‘எனது 30 வருட சேவைக் காலத்தில் இவ்வாறானதொரு தொழிலாளர் கௌரவிப்பை நான் சந்தித்ததேயில்லை’ – தொழிற்சங்கத் தலைவர் பழனி

FJP May Day @ Kinniya 01.05.2014 (14)– PMGG ஊடகப் பிரிவு
– கிண்ணியாவில் FJP ஏற்பாட்டில் நடைபெற்ற மேதின நிகழ்வில் உருக்கம்
கிண்ணியா: நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணி (FJP)யின் ஏற்பாட்டில் நேற்று (01.05.2014) சின்னக் கிண்ணியாவில் நடைபெற்ற மேதின தொழிலாளர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட கிண்ணியா தொழிற்சங்கத் தலைவரான

திரு. பழனி அவர்கள், தமது தொழிலாளர்களுக்கு நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணியினால் வழங்கப்பட்ட கௌரவத்தைக் கண்டு மனமுருகி கண்ணீர் மல்க மேடையில் உரையாற்றினார்.

அவர் தமதுரையில், ‘தனது 30 வருட சேவைக் காலத்தில் எத்தனையோ மேதின நிகழ்வுகளைக் கண்டிருக்கின்றேன். எல்லா மேதினங்களிலும் தொழிலாளர்களான நாங்கள்தான் மிகுந்த கஸ்டங்களையும், துன்பங்களையும் எதிர்கொள்வோம். ஆனால் இன்று நடைபெற்ற இந்த மேதின நிகழ்வு எனது வாழ்க்கையில் நான் என்றுமே கண்டிராத வகையில் எம்மை முழுமையாகவே கௌரவப்படுத்தியுள்ளது’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், ‘இந்த மேதினத்தில்தான் நாங்கள் உண்மையாகவே கௌரவிக்கப்பட்டதாகக் கருதுகின்றோம். எங்களை எந்த வகையிலும் கஸ்டப்படுத்தாமல், எங்களை மரியாதையுடன் அழைத்து, கதிரைகளில் அமரச் செய்து, மேடையிலும் ஏற்றிப் பேச வைத்து கௌரவப்படுத்திய விதம் எமக்கு முற்றிலும் புதிய அனுபவமாகும்’ என கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார்.

கிண்ணியா நகர சபை உறுப்பினர் மௌலவி ஜுனைதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த மேதின நிகழ்வில் நீதிக்கும் சமாதனத்திற்குமான முன்னணியின் தலைவர் அஷ்ஷெய்க் MR. நஜா மொஹமட், வட மாகாண சபை உறுப்பினர் அஸ்ஸெய்க் அஸ்மின் அய்யூப் நளீமி, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் பொறியியலாளர் MM.அப்துர் றஹ்மான் உள்ளிட்ட கிண்ணியா பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.

தலைமையுரையாற்றிய கிண்ணியா நகர சபை உறுப்பினர் மௌலவி ஜுனைதீன் தனதுரையில், ‘இஸ்லாம் தொழிலாளர்களின் உரிமைகளை என்றோ வழங்கியுள்ளது. அவற்றை நாம் மறந்து விடாமல் மீட்டிப்பார்க்க வேண்டியது அவசியமாகும். தற்காலத்தில் தொழிலாளர் சமூகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு நெருக்கடிகளுக்கும் இஸ்லாம் வலியுறுத்தியுள்ள தொழிலாளர் உரிமைகளின் அடிப்படையில் நாம் உரிய தீர்வுகளைக் காண வேண்டும்’ எனக் குறிப்பிட்டார்.

FJP May Day @ Kinniya 01.05.2014 (14)

இதனைத் தொடர்ந்து நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணியின் தலைவர் அஷ்ஷெய்க் MR. நஜா மொஹமட் உரையாற்றினார்.

