‘அரசியல்வாதிகளினாலும் கட்சிகளினாலும் அரசாங்கத்தினாலுமே தொழிலாளர்கள் இன்று அதிகம் சுரண்டப்படுகின்றார்கள்’- PMGGயின் மேதின நிகழ்வில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
– PMGG ஊடகப் பிரிவு
காத்தான்குடி: ‘தொழிலாளர்கள் முதலாளிமார்களினால் சுரண்டப்படுகின்ற நிலைமையையும் தாண்டி இன்று தொழிலாளர்கள் அரசியல்வாதிகளினாலும் கட்சிகளினாலும் அரசாங்கத்தினாலுமே அதிகம் சுரண்டப்படுகின்றார்கள் அவர்களிடமிருந்துதான் தொழிலாளர்கள் விடுதலையும், உரிமைகளையும் இன்று பெற வேண்டியுள்ளது.
அந்த விடுதலைக்கான விழிப்புணர்ச்சியை தொழிலாளர்கள் பெற வேண்டும் என்பதையே இன்றைய தொழிலாளர் தினச் செய்தியாக எமது இயக்கம் முன்வைக்கிறது’ என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மேதின நிகழ்வும், காத்தான்குடி நகர சபையில் கடமையாற்றும் தொழிலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் கடந்த வியாழக்கிழமை மாலை (01.05.2014) காத்தான்குடியிலுள்ள அவ்வியக்கத்தின் மக்கள் அரங்கில் சூறா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சகோதரர் எஸ்.எச்.எம். பிர்தௌஸ் ஆசிரியர், நீதிக்கும் சமாதானத்திற்குமான அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.நஜா முஹமட் உட்பட இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நகர சபைத் தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது:
அர்த்தமற்ற செயற்பாடுகள் அதிகரிப்பு
இன்று உலகளாவிய ரீதியில் தொழிலாளர்களின் தினமாக மேதினம் கொண்டாடப்படுகின்றது. எமது நாட்டிலும் தலைநகர் உள்ளிட்ட முக்கியமான நகரங்களில் இத்தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. எனினும் எந்த இலட்சியத்திற்காக இத்தினம் உருவானதோ அந்த இலட்சியம் மறக்கப்பட்டு எந்தவிதமான அர்த்தமும் இல்லாத ஒரு சம்பிரதாய நிகழ்வாகவே இலங்கையில் மேதினம் கொண்டாடப்படுகின்றது.
நமது நாட்டில் மேதினம் மாத்திரமன்றி பல்வேறு விடயங்களும் இன்று அர்த்தமற்றதாகவே மாறிப்போயுள்ளது. நாட்டில் பாரிய அளவில் பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டிருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் புள்ளி விபரங்களோடு அறிக்கை சமர்ப்பிக்கின்றார். ஆனால் நாட்டு மக்கள் தினந்தினம் வறுமையால் வாடும் நிலை அதிகரித்துச் செல்கின்றது. மட்டக்களப்பு மாவட்டம் நாட்டில் வறுமையில் முதலிடத்தை அடைந்துள்ளது.
பால்மா பொதிகளைக் கூட வாங்க முடியாமல் இன்று மக்கள் கரண்டிகளில் அளந்து பால் மாவினை கடைகளில் வாங்கும் அளவுக்கு நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது.
நாட்டின் உட்கட்டமைப்புப் அபிவிருத்திப் பணிகளும் இவ்வாறே உரிய நோக்கங்களை நிறைவு செய்யாத அர்த்தமற்ற நடவடிக்கைகளாக மாறியிருக்கின்றன. ஹம்பாந்தோட்டையில் சர்வதேச விமான நிலையத்தை அமைத்தார்கள். ஆனால் அங்கே விமானங்கள் வருவதைக் காண முடியாமல் இருக்கின்றது.
தெற்கில் துறைமுகத்தை அமைத்தால் நாட்டில் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும் என்றார்கள்.இப்போது கொழும்புத் துறைமுகத்திற்கு வாகனங்களை ஏற்றி வரும் கப்பல்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரச் செய்து, அங்கு வாகனங்களை இறக்கி பல இலட்சங்களை செலவளித்து அவற்றை மீண்டும் கொழும்புக்கு ஏற்றிவரவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதனால் வாகனங்களின் விலை இயல்பாகவே அதிகரிக்கின்றது.
பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான்
பௌத்த மதத்தைப் பாதுகாக்க வேண்டும் என்கிறது அரசாங்கம். ஆனால் பௌத்த மதம் உள்ளிட்ட அனைத்து மதங்களும் வெறுக்கின்ற சூதாட்டங்களுக்கும், மதுபான சாலைகளுக்கும் அரசாங்கம் பாதுகாப்பும், ஊக்கமும் அளித்து வழர்த்து வருகின்றது.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாக அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கின்றது. ஆனால் ஹம்பாந்தோட்டை நகர சபைத் தலைவர் கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கின்றார். அவருக்கெதிராக எந்த நடவடிக்கையினையும் அரசாங்கம் எடுக்கவில்லை.
