் அகமட் லெப்பையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அவரும் அதனை ஏற்றுக் கொண்டதையடுத்து இருவரும் திறந்த நீதிமன்றில் கட்டியணைத்து முஸாபஹாச் செய்து கொண்டனர்.
இவ்வாறு மன்னிப்புக் கேட்டுக் கொண்டதை, சுகவீனம் காரணமாக இடை நிறுத்தியுள்ள ‘வார உரைகல்’ பத்திரிகையை மீண்டும் வெளியிடும்போது முன்பக்கத்தில் பிரசுரிக்க வேண்டும் என்றும், இணையதளம் மற்றும் டுவிட்டர் சேவை ஆகியவற்றிலும் வெளிப்படுத்த வேண்டும், எதிர்வரும் 30ம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாசலில் நடைபெறும் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் ஜமாஅத்தார் முன்னிலையிலும் வழக்காளியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி பணித்தார்.
இதற்கமைய மர்சூக் அகமட்லெப்பையினால் 7,500,000 இலட்சம் ரூபாய் மான நஷ்டம் கோரி இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த SP/2593/12-ஆம் இலக்க வழக்கு இன்றுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
Published by


Leave a comment