‘கிழக்கில் சிறுகைத்தொழில் கிராமங்கள் அமைக்கப்படும்’:  மட்டக்களப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 

batticaloa– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் பனைசார் உற்பத்திப் பொருட்கள் அதிக வளர்ச்சி கண்டு வரும் நிலையில் பிரம்பு, பன், கைத்தறி, மட்பாண்டம் மற்றும் தெங்குசார்ந்த கைப்பணி பொருட்களின் உற்பத்திகளை மேம்படுத்தும் வகையில் தனது அமைச்சின் கீழ் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் கைப்பணிக் கிராமங்களை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வாழ்வின் எழுச்சி திட்டத்தின கீழ் பனைமற்றும் தெங்குசார்ந்த பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட 168 தொழில் முயற்சியாளர்களுக்கு உபகரணங்களை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (13) மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கடந்த கால யுத்தமானது சொந்த உழைப்பின்றி எதிலாவது தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு எமது மக்களை தள்ளிவிட்டது.

யுத்தத்தின் பின்னரான இக்காலப்பகுதியில் எமது மக்களை சொந்தக்காலில் நிற்கக் கூடிய சமூகமாக நாம் கட்டியெழுப்பி வருகின்றோம்.

தொடர்ந்து எமது இணக்க அரசியல் நடைமுறையின் மூலம் எமது மக்களின் கடந்தகால துயரங்களை இணக்க அரசியலின் மூலம் படிப்படியாக நாம் முன்னேற்றி வருவதுடன் அரசில் பங்கெடுத்துள்ளதன் ஊடாக பல்வேறு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு எமது மக்களுக்கான அபிவிருத்தி உட்பட அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருவதோடு அம்மக்களின் உரிமைக்காகவும் அயராது உழைத்து வருகின்றோம்.

batticaloa1

நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்வின் எழுச்சி திடடத்தின் ஊடாக தனிநபரை பலப்படுத்துவதன் மூலம் அந்தக் குடும்பத்தை பலப்படுத்தி அவர்கள் சார்ந்த சமூகத்தை முன்னேற்றுவதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், ஜனாதிபதி அவர்களுக்கும், அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் எமது மக்கள் சார்பில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயிற்சியாளர்களை மேம்படுத்தும் வகையில் எம்மாலான அனைத்து பங்களிப்புக்களையும் வழங்குவதற்கு தான் தயாராகயிருப்பதுடன் அதற்கு பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்; பக்கபலமாக இருந்து வருகின்றார்.

இப்பகுதி மக்கள் தொடர்பில் எனக்கு அக்கறையும் உரிமையும் உண்டு என்பதனால் அவர்களது நலன்சார்ந்து உழைக்க வேண்டியது எனது கடமையாகும்.

அந்தவகையில் நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு அனைவரதும் பங்களிப்புக்களும் அவசியமாகும்.
நாங்கள் வழங்குகின்ற வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்தி எமது மக்கள் சொந்த காலில் நின்று வாழ்வில் முன்னேறுவதற்கு முன்வரவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் மூலம் 700 பேர் தொழில் முயற்சிகளுக்கான பயிற்சிகளை பெற்றிருப்பதுடன் இவர்களில் 350 பேருக்கான உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம் 168 பேருக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட செயலர் திருமதி சாள்;ஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் முரளிதரன், அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஆகியோர் உரைநிகழ்த்தினர்.

batticaloa

அமைச்சின் தேசிய இணைப்பாளர் செல்வி தங்கேஸ்வரி பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம், அமைச்சின் பணிப்பாளர்கள் கமகே, யுசுப் மற்றும் பிரதேச செயலர்கள், கிராம அலுவலர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment