யாழ்ப்பாணத்தில் கட்சி அலுவலகங்கள் சுற்றிவளைக்கப்பட்டன

armyயாழ்ப்பாணம்: இலங்கையின் இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்தவர்களை நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெறாமல் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகம்,  தமிழ் தேசியக் மக்கள் முன்னணி அலுவலகம், அந்த முன்னணியிலுள்ள பொதுச் செயலாளர் கஜேந்திரகுமாரின் இல்லம் என்பன படையினராலும் சிவிலுடை தரித்த காவல்துறையினராலும் முற்றுகையிடப்பட்டுள்ளதாக அந்தக் கட்சிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அதேநேரம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற உதயன் பத்திரிகை அலுவலகம் அமைந்துள்ள பகுதியும் படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முற்றுகையிடப்பட்டுள்ள அரசியல் கட்சி அலுவலகங்கள், உதயன் பத்திரிகை அலுவலகம் ஆகியவற்றுக்கு வெளியிலிருந்து எவரும் செல்ல முடியாததாகவும் உள்ளேயிருந்து எவரும் வெளியே வரமுடியாததாகவும் தடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சகோதரனுமாகிய துவாரகேஸ்வரன் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த பொது மக்களின் நினைவாக இந்து சமய முறைப்படி பிதிர்க்கடன்களை நிறைவேற்றுவதற்கு அந்தணர்களைக் கொண்டு கீரிமலையில் இறந்தவர்களின் உறவினர்கள் சமயக்கடன்களை நிறைவேற்றுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்வையும் தடுக்கும் வகையில் கீரிமலையை சுற்றியுள்ள மூன்று மைல் தூரத்தில் கீரிமலைக்கு செல்லும் வழிகளில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தன.

முற்றுகைக்கு உள்ளாகியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மாத்திரம் இவ்வீதித் தடைகளினூடாக போய் வர அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் வெளியார் எவரும் உள்ளே செல்ல விடாமால் தடுத்து நிறுத்தி, திருப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் ஞாயிறு அன்று கீரிமலையில் ஈமக்கடன்களை செய்வதற்காக சென்ற போது தடுத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் உயிரிழந்த ஒருவருக்கு முப்பத்தோராம் நாள் சமயக்கடன்களை செய்வதற்காக சென்ற குடும்பம் ஒன்று அங்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் பல இடங்களிற்கும் பல வழிகளிலும் அலைந்து திரிந்து பின்னர் தாங்கள் கீரிமலைக்கு பதிலாக வேறு ஓர் இடத்தில் சமயக் கடன்களை நிறைவேற்றியதாகவும் கூறினர்.

-BBC

Published by

Leave a comment