மட்டக்களப்பு: விசேட வைத்திய நிபுணர் அமில ஷஷாங்க ரத்னாயக்க தலைமையில் கடந்த வருட இறுதிப் பகுதியில் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை சேவை மட்டு. போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வைத்தியசாலையின் வளப் பற்றாக்குறையின் மத்தியிலும், இந்த சிகிச்சைப்பிரிவின் மூலம் கிழக்கு மாகாணத்தின் அனைத்து மக்களுக்கும் அளப்பரிய சேவையாற்றி வருகின்றது.
பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை என்பது அடிப்படையில் அழகை மெருகூட்டவென்ற மக்களின் மாயைக்கு அப்பால் எரிகாயங்கள், விபத்து, போர்வடுக்கள் மற்றும் பிறப்பிலிருந்து வரும் குறைபாடுகள் போன்றவற்றை சரிப்படுத்தி அந்த நோயாளிகளின் தொழிலுக்கும் ஜீவனோபாயத்துக்கும் வழிவகுக்கும் எமக்கு மிகப்பயனுள்ள சிகிச்சை முறையாகும்.
கிழக்கு மாகாணத்தின் அனைத்து மக்களுக்கும் இந்த சிகிச்சைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து மிகவும் பயனடைந்து வருகின்றனர்.
விசேட வைத்திய நிபுணர் ரத்னாயக்க அவர்களின் அயராத உழைப்பினால் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்களுக்கு பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சைப் பயிற்சிகளும் அண்மையில் வழங்கப்பட்டது.
இந்நிலையில், வைத்தியர்களின் தட்டுப்பாடு காரணமாக பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை சேவை ஸ்தம்பிதமடைந்து அந்தப் பிரிவு மூடப்படும் நிலை தோன்றியுள்ளது.
ஆகக் குறைந்தது 3 வைத்தியர்களையாவது இந்தப் பிரிவுக்கு நியமிக்க வேண்டிய தேவை இருந்த போதும் சுகாதார அமைச்சு ஒருவரையேனும் நியமிக்கவில்லை.
இந்நிலையில் உள்ளகப் பயிற்சி முடித்திருந்த ஒரு வைத்தியரை உள்ளக இடமாற்றத்தின் மூலம் பெற்று, அவரைப் பயிற்றுவித்து, சேவை தொடர்ந்து வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் அண்மையில் வழங்கப்பட்ட உள்ளகப் பயிற்சியின் பின்னரான நியமனம் மூலம் இவர் மட்டு. பிராந்திய சுகாதார சேவைப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இருந்த போதும் சேவையின் அவசியத்தேவை கருதி சுகாதார அமைச்சு அவர் தொடர்ந்தும் மட்டு. போதனா வைத்தியசாலையின் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சைப்பிரிவில் கடமையாற்ற அனுமதியளித்திருந்தது.
ஆனால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நியாயமற்ற தலையீடு காரணமாக அந்த வைத்தியர் அங்கிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சைசேவையின் அவசியத்தேவை கருதி அனுபவமுள்ள சத்திர சிகிச்சைப் பிரிவு வைத்தியர் ஒருவரை உள்ளக இடமாற்றம் மூலம் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் மீண்டும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முறையற்ற அழுத்தம் காரணமாக அந்த வைத்தியர் கொழும்பு வைத்தியசாலைக்கு விடுவிக்கப்படவுள்ளார்.
இவ்வைத்தியர் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மட்டு. போதனா வைத்தியசாலைக் கிளையின் செயலாளராக இருந்த காலத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் தாய்ச் சங்கத்தின் அராஜகங்களுக்கு எதிராக குரல் கொடுத்ததின் பழிவாங்கும் செயற்பாடுதான் இது என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த இழுபறி நிலையை அடுத்து வைத்தியசாலை நிர்வாகம் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை பிரிவை மூடிவிட விசேட வைத்திய நிபுணர் அமில ஷஷாங்க ரத்னாயக்கவுக்கு அறிவுறித்தியுள்ளது.
இதை விட இன்னும் பல விசேட சிகிச்சைப் பிரிவுகள் அண்மைக் காலங்களில் மட்டு. போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
வாய், தாடை, முக விசேட சிகிச்சைப் பிரிவு ((OMF Surgical Unit)), சிறுநீரக சன்னி சத்திர சிகிச்சைப் பிரிவு (Genito Urinary Surgical Unit), சிறுநீரக மருத்துவ பிரிவு (Nephrology Unit), நரம்பியல் மருத்துவ பிரிவு (Neurology Unit) மற்றும் நரம்பியல் சத்திர சிகிச்சைப் பிரிவு (Neuro Surgical Unit ) போன்றவை இவற்றுள் அடங்கும்.
இப்பிரிவுகள் அனைத்தும் மிகுந்த வளப்பற்றாக்குறையுடன் இயலுமான சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஏறத்தாள 40 விசேட வைத்திய நிபுணர்கள் மட்டு. போதனா வைத்தியசாலையில் பலதுறை விசேட வைத்திய சேவைகளை வழங்கி வருகின்றனர். இங்கு கடமையாற்றும் வைத்தியர்களின் கருத்துப்படி, தற்போதைய அரச மருத்துவ அதிகாரிகள் தாய்ச் சங்கம் வட -கிழக்குப் பிரதேச மக்களின் வைத்தியசேவை தொடர்பாக கிஞ்சித்தும் கரிசனையற்று, தங்களின் சுயநலமான அரசியல் கலந்த நிகழ்ச்சி நிரலை முன்னிறுத்தி செயற்படுவதுடன், மக்கள் முன் முதலைக்கண்ணீர் வடிப்பதாக குற்றஞ்சுமத்துகின்றனர்.
அரச மருத்துவ அதிகாரிகள் தாய்ச் சங்கத்தின் அராஜகமான செயற்பாடுகளாலும் அழுத்தங்களாலும் மேலும் பல வைத்தியர்கள் இவ்வாறு விடுவிக்கப்படுமிடத்து, சேவைகளைக் குறைக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு வைத்தியசாலை நிர்வாகம் தள்ளப்படும் எனத்தெரிவித்தனர்.
இதற்கான முழுப்பொறுப்பையும் சுகாதார அமைச்சு ஏற்க வேண்டும். ஏனெனில், நாடளாவிய ரீதியில் பாரபட்சமற்ற முறையில் சுகாதார சேவையைப் பேணவேண்டிய கடப்பாடு அதற்குண்டு என மேலும் தெரிவித்தனர்.
நிர்வாகத்துறை சார்ந்தவர்கள் மக்களைப் பணயம் வைக்கும் தொழிற்சங்க அரசியலுக்கு ஒருபோதும் துணை நிற்கக்கூடாது எனவும் தெரிவித்தனர். இது தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளருக்கு மட்டு. போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்களனைவரும் ஒப்பமிட்டு கடிதமொன்று அனுப்பியுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.
Published by

Leave a comment