careem sir– எம்.எம். ஜலீஸ், ஐக்கிய இராச்சியம்

காத்தான்குடி வரலாற்றின் ஆரம்பப் பாடசாலையாக அமையும் அல்ஹிறா வித்தியாலயத்தில் சுமார் 1960 தொடக்கம் 2000 ஆண்டு காலப்பகுதிவரை கல்வி கற்ற அத்தனை மாணவ, மாணவிகளின் உள்ளங்களிலும் இன்றும் மறவாத ஓர் ஆசான் என்றால் அது மர்ஹூம் அல்ஹாஜ். எம்.எஸ்.எம்.ஏ. கரீம் ஆசியர் அவர்கள்தான்.

தனது பாடசாலைக் கல்வியை மட்/சிவானந்தா வித்தியாலயத்தில் ஆங்கில மொழியில் கற்ற மர்ஹூம் கரீம் ஆசிரியர் அவர்கள், அன்று ஆரம்பப் பாடசாலையாக இருந்த அல்-ஹிறா வித்தியாலயத்தில் தனது ஆசிரியர் கடமையைப் பொறுப்பேற்றார்.

ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்குரிய தமிழ், கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களை மிகச் சிறப்பாகக் கற்பித்து மாணவர்கள் உள்ளங்களிலும், பெற்றோர்களின் உள்ளங்களிலும் நீங்காத இடத்தைப் பெற்றார்.

எங்கே வீட்டுக்குப்போக மணி ஒலிக்கும் என காத்திருக்கும் மாணவர்கள், கரீம் ஆசிரியருடைய பாடத்திலிருக்கும்போது மாத்திரம் பசி, வீடு செல்லல் அத்தனை வெளிச் சிந்தனைகளையும் மறந்து பாடங்களை இரசித்துக் கற்ற வரலாறுகள் கொஞ்சமல்ல!

தான் ஓரு தமிழ்பாட ஆசிரியராக அன்றைய அல்-ஹிறாவில் க.பொ.த. சா/த  வரையுள்ள மாணவர்களுக்கு கல்வி போதித்து வந்தபோதிலும், ஆங்கிலத்தையும் அவருடைய தனிப்பானியில் மாணவர்களுக்கு கற்பித்து வந்தார்.

கசப்பாய் இருக்கும் பாடங்களை கரும்பாக மாற்றி, மாணவர்களின் கற்கும் ஆற்றலை விருத்தி செய்தார். மாணவர்களின் ஓழுக்கம், கட்டுப்பாடு, உடைகள் விடயத்தில் அதிக அக்கரை செலுத்தி வந்ததுடன், தேவை