‘தேவைப்படுமானால் பொதுபல சேனா தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் நான் தயாராகவுள்ளேன்’ – காதர் எம்.பி.

CADERகொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாம் அவரைச் சந்திப்பதற்கு கடிதம் எழுதி அனுமதி பெறவேண்டுமா என்று பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் கேள்வியெழுப்பியுள்ளார்.

 சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் இல்லத்தில் ஒழுங்கு செய்த செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள்.

அந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாவும், பிரதியமைச்சர்களாகவும், எம்.பிக்களாகவும் இருக்கிறோம். ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டங்களிலும், ஆளும் கட்சிக் கூட்டங்களிலும் பங்குபற்றுகிறோம்.

இவ்வாறான நிலையில் எமது ஜனாதிபதி அவர்களைச் சந்திப்பதற்கென நாம் கடிதம் எழுதி அனுமதி பெற வேண்டுமா. இது என்ன புதுமையான கதையாக இருக்கிறது. எமது ஜனாதிபதியை எமக்கு எந்த நேரத்திலும் சந்திக்க முடியும். அப்படியிருக்கையில் கடிதம் எதற்கு. ஜனாதிபதி அவர்களை சந்திப்பதற்கு 16 முஸ்லிம் எம்பிக்கள் கையெழுத்திட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும், அக்கடிதத்தில் நான் கையெழுத்திடவில்லையென்றும் சிலர் கூறித்திரிகின்றனர். ஆனால், அக்கடிதத்தில் கையெழுத்திடுமாறு கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள எந்தவொரு எம்பியுமே என்னிடம் கேட்கவில்லை.

இவ்வாறான நிலையில் எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் கூறித்திரிவது கவலையளிக்கிறது. நான் ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கட்சியைச் சேர்ந்தவன்தான். அதற்காக சமூகத்தின் நலன்களுக்காக எவரிடத்தில் சென்று பேசுவதற்கும் பின்நிற்கமாட்டேன். முஸ்லிம்களின் சமய, சமூக விவகாரங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்கவும் மாட்டேன். தேவைப்படுமானால் பொதுபல சேனா தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் நான் தயாராகவுள்ளேன்.

இந்தநாட்டில் நாம் ஒருபோதும் தனிநாடு கோரியவர்கள் அல்ல. அதேபோன்று எந்தவொரு இனத்துக்கும் எதிராகச் செயற்பட்டவர்களும் அல்ல. எப்போதும் எந்தச் சந்தர்ப்பத்திலும் நாட்டுப்பற்றுடனேயே செயற்பட்டு வருகின்றோம்.

நான் ஐ.தே.க உறுப்பினராக நீண்டகாலம் இருந்தேன். அக்காலத்தில் ஆற்றமுடியாத சேவைகளை, எமது ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் எமது மக்களுக்காக குறுகிய காலத்தில் செய்துகொடுத்திருக்கிறேன். கசினோ சூதாட்டத்துக்கு லைசன்ஸ் வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அவர்களும், அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களும் அறிவித்தனர்.

அதற்கேற்ப நாம் ஆதரவாக வாக்களித்தோம். ஆனால் இதனை எதிர்த்தவர்கள் சபைக்கு வந்து எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். அவர்கள் அதனைச் செய்யவில்லையென்றும் கூறினார்.

– தினகரன்

Published by

Leave a comment