மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களிலுள்ள தபால் நிலையங்கள்,சமுர்த்தி வங்கிகள்,வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றில் தொடராக இடம்பெற்ற பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை களுவாஞ்சிக்குடி பொலிசார் 18-05-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இரண்டு பேரையும் களுவாஞ்சிக்குடி பொலிசார் கல்முனை சின்னத் தம்பி வீதியில் வைத்து கைது செய்துள்ளதுடன் ,கொள்ளையிடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.
இதில் மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களில் களுதாவளை, பெரியகல்லாறு, கோட்டைக்கல்லாறு, ஓந்தாச்சிமடம் ஆகிய தபால் நிலையங்கள் தாளங்குடா, சவளக்கடை, மஞ்சந்தொடுவாய், ஓட்டமாவடி சமூர்த்தி வங்கிகள் உட்பட சிங்கர் காட்சியறை,ஹாட்வெயார் ஆகியவற்றில் இருந்து கொள்ளையிடப்பட்ட சுமார் இருபது இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கொள்ளையிடப்பட்ட பொருட்களில் இரண்டு மோட்டார் சைக்கிள்,உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி,குளிர் சாதனப் பெட்டி,தொலைக் காட்சி,கூறிய ஆயுதங்கள்,லெப் டொப் கணணி உபகரணங்கள்,பணம்,முத்திரைகள்,கையடக்க தொலைபேசியின் மீள் நிரப்பு அட்டைகள்,பெற்றிகள்,மின்சார உபகரணங்கள்,இலத்தரணியல் உபகரணங்கள் இதில் அடங்கும்.
இப் பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களில் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரும் யாழ்ப்பாணம் முருங்கன் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் அவர்களிடமிருந்து மீட்க்கப்பட்ட சுமார் இருபது இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களையும் நீதிமன்றத்தில் விரைவில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க ,மட்டக்களப்பு –அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருனாரத்ன, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வா ஆகியோரின் வழிகாட்டலில் களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்நாயக்காவின் ஆலோசனையில் பேரில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த தலைமையில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி லொகுகே, ஐ.பி. நஸீர்,ஐ.பி .ஆபூபக்கர் பொலிஸ் உத்தியோகத்தர்களான ஆர்.சமிந்த,ரவிகுமார்,அத்தநாயக்க,சிரிசேன, கே.சமிந்த ஆகிய பொலிஸ் குழுவினர் உதவியுடன் இக் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment