திருகோணமலை: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கௌரவ முதலமைச்சர்களுக்கிடையிலான வரலாற்றுச் முக்கியத்துவம் கொண்ட சந்திப்பானது, கடந்த புதன்கிழமை (30.04.2014) கிழக்கு மாகாண செயலகத்தில் நடைபெற்றது யாவரும் அறிந்த விடயமாகும்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் விடுக்கப்பட்ட இச்சந்திப்புக்கான அழைப்பினை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டமைக்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கௌரவ முதலமைச்சர்களுக்கு எமது முன்னணியின் சார்பில் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இச்சந்திப்பை மேற்கொள்ளுமாறு நாம் இரு மாகாணங்களின் முதலமைச்சர்களையும் கேட்டுக் கொண்டதானது, இம்மாகாணங்களில் வாழும் மூவின சமூகங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தையும், சக வாழ்வையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயேயாகும்
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான சந்தேகப் பார்வைகளையும், இடைவெளிகளையும் களைந்து இரு மாகாண மக்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தையும், பரஸ்பர நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் எதிர்பார்ப்பாகும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற மூவின மக்களும் தமது மாகாணங்களில் காணப்படும் வளங்களையும், வாய்ப்புக்களையும், அதிகாரங்களையும் இவ்வாறான ஒரு நல்லிணக்கப் புரிதலோடும், இணக்கப்பாட்டுடனும் பகிர்ந்து கொள்வதன் மூலமே தங்களையும், தமது மாகாணங்களையும் வளப்படுத்திக் கொள்ள முடியும் என்பது எமது நம்பிக்கையாகும்.னை யாரும் மறுக்க முடியாது. இச்சூழ்நிலையில் இரு மாகாணங்களிலும் வாழக்கூடிய சமூகங்களுக்கிடையில் இவ்வாறான நல்லிணக்க இணக்கப்பாட்டினை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் வலிதாக உள்ளதை எமது முன்னணி அடையாளங் கண்டதன் அடிப்படையிலேயே அந்த உயரிய இலக்கை இரு மாகாணங்களின் முதலமைச்சர்களின் சந்திப்பைக் கொண்டு தொடக்கி வைத்துள்ளது.
இதனை குறுகிய அரசியற் கண்ணோட்டத்துடன் நோக்காது இவ்வாறான முயற்சிகளை தேசிய நல்லிணக்கத்திற்கும், தேசத்தின் அபிவிருத்திக்கும் அனுகூலமான முன்முயற்சிகளாகவே பார்க்கவேண்டும். தேசப்பற்றுள்ள அனைவரும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகின்றோம்.
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், சமூகங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டு அரசியலையும் தேசிய நலன்களைக் கருத்திற்கொண்டு முன்னெடுப்பதென்பது எமது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அடிப்படைக் கோட்பாடுகளில் பிரதானமான அம்சமாகும்.
இந்த நோக்கத்தை இரு மாகாணங்களின் கௌரவ முதலமைச்சர்களும் புரிந்து கொண்டு அர்ப்பணிப்புடன் நேரில் சந்தித்து உரையாடி தொடக்கி வைத்திருப்பது போல் ஏனையோரும் சாதகமாகப் புரிந்து கொண்டு எதிர்காலத்தில் இதயசுத்தியோடு எமது முன்னணியின் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டும் என வேண்டிக் கொள்கின்றோம்.
Published by

Leave a comment