கொழும்பு: அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமரின் பெயரையோ, எம்.பிக்களின் பெயரையோ, எமது நட்பு நாடுகளின் பெயரையோ குறிப்பிடுவது தவறு என ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. ஆகியோர் நேற்று சபையில் சுட்டிக்காட்டினர்.
போதைப்பொருள் கடத்தலில் இலங்கை தெற்காசியாவில் கேந்திர நிலையமாக இருக்கிறது. அரசாங்கம் இதனை தடுக்க தவறிவிட்டது என எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நேற்று கொண்டுவந்தனர்.
ஐ.தே.க.எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா பிரேரணையை சமர்ப்பித்து பேசும் போது, பிரதமரின் பெயரையும், நட்பு நாடொன்றின் பெயரையும் கூறினார். இதன் போது, ஏ.எச்.எ.ம். அஸ்வர் எம்.பி. ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி இவ்வாறு எமது நட்பு நாடுகளின் பெயரை குறிப்பிடுவதால் அந்த நாடுகளுக்கான நட்பில் விரிசல் ஏற்படலாம் என்று தெரிவித்ததுடன், பிரதமரின் பெயரையும் குறிப்பிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.
இந்தப் பிரேரணையை ஆமோதித்து பேசிய ரவி கருணாநாயக்க எம்.பியும் இதே போன்று குறிப்பிட்ட போது, ஆளும்தரப்பு பிரதம கொரடா தினேஷ் குணவர்தனவும் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி இவ்வாறு பெயர்களை குறிப்பிட முடியாது என சுட்டிக்காட்டினார்.
நேற்று பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் கூடியது.
பிரதமரின் பெயர் குறிப்பிட்ட இடங்கள் ஹன்சாட்டிலிருந்து நீக்கப்படும் என்றும் விவாதத்தில் பிரதமரின் பெயரை குறிப்பிட வேண்டாம் என்றும் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.tk
Published by

Leave a comment