ஆரோக்கிய உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டும் காத்தான்குடி மக்கள்

batticaloa hospital (2)– அபூஸைனப்

காத்தான்குடி: காத்தான்குடியில் தற்பொழுது அதிகமான ஆண்கள், பெண்கள் உட்பட தங்களது உடல் ஆரோக்கியத்தைக் கருத்திற்கொண்டு காத்தான்குடி கடற்கரைப் பகுதியிலும், காத்தான்குடி மட்டு வாவி-ஆற்றங்கரைப் பகுதியிலும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்று நேரமும் சோறு, கறி, பொறியல், மாலை நேரங்களில் எண்ணெய் ஆகாரங்கள் மற்றும் இனிப்புவகைகளை அன்றாட உணவாக உட்கொண்டுவந்த காத்தான்குடி மக்கள், தற்பொழுது தங்களது உணவுப் பட்டியலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி, உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதிலும் அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர்.

கடற்கரையை அண்மித்த நெடுவீதியிலும், ஆற்றங்கரை நெடுவீதியிலும் சுப்ஹூத் தொழுகையின் பின்னர் நடைப்பயிற்சியில் ஈடுபடும் ஆண்களையும், பெண்களையும் இவ்விடங்களில் காணமுடிகின்றது.

beach

அதுமாத்திரமன்றி, இவ்விடங்களுக்கு நடைப்பயிற்சிக்காக வருபவர்கள், அன்றாடம் கறிக்குத் தேவையான மீன்களை அங்கே வாங்கிச் செல்வதையும் காணமுடிகிறது.

மேலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் காத்தான்குடியிலிருந்து ஐந்தாம் கட்டை வரையிலும், காத்தான்குடியிலிருந்து கல்லடிப் பாலம்வரையிலும் ஆண்கள், தங்களது உடல் ஆரோக்கியத்துக்காக துவிச்சக்கர வண்டிகளில் சென்று வருவதையும் காணமுடிவதுடன், சில வீடுகளிலும் உடற்பயிற்சி சாதனங்கள் இருப்பதையும் காணமுடிகிறது.

வயோதிபர்களுக்கு மாத்தரிமன்றி தற்பொழுது சிறுவயதினருக்கு ஏற்படும் ‘கொலஸ்ட்ரோல்’, ‘பிரசர்’, உடற்பருமன் மற்றும் கொழுப்புசார்ந்த நோய்களைக் குறைக்க அல்லது கட்டுப்படுத்த நடைப்பயிற்சியை வைத்தியர்கள் வற்புறுத்துவதால் இவ்வாறான ஆரோக்கிய நடைகளில் காத்தான்குடி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

1980ஆம் ஆண்டிற்கு முன்னர் நடை, வேளாண்மை, துவிச்சக்கரவண்டி, வீட்டு வேலைகள் என தங்களை அர்ப்பணித்து வந்த காத்தான்குடி சமூகம், அதன் பின்னர் உலகத்தின் முன்னேற்றத்தினை நோக்கி தங்களையும் இலகுவான வாழ்க்கைக்கு மாற்றிவந்தது.

இதன் பின்னர் சொகுசுவாழ்க்கைக்கு ஏற்ப, மோட்டார் சைக்கிள், ஏனைய வாகனங்கள், தொலைக்காட்சிக்கு முன் உட்கார்ந்திருத்தல், தொலைபேசி வாய்ப்புக்கள், முச்சக்கரவண்டிப் பயணம் போன்ற காரணங்களால் நடை மற்றும் வீட்டு வேலைகளில் ஈடுபடும் மறைமக உடற்பயிற்சிகள் தவிர்க்கப்பட்டு வந்தன.

சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் துவிச்சக்கரவண்டி ஓடுபவர்களை வேடிக்கையாகப் பார்த்த எமது சமூகம், தற்பொழுது துவிச்சக்கரவண்டிக்கு மீண்டும் திரும்பியிருக்கின்றது. மீண்டும் வீட்டுக்கு வீடு துவிச்சக்கர வண்டிகள் வந்திருக்கின்றன. இளைஞர்களும், வயோதிபர்களும் தற்பொழுது துவிச்சக்கர வண்டிகளை செலுத்துவதை தங்களது வாடிக்கையாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment