பொத்துஹர ரயில் விபத்து சம்பவம்: ரயில் நிலைய அதிகாரி, சாரதி உட்பட ஐவர் இடை நிறுத்தம்

Sri_Lankan_train,Northern_Line,Sri_Lanka[1]கொழும்பு: குருநாகல் பொத்துஹர ரயில் விபத்தையடுத்து பொத்துஹர ரயில் நிலைய அதிபர், தெயட்டகிருள ரயில் சாரதி உட்பட ஐந்து பேர் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவரென ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

பொத்துஹர பகுதியில் இரு ரயில்கள் ஒன்றுடனொன்று மோதியதில் இரு ரயில்களும் சேதமடைந்ததோடு ரயில் உத்தியோகத்தர்கள் உட்பட 75 பேர் காயமடைந்தனர். ரயில் விபத்தினால் 10 கோடி ரூபா வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டிருப்பதாக ரயில்வே வாணிப அத்தியட்சகர் சிகிர தெரிவித்தார். விபத்தினால் காயமடைந்த பயணிகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம பணித்துள்ளதோடு தான் அடங்கலான ரயில்வே அதிகாரிகள் காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளை சந்தித்து சிகிச்சைக்கு தேவையான பண உதவிகளை வழங்கியதாக அவர் மேலும் கூறினார். காயமடைந்த ரயில் ஊழியர்களுக்கு கடமை நேரத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கான நஷ்டஈடு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியாவில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயில் பொத்துஹர ரயில் நிலையத்தில் தரித்து நின்றபோது, கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற அதிவேக ரயில் அதனுடன் மோதி விபத்துக்குள்ளானது. உரிய வகையில் சமிக்ஞை வழங்காததால் விபத்து சம்பவத்திருப்பதாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் இரு விசேட குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு விசாரணைகளுக்காக பொத்துஹர ரயில் நிலையப் பொறுப்பதிகாரி தெயட்ட கிருள ரயில் சாரதி. உதவியாளர், பாதுகாவலர், சமிக்ஞை கட்டுப்பாட்டாளர் ஆகியோர் பணிநீக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 45 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 14 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதோடு அதனிடையே 3 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இதேவேளை நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தினால் 5 தூர சேவை ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. விபத்துக்குள்ளான ரயில்களை அகற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டதோடு நேற்று மாலை முதல் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Published by

Leave a comment