நாட்டில் இலஞ்சம், ஊழல், மோசடி என்பவற்றை ஒழிப்பதற்காக அரசாங்கம் இலஞ்ச ஊழல் மோசடி ஒழிப்பு ஆணைக்குழுவை நியமித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி அந்த ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராகவே பாரிய ஊழல் மோசடிக் குற்றச்சாட்டொன்றைக் கையளித்திருந்தார். ஆனால் அவரது முறைப்பாட்டிற்கமைய ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுக்காமல் முறைப்பாட்டை சமர்ப்பித்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் இப்போது தொடங்கப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு மேதினக் கொண்டாட்டங்கள் மாத்திரமன்றி இந்த நாட்டில் பல விடயங்கள் அவற்றின் உரிய நோக்கங்களை இழந்து அர்த்தமற்றவைகளாகவே மாறிப்போய் இருக்கின்றன.
மேதினம் எப்படி ஏற்பட்டது?
மேதினத்தில் சிவப்பு நிறத்தில் பரவலாகக் கொடிகளும், பதாதைகளும் கட்டப்பட்டு வருகின்றன. இதனைப் பார்க்கும்போது மார்க்சீய அல்லது கம்யூனிஸ வழியில் சீனாவில் அல்லது ரஷ்யாவில் இருந்து இந்த மேதினம் பிறந்திருக்கும் என நம்மில் பலர் நினைக்கக்கூடும். ஆனால் இந்த மேதினப் போராட்டம் நிகழ்ந்ததும், தொழிலாளர்களின் உரிமைகள் கிடைக்கப்பெற்றதும் அமெரிக்காவிலாகும்.
அமெரிக்காவில் 1886ம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மெக்சிக்கோ வீதிகளில் தமது உரிமைகளைப் பெறுவதற்காக வீதிகளில் இறங்கி போராடினார்கள். தாங்கள் அளவுக்கதிகமாக வேலை வாங்கப்படுவதாகவும், வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லையென்றும், தமது தொழிலின்போது ஏற்படும் ஆபத்துக்களுக்கு உரிய காப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் குரல் கொடுத்தார்கள். இறுதியில் அவர்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது. இதனை அடியொற்றியே மேதினம் உலகத் தொழிலாளர்களின் உரிமைகள் கிடைக்கப்பெற்ற தினமாக இத்தனை காலமாகவும் உலகில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
1886ம் ஆண்டில் முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் இத்தனை வெற்றியும் அவர்களுக்கு கிடைத்ததென்றால், இத்தனை ஆண்டுகளாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற மேதினக் நிகழ்ச்சிகளினால் தொழிலாளர்களுக்கு மேலதிக வெற்றிகள் எந்தளவுக்கு கிடைத்துள்ளன என்பது குறித்து ஒவ்வொரு தொழிலாளியும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தனக்கு நோய் இருப்பதை ஒருவன் ஏற்றுக் கொண்டால்தான் அவனுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து எவராலும் அவனது நோயைக் குணப்படுத்த முடியும். ஒருவன் தான் வறுமையிலிருப்பதை உணர்ந்து கொண்டால்தான் அதிலிருந்து மீட்சி பெற அவனால் உழைக்க முடியும்.
தொழிலாளர் தினத்தைப் பற்றியும், அதில் கிடைக்க வேண்டிய தமக்கான உரிமைகள் பற்றியும் தொழிலாளர்கள் விழிப்புணர்வு பெற்றால் மாத்திரமே தொழிலாளர் நிகழ்வுகள் அவர்களின் நிலைமைகளை முன்னேற்றுவதற்கு உதவும். இவ்விழிப்புணர்வு இல்லாததன் காரணமாகவே தொழிலாளர் சமூகத்தின் வாழ்க்கைத் தரம் 127 ஆண்டுகளைக் கடந்தும் எத்தகைய முன்னேற்றமும் இன்றிக் காணப்படுகின்றது.
இலங்கையில் மேதினம்
இலங்கையைப் பொறுத்த வரையில் மேதினம் என்பது தொழிலாளர்களைப் பயன்படுத்தி, அவர்களின் முதுகுகளில் சவாரி விட்டு அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் தமது செல்வாக்குப் பலத்தை வருடத்தில் ஒரு முறை வெளிக்காட்டிக் கொள்ளும் ஒரு சம்பிரதாய நிகழ்வாகவே இன்று மாறியுள்ளது.