அவர் தமதுரையில், ‘மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், உரிமைகளை வென்றெடுப்பதற்கும் என உருவாக்கப்பட்ட அரசியல் வழிமுறைகள் அனைத்துமே இன்று திசைமாறிச் செல்கின்றன. மக்களின் நலன்களுக்கு மட்டுமன்றி நாட்டின் ஒட்டுமொத்த நலன்களுக்கு எதிராகவும் அவை இன்று செயற்படுவதனை நாம் நாளாந்தம் காண்கின்றோம். ஒருசில தினகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட கெசினோ சட்டமூலத்தின் மூலமாகவும் அதனைக் கண்டோம். இஸ்லாம் உட்பட அனைத்து மதங்களும் சூதாட்டத்தை வெறுப்பதன் காரணமாக நாம் அதனை எதிர்க்கிறோம் என சுமந்திரன் MP மிகத் தைரியமாகக் கூறிய அந்த சபையில், இஸ்லாத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நாம் இதனை எதிர்க்கிறோம் எனச் சொல்வதற்கு முதுகெலும்புள்ள ஒரு முஸ்லிம் MPயைக் கூட நாம் அங்கு காணவில்லை என்பது எமது துரதிஷ்டமாகும்’ எனத் தெரிவித்தார்.

வட மாகாண சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப் நளீமி அங்கு பேசுகையில், ‘தொழிலாளர் தினம் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்ற போதிலும் அவர்களின் சுதந்திரமும், உரிமைகளும் இன்று பறிக்கப்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. தொழிலாளர் சமூகம் எதிர் கொள்ளும் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கும் இன்று அரசியல்வாதிகளை நாடியே தீர்வுகளைப் பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அரசியல்வாதிகளின் கொத்தடிமைகளாகவும், எடுபிடிகளாகவுமே இன்று தொழிலாளர் சமூகம் மாற்றப்பட்டுள்ளது கவலைக்குரியது. தொழிலாளர்களின் சுயமும், சுதந்திரமும் இன்றைய தொழிலாளர் தினத்தில் இருந்தாவது மாற்றம் பெற வேண்டும்’ எனப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தன் சூறா சபை உறுப்பினர் பொறியியலாளர் MM. அப்துர் றஹ்மான் தொழிலாளர் மகத்துவம் குறித்து நீண்ட உரையொன்றை ஆற்றினார்.

முன்மாதிரிமிக்க அரசியல் மாற்றத்தின் தேவை பற்றியும், அதனூடாக தொழிலானர் சமூகம் உட்பட அனைத்து மக்களும், தாய் நாடும் அடைய வேண்டிய நன்மைகள் குறித்தும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமூகத்திற்கு விடுதலையென்றும், முஸ்லிம் சமூகத்தின் உரிமைக் குரல் என்றும் கோசங்களை எழுப்பிக் கொண்டு அரசியல் அதிகாரத்திற்கு வந்த தலைவர்கள் பலரும் இன்று தமக்கு வாக்களித்து அரியணை ஏற்றிய முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரம் விசுவாசமற்றுப் போகவில்லை. அவர்கள் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் இஸ்லாம் மார்க்கத்திற்கும் விசுவாமற்றவர்களாகிப் போயுள்ளனர் எனக் குறிப்பிட்ட பொறியியலாளர் அப்துர் றஹ்மான், இதற்கு மிகக் கிட்டிய உதாரணம்தான் நாடாளுமன்றத்தில் மறைமுகமாகக் கொண்டுவரப்பட்ட கசினோ சூதாட்டச் சட்ட மூலத்திற்கு அவர்கள் நேரடியாக ஆதரவளித்ததும், பகிஸ்கரிப்புச் செய்து மறைமுகமாக அச்சட்டமூலம் வெற்றி பெற உதவியதுமாகும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

ஊவா மாகாண சபைத் தேர்தல் எதிர்கொள்ளப்படும் இவ்வேளையில் நாட்டு முஸ்லிம்களின் பிரச்சினைகளை மறந்து விட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம், ஊவா மாகாணத் தேர்தலில் புரட்சியொன்றைச் செய்யப் போவதாக இப்போது சூளுரைத்து நிற்கின்றார். இவ்வாறான ஆரோக்கியமற்ற அரசியல் தலைமைகளை முஸ்லிம் சமூகம் கைகழுவுவதன் மூலமே எதிர்காலத்தில் எமது முஸ்லிம் சமூகம் உரிய கௌரவத்துடன் இம்மண்ணில் வாழ முடியும் என்றார் அவர்.

கிண்ணியா மண்ணில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மேதின நிகழ்வைக் குழப்புவதற்கும், நிறுத்துவதற்குமாக உள்ளுர் அரசியல்வாதிகள் பலரும் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் உள்ளுர் மக்களின் பேராதரவினால் அவர்களின் முயற்சிகள் யாவும் தவிடுபொடியாகிப் போனது குறிப்பிடத்தக்கதாகும்.

FJP May Day @ Kinniya 01.05.2014 (17)

 

 

 

 

Published by

Leave a comment