புகைத்தலிலிருந்து மக்களை விடுவிக்கும் பணிகள் தொடரும்

smokeகொழும்பு: சிகரெட் பெட்டியில் புகையிலை பாதிப்பு தொடர்பான படங்களை பிரசுரிப்பது தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாம் மதிக்கிறோம். ஆனால் பாராளு மன்றத்தினால் 80 வீதம் படங்களை பிரசுரிக்க அனுமதி வழங்கியிருக்கும் நிலையில் 50 முதல் 60 வீத பகுதியிலே பாதிப்பு படங்களை பிரசுரிக்க முடியும் என வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தொடர்பில் திருப்தி அடைய முடியாது என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சிகரட் பெட்டியின் 80 வீத பகுதியில் பாதிப்பு தொடர்பான படங்களை பிரசுரிப்பது தொடர்பில் தான் முன்னெடுக்கும் போராட்டத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை எனவும் அதனை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

புகையிலை பாவனையி னால் நாளாந்தம் 65 முதல் 70 பேர் வரை மரணமடையும் நிலையிலே அதன் பாதிப்பு குறித்து சிகரட் பெட்டியில் அறிவுறுத்தல் படங்களை பிரசுரிக்க வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தாதியர் பயிற்சிக்காக 2500 பேரை இணைப்பது தொடர்பான வைபவம் நேற்று கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

6 ஆயிரம் தாதிமார்களுக்கு பயிற்சி வழங்கும் திடத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும் இரண்டாவது குழுவுக்கே நேற்று நியமனம் வழங்கப்பட்டதோடு ஏற்கெனவே 3 ஆயிரம் பேருக்கு ஜனாதி பதி நியமனக் கடிதங்களை வழங்கியிருந்தார்.

சிகரட் பெட்டியில் உருவப் படங்கள் பொறிப்பது தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பு தொடர்பில் இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் மேலும் கூறியதாவதுஇ சகல விதமான போதைப் பொருட்களின் பாவனையினால் தினமும் 200 பேர் மரணிக்கின்றனர். இவற்றைக் கருத்திற் கொண்டே 2012 ல் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. அதன்போது புகையிலை கம்பனி வழக்கு தாக்கல் செய்தது. இதனால் குறித்த வர்த்தமானி அறிவித்தலை செயற்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

கடந்த வருடம் இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு பாராளுமன்றத்திலுள்ள 225 எம்.பி.க் களின் ஏகோபித்த அனுமதி கிடைத்தது. இது தவிர ஜனாதிபதியினதும் அமைச்சரவையினதும் அனுமதி கிடைத்திருந்தது. இந்த நிலையிலே நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை நாம் மதிக்கிறோம். ஆனால் அதுகுறித்து திருப்தி அடையவில்லை.

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் சிகரட் பெட்டியின் 80 வீத பகுதியில் அறிவுறுத்தல் படங்களை பிரசுரிப்பதற்காக முன்னெடுக்கும் போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடப் போவதில்லை அதற்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என உறுதியளிக்கிறேன்.

இவ்வாறான உருவப்படங்களை பிரசுரிப்பதற்கு சுகாதார அமைச்சருக்கு அதிகாரம் கிடையாது என புகையிலை கம்பனிகளின் தரப்பில் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் இது தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது என்பது நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இந்த தீர்ப்பு வழங்கியது தொடர்பில் நீதிமன்றத்துக்கு எமது நன்றியை தெரிவிக்கிறேன் என்றார்.

அண்மைக் காலமாக தொடரும் தாதிமார் பிரச்சினை குறித்து இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இது மிகவும் புண்ணியம் வாய்ந்த தொழிலாகும். இன்று முயல் குட்டிகளை போன்று மான் குட்டிகளை போன்று அப்பாவித்தனமாக காணப்படும் நீங்கள் 3 வருடங்களின் பின்னர் எப்படி இருப்பீர்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். அப்பொழுது இலவச சுகாதார துறைக்கு இறைவனின் அருள்தான் தேவைப்படும். எவ்வாறு நோக்கினாலும் சுகாதார துறைக்கு தொழிற்சங்க நடவடிக்கை உகந்ததல்ல. சுகாதாரத் துறையில் எந்தப் பிரிவினராக இருந்தாலும் நோய் சிகிச்சை சேவைகளை முடக்கி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்களானால் அவர்கள் மறு ஜென்மத்தில் நோயாளிகளாகத்தான் பிறப்பார்கள். இந்த கெளரவமான தொழிலை பாதுகாக்குமாறு கோருகிறேன் என்றார்.

இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் லலித் திசாநாயக்க, அமைச்சின் செயலாளர் நிஹால் ஜெயதிலக, சுகாதார சேவைப் பணிப்பாளர் பாலித மஹிபால உட்பட பலர் கலந்து கொண்டனர்.tk

Published by

Leave a comment