தொடர்ச்சியாக சுரண்டப்பட்டு நலிவடைந்திருக்கும் தொழிலாளர்களையே பயன்படுத்தி அரசியல்வாதிகளும், அரசியல்கட்சிகளும் தமது வலிமையை உலகுக்குக் காட்டிக் கொள்வதென்பது மிகவுமே பரிதாபத்திற்குரியதாகும். மாத்திரமன்றி அரசியல்வாதிகளினதும் கட்சிகளினதும் தொழிலாளர்களைச் சுரண்டுகின்ற நடவடிக்கையாகவே இது மாறியிருக்கின்றது.
எமது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தைப் பொறுத்த வரை இத்தகைய தொழிலாளர்களை இந்த அரசாங்கத்தினதும் அரசியவாதிகளினதும் சுரண்டல்களிலிளிருந்து மீட்க வேண்டும் என்பதே குறிக்கோளாகும். அந்தக் குறிக்கோளை அடைவதற்காகவே நாம் தொழிலாளர்களை கௌரவப்படுத்தி அவர்களுக்கு இன்றைய தினத்தில் முடிந்தளவான ஊக்குவிப்புக்களை வழங்கி அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான வழிமுறைகள் குறித்து மிக எளிமையான முறையில் நாம் இந்த விழிப்பூட்டலைச் செல்கின்றோம்.
வாழ்க்கைச் செலவும் வருமானமும்
வாழ்க்கைச் செலவு இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு இன்று தொழிலாளர் வர்க்கத்தினால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு சுமையாக மாறியுள்ளது. 10 வருடங்களுக்கு முன்னர் ஒரு தொழிலாளியின் கையிலிருந்த 20,000 ரூபா பணத்திற்கு வாங்கிய பொருட்களின் கால் பங்குப் பொருட்களைக்கூட இன்று அந்த 20,000 ரூபா பணத்திற்கு வாங்க முடியாதிருக்கின்றது. அந்தளவு நாட்டில் பண வீக்கமும் வரி அதிகரிப்பும் அதன் காரணமாக ஏற்பட்ட விலைவாசியும் உயர்ந்திருக்கின்றது.
வரிகளை அறவிடுவதன் மூலமே அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கின்றது. இந்த வரி அறவீடுகளில் 70 விழுக்காடுகளை உங்களைப் போன்ற தொழிலாளர்களும், நாளாந்த உழைப்பாளர்களுமே அரசாங்கத்திற்குச் செலுத்துகின்றனர். மீதி 30 விழுக்காடுதான் உச்ச செல்வ நிலையிலுள்ள தனவந்தர்களாலும், பெரிய பெரிய கம்பெனிகளாலும் அரசாங்கத்திற்கு வரியாகச் செலுத்தப்படுகின்றன.
இந்த வகையில் இந்த நாட்டின் வருமானத்தைத் தாங்கி நிற்கின்ற முதுகெலும்பானவர்கள் தொழிலாளர்களும், நடுத்தர வர்க்கத்தினர்களும்தான் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
நாட்டில் மேற்கொள்ளப்படும் துறைமுகம், விமான நிலையம், கிரிக்கெட் மைதானம், அனல் மின் நிலையம், காபட் வீதிகள், கொங்றீட் பாலங்கள், அதிவேகப் பாதைகள் போன்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்காகவெல்லாம் உலக நாடுகளும், உலக வங்கிகளும் அரசாங்கத்திற்கு வழங்குகின்ற கடன் தொகைளையும், அதற்கான வட்டித் தொகைகளையும் திருப்பிச் செலுத்துவது நமது வரிப்பணங்களின் மூலம்தான் என்பதையும் ஒவ்வொரு தொழிலாளியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் முறையான பொருளாதாரத் திட்டமிடல் இல்லாத அரசியல்வாதிகளின் செயற்பாடுகளாலும், அபிவிருத்திக் கொள்கைகளாலும் நாட்டின் சொந்த வளங்களும், உலக நாடுகள் வழங்கும் கடன் தொகைகளும் நாசமாக்கப்படுகின்றன. அதில் கணிசமான பகுதி அபிவிருத்திக் கொந்தராத்து அரசியல்வாதிகளால் கொள்ளையிடப்படுகின்றன.
நம் தலைமீது இன்று ஏற்றப்பட்டிருக்கும் வறுமை எமது தலைவிதி அல்ல என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது எமது அரசாங்கத்தினாலும், அரசியல்வாதிகளாலும் மேற்கொள்ளப்பட்ட சுரண்டல்களின் விளைவாக நம்மீது சுமத்தப்பட்டிருக்கும் சுமை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் சேவையாளர்களின் உயர்வும் தாழ்வும்
மக்களுக்குச் சேவையாற்றவென தேர்தல் காலங்களில் நம்முன்னே வருகின்ற அரசியல்வாதிகளுக்கு நாம் நமது வாக்குகளை அளித்து அவர்களை அரசியல் அதிகாரக் கதிரைகளுக்கு அனுப்பி வைக்கின்றோம். ஆனால் நமக்குச் சேவைகள் செய்வதற்காக முன் வந்த அவர்கள் எந்தவொரு தொழிலையுமே செய்யாமல் மிகக்குறுகிய காலத்தில் பெரும் குபேரர்களாக மாறிவிடும் அதிசயத்தைப் பற்றி நாம் கண்டு கொள்வது கிடையாது.
