அடிப்படை உரிமை கோரியதற்காகவா அரசியல் பழிவாங்கல்: வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் கேள்வி

asmin– PMGGஊடகப்பிரிவு

மன்னார்: ‘தமது இருப்பிடங்கள் தொடர்பில் அடிப்படை உரிமை கோரியதற்காகவா அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது?’ என மன்னார்-மறிச்சிக்கட்டி, மரைக்கார் தீவு மக்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் முன்னின்று செயற்பட்டுவரும் மௌலவி தௌபீக் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்ற உத்தரவு தொடர்பில் இன்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப் (நளீமி) அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘புணர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழ், புணர்வாழ்வு உதவியாளராக கடமை புரியும் அஷ்ஷெய்க் ஆ.தௌபீக் அவர்கள் மேற்படி மரைக்கார் தீவு பிரதேசத்தின் அபிவிருத்திச் சங்கத் தலைவர் என்ற வகையில், இம்மக்கள் கடந்த பல மாதங்களாக மேற்கொண்டு வரும் பல்வேறு பட்ட முயற்சிகளுக்கு தலைமை தாங்கி, நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் மேற்படி மௌலவி தௌபீக் அவர்களுக்கு புணர்வாழ்வு திணைக்களத்தின் பணிப்பாளரினால் இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மீள குடியேறுகின்ற வடக்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பல அரச உத்தியோகத்தர்கள், வடக்கில் கடமையாற்ற வேண்டிய தேவை இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் மறிச்சிக்கட்டி, மரைக்கார் தீவு மக்களின் உரிமைகள் தொடர்பிலும்,, பிரச்சினைகள் தொடர்பிலும் குரல் கொடுத்துவரும் மௌலவி தௌபீக் அவர்களின் இடமாற்ற உத்தரவு முற்றுமுழுதாக ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையே அன்றி வேறில்லை என எண்ணத்த தோன்றுகிறது.

வடக்கு மாகாணசபையை த.தே.கூ. கையகப்படுத்தியவுடன் சிவில் நிருவாகத்துறையில் எவ்விதமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளும் இடம்பெறமாட்டாது என பகிரங்கமாக அறிவித்து, அதனை இதுவரை நடைமுறைப்படுத்தியும் வந்திருக்கின்றது. ஆனால் இலங்கையின் அரசியல் வரலாற்றில் தங்களுடைய நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும், அரச உத்தியோகத்தர்களை தங்களுடைய அடிமைகளாகப் பயன்படுத்துவதற்காகவும் அரசியல் பழிவாங்கல் என்கின்ற கோழைத்தனத்தைப் பயன்படுத்துகின்ற சந்தர்ப்பங்கள் ஏராளம் காணப்படுகின்றன. அத்தகைய நடவடிக்கையாகவே மௌலவி தௌபீக் அவர்களுடைய இந்த இடமாற்ற உத்தரவும் அமையப் பெற்றிருக்கின்றது எனவும் எண்ணத்த தோன்றுகின்றது.

அதேவேளை மௌலவி தௌபீக் அவர்கள் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு அவரது கட்சிக்கும் மிக நெருக்கமானவர். கடந்த காலங்களில் அமைச்சருக்கும் அவரின் கட்சியின் தேர்தல் வெற்றிக்காகவும் கடுமையாக உழைத்தவர் என்பதும் இங்கு நாம் அறிந்த ஒரு விடயமாக இருக்கின்ற நிலையில் இவ்வாறானதொரு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதானது மரைக்கார் தீவு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் வேறு ஒரு வர்க்கத்தினரைத் திருப்திப்படுத்தும் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகிறாரா? என்ற கேள்வியையும் கேட்கத் தோன்றுகிறது.

வடக்கு முஸ்லிங்களுக்கு அரசியல் அடிமைத்தனம் களையப்பட்டு சுயாதீனமாகச் செயற்படுகின்ற நிலையை ஏற்படுத்துவதே எமது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அடிப்படைக் கடமையாக இருக்கின்றது. இந்நிலையில் மௌலவி தௌபீக் அவர்களுடைய இடமாற்ற உத்தரவானது மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்ற ஒரு விடயமாக எம்மால் நோக்கப்படுகின்றது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் அதிகாரிகள், அமைச்சர்கள் மிக நீதமாக செயற்பட வேண்டும்’ எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment