பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு இலங்கை முன்னாள் வீரர் ஹதுருசிங்க பயிற்சியாளராகத் தெரிவு

hathurusingeடாக்கா: பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு இலங்கையைச் சேர்ந்த சந்திக்க ஹதுருசிங்க பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பல்துறை ஆட்டக்காரரான அவர் இலங்கை அணியின் சார்பில் 26 டெஸ்ட் போட்டிகளிலும், 35 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

அவரும் அதிரடி ஆட்டக்காரரான சனத் ஜெயசூரியவும் தமது டெஸ்ட் வாழ்க்கையை ஒரே போட்டியில் தொடங்கினர். இருவரும் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹாமில்டன் நகரில் 1991 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் களமிறங்கினர்.

அந்த அணிக்கு அர்ஜுன ரணதுங்க தலைமையேற்றிருந்தார்.

தனது முதல் டெஸ்ட் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஹதுருசிங்க துவக்க ஆட்டக்காரராக இறங்கி 23 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

எனினும் இரண்டாவது ஆட்டத்தில் அவர் அதிரடியாக ஆடி 81 ஓட்டங்களை எடுத்தார். அந்தப் போட்டி எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

ரோஷன் மஹாநாமா ஹதுருசிங்க ஜோடி, இலங்கை அணியின் பலமான துவக்க ஆட்டக்காரர்களாகத் திகழ்ந்தது. துவக்க ஆட்டக்காரராக மட்டுமல்லாமல் மிதவேகப் பந்து வீச்சாளராகவும் ஹதுரசிங்க திகழ்ந்தார்.

தனது முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் அரை சதம் அடித்த அவர் இலங்கை அணியில் நிரந்தரமாக இடம்பிடிக்க முடியாமல் உள்ளே வெளியே என்று இருந்தார்.

1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளுக்கான இலங்கை அணியில் அவர் இடம்பெற்றிருந்தாலும் ஒரு போட்டியில் கூட ஆடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்படவில்லை.

பின்னர் விளையாட்டிலிருந்து ஒதுங்கிய அவர், பயிற்சியாளராக மாறி, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் அணி, இலங்கை ஏ அணிகளுக்கு பயிற்சி அளித்தார்.

தற்போது அவுஸ்திரேலியாவின் சிட்ணி தண்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகி பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கிறார்.

Published by

Leave a comment