அண்மையில் ஒரு புதிய வீடமைப்புத் திட்டம் பற்றி அரசாங்கம் ஆலோசித்துள்ளதாக ஊடகங்களில் வாசிக்க முடிந்தது. அது வீடற்ற நாட்டு மக்களுக்கான வீட்டுத் திட்டம் பற்றியதல்ல. மக்களுக்குச் சேவை செய்யவென மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு வருகின்றபோது அவர்கள் தங்குவதற்காக கட்டப்படவுள்ள அதி நவீன வசதிகளையெல்லாம் உள்ளடக்கிய ஒரு ‘சுப்பர் லக்சிறி வீடமைப்புத் திட்டம்’ பற்றியதாகும். இவ்வாறுதான் மக்களின் சேவகர்களான அரசியல் அதிகாரத்திலுள்ளவர்கள் தமது சௌபாக்கியமான வாழ்க்கை வசதிகளுக்காக எமது வரிப்பணத்தை துஸ்பிரயோகம் செய்கிறார்கள்.
காத்தான்குடி நகர சபையில் நகர சுத்தித் தொழிலாளர்களாகப் பணியாற்றும் நீங்களும் இந்த நகர மக்களின் சுகநல வாழ்வுக்காக மக்கள் பணிதான் செய்து வருகிறீர்கள். சுமார் 15 – 20 வருடங்களாக இந்த ஊர் மக்களுக்காக மாபெரும் சேவையாற்றி வரும் உங்களின் வாழ்க்கைத் தரம் அன்றிருந்ததை விடவும் அதல பாதாளத்திலேயே இன்று காணப்படுகின்றது.
ஆனால் உங்களையும், இந்த நகரத்தையும் நிர்வாகிப்பதற்காக உங்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டு அதிகாரத்திற்கு வந்துள்ள அரசியல்வாதிகள் ஓரிரு வருடங்களுக்குள்ளாகவே பிரதான வீதியில் கடைகளுக்கும், பல ஏக்கர் காணிகளுக்கும், சொகுசு வாகனங்களுக்கும் சொந்தக்காரர்களாகி இருப்பது உங்களுக்கு ஆச்சரியமாகத் தெரியவில்லையா? எந்தத் தொழிலும் செய்யாமல் கதிரைகளிலும், குளு குளு அறைகளிலும் உட்கார்ந்து கொண்டு உங்களையும், இந்த ஊரையும் நிர்வாகம் செய்யும் இவர்கள் எப்படி இத்தனை கெதியில் பொருளாதாரத்தில் முன்னேறினார்கள் என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா?
எனவேதான் எமது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமானது வரி செலுத்தும் ஒவ்வொரு பிரஜைக்கும் தெளிவான விழிப்புணர்வினை ஒவ்வொரு விடயத்திலும் ஏற்படுத்தும் பணியைச் செய்து வருகின்றது. தேர்தல் காலங்களில் அரசியல் வழிப்புணர்வை ஏற்படுத்தி நல்லதொரு ஆட்சி மாற்றத்திற்கான ஆணையைக் கோருகின்றது. தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்களையும், அன்றாட உழைப்பாளிகளையும் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் எவ்வாறு சுரண்டி அவர்களின் முதுகுகளில் சவாரி செய்கின்றன என்பதனை எடுத்துக் கூறுகின்றது. உங்களைப் போன்ற தொழிலாளர்கள் வர்க்கம் விழிப்படைந்தாலே நீங்களும் நாங்களும் எதிர்பார்க்கும் மாற்றம் ஏற்படும்.
எமது நல்லாட்சிக் கொள்கையில் மக்களின் பங்கேற்பு என்பது முக்கியமான ஒரு கூறாகும். எனவே இந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தில் தொழிலாளர்களான நீங்களும் பார்வையாளர்களாகவும், பயனாளிகளாகவும் இருக்காமல் பங்காளிகளாகவும் இணைய வேண்டியத அவசியமாகும். அதனை இன்றைய தொழிலாளர் தினத்தில் ஒவ்வொருவரும் தமக்குத் தாமே பிரதிக்னை செய்து கொண்டு ஒறுதியுடன் செயற்பட முன்வர வேண்டுமென இயக்கத்தின் சார்பாக வேண்டுகிறேன் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நகர சபைத் தொழிலாளர்கள் சார்பில் சகோதரர் ஜுனைதீன் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
Leave a comment