பதுளை: நடைபெறவிருக்கும் ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) ஆராய்ந்து வருகின்றது. இது தொடர்பான கருத்துக்களையும் நிலைமைகளையும் அறிந்துகொள்ளும் பொருட்டு கடந்த 7, 8ம் திகதிகளில் பதுளை மாவட்டத்திலுள்ள முக்கியஸ்தர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலருடன் சந்திப்புக்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை மேற்கொண்டது.
அத்துடன் நேற்று 10.05.2014 சனிக்கிழமை மாவனல்லையில் மேற்படி தேர்தல் தொடர்பில் NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களிடையே விரிவான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் ஊவா மாகாணசபையில் முஸ்லிம் பிரதிநிதிதத்துவத்தினை உறுதிப்படுத்துவது, பிரதேசத்தில் இன நல்லுறவுகளை மேற்கொள்வது, மாகாணசபை அதிகாரங்களுக்கூடாக நல்லாட்சி பண்புகளுடன் கூடிய பிரதிநித்துவங்களை நடைமுறைப்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாக NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களினால் ஆராயப்பட்டது.
நடைபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து இறுதியாக நடைபெறவிருக்கும் ஊவா மாகாணசபைத் தேர்தலில், அரசாங்கம் தமது பலத்தைக் காட்ட வேண்டிய நிலையில் முக்கியத்துவம் பெற்றுள்ள சூழலில் ஏனைய அரசியற் கட்சிகளும் தமது பிரதிநிதிதத்துவத்தினை உறுதி செய்துகொள்ளும் நிலைமைகளும் காணப்படுகின்றன.
இந்நிலையில் அங்குள்ள முஸ்லிம்கள் தமக்குரிய உரிமைகளைப் உரிய முறையில் பெற்றுத்தரக்கூடிய தமது பிரதிநிதிகளைப் பெற்றுக்கொள்ளும் மனோநிலையில் இருக்கிறார்கள் என்பதும் இங்கு முக்கியமானதாக கருதப்படும் நிலையில் மேற்படி தேர்தல் குறித்து மேலதிக தீர்மானங்கள் எடுப்பது தொடர்பில் NFGGயின் தலைமைத்துவ சபை பரிசீலித்து வருகின்றது.
![PMGG-Logo[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/pmgg-logo1.jpg?w=150&h=90)
Leave a comment