வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனுடன் பாலியல் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் வெள்ளை மாளிகை பயிற்சி ஊழியர், மோனிக்கா லூயின்ஸ்கி, அவ்விவகாரம் குறித்து இதனது நீண்ட கால மௌனத்தைக் கலைத்து, மனம் திறந்திருக்கிறார்.
அமெரிக்காவின் ‘வேனிட்டி பேர்’ என்ற சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில், இப்போது 40 வயதாகும் மோனிக்கா, கிளிண்டனுடன் நடந்த இந்த பாலியல் தொடர்பு குறித்து தான் வருந்துவதாகக் கூறியிருக்கிறார்.
அதிபர் கிளிண்டன் தன்னைப் பயன்படுத்திக்கொண்டார் என்று கூறியிருக்கும் மோனிக்கா, ஆனால் தங்களுக்குள் ஏற்பட்ட தொடர்பு என்பது இருவரும் மனதொப்பி நடந்ததுதான் என்றும் கூறியிருக்கிறார்.
1998ல் பில் கிளிண்ட்ன் அதிபர் காலத்தின் முடிவில் நடந்த இந்த பாலியல் சம்பவம், பில் கிளிண்டன் அமெரிக்க நாடாளுமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டுப் பதவியிறக்கப்பட நடந்த முயற்சிகளுக்கு வழி வகுத்தது என்பது நினைவு கூரத்தக்கது. இந்த உறவு குறித்து கிளிண்டன் பொய் சொன்னார் என்ற குற்றச்சாட்டில் எதிர்க்கட்சியினரான, குடியரசுக் கட்சியினர் அவர் மீது குற்றம் சாட்டி பதவி நீக்கம் செய்யும் வழிமுறையைக் கொண்டுவந்தனர்.
ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது.
இந்த விவகாரத்தில் அதிபர் கிளிண்டனைப் பாதுகாக்க, தான் ஒரு பலியாடாக்கப்பட்டதாகவும் மோனிக்கா கூறுகிறார்.
கிளிண்டன் நிர்வாக அதிகாரிகள், அவர் மீது வழக்கு தொடர்ந்த சிறப்பு ப்ரொஸிக்யூட்டரின் ஏவலாட்கள், இரு கட்சிகளின் ஆட்கள் ,ஊடகங்கள் என்று எல்லோருமே தன் மீது கறை பூசியதாக மோனிக்கா கூறுகிறார்.
இவர்கள் எல்லோருமே அதிகாரத்தில் இருந்தவர்கள் என்பதால், இந்தக் கறை நிலைத்துவிட்டது என்றும் மோனிக்கா கூறுகிறார்.
இந்த விவகாரத்துக்குப் பின்னர், வெள்ளை மாளிகையைவிட்டு நீங்கிய மோனிக்கா, பிறகு, கைப்பை டிசைனராகவும் அதன் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் சிறிது காலம் வேலை செய்தார்.
பிறகு லண்டனுக்கு மேல் படிப்பு படிக்கச் சென்ற மோனிக்காவுக்கு, அவரது கடந்த காலம் காரணமாக, அமெரிக்காவில் வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருந்தது என்கிறார்.
இப்போது தன்னுடைய கதையைச் சொல்வது என்பது, தனது கடந்த காலத்துக்கு ஒர் “இலக்கை, நோக்கத்தை” தருவதற்குத்தான் என்று கூறும் மோனிக்கா, “ஒரு வேளை தன்னுடைய கதையைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், இது போல அவமானப்படுத்தப்பட்ட மற்றவர்களுக்கு உதவ முடியும் ” என்று கருதுவதாகக் கூறுகிறார்.
கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் 2016ல் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடலாம் என்று யூகங்கள் நிலவும் சூழலில், லூயின்ஸ்கி விஷயம் மீண்டும் தலைதூக்குவது, ஒரு வேளை இந்த விவகாரத்தை மீண்டும் நினைவுபடுத்தி, ஹிலாரிக்கு எதிராகப் பயன்படுத்தலாம் என்ற குடியரசுக் கட்சியினரின் கணக்காக இருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் யூகிக்கின்றனர்.
– BBC
Published by


Leave a comment