‘கடத்தப்பட்ட 200 பள்ளி மாணவிகளின் இருப்பிடம் எனக்குத் தெரியும்’:போர்னோ கவர்னர் அறிவிப்பு

nigeriya– S-90

லண்டன்: தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட மாணவிகள் தற்போது இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என போர்னோ மாநில கவர்னர் அறிவித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நைஜீரியாவில் சுமார் 200க்கும் அதிகமான பள்ளி மாணவிகள் போகோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர்.

பெண்களுக்கு கல்வி வழங்கக் கூடாது என்பதற்காக அம்மாணவிகள் கடத்தப்பட்டதாகவும், கடத்தப்பட்ட அம்மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த இருப்பதாகவும் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாயின.

இதற்கிடையே, கடத்தப்பட்ட மாணவிகளில் சிலர் தீவிரவாதிகளிடமிருந்து சாமர்த்தியமாக தப்பி வந்தனர். ஆனபோதும், இன்னமும் 200 மாணவிகள் தீவிரவாதிகளின் பிடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அம்மாணவிகளையும் பாதுகாப்பாக மீட்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், கடத்தப்பட்டுள்ள மாணவிகளின் இருப்பிடம் தனக்குத் தெரியும் என அந்நாட்டின் போர்னோ மாநில கவர்னரான காஷிம் ஷெட்டிமா தெரிவித்துள்ளதாக பி.பி.சி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

nigeriya

மேலும், அவர் கடத்தப்பட்டுள்ள மாணவிகளை பார்த்தாகவும், தான் பார்த்தது அம்மாணவிகளை தானா என உறுதி செய்யுமாறு நைஜீரிய ராணுவத்தை அவர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தீவிரவாதிகள் அம்மாணவிகளை கமருன் அல்லது சாட் எல்லையை தாண்டி கடத்திச்சென்றுவிடவில்லை என ஷெட்டிமா உறுதி படத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தீர்வு காண்பது குறித்து விவாதிக்க வருமாறு நைஜீரிய மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு பிரெஞ்சு அதிபர் பிராங்கோய்ஸ் ஹொல்லாண்டே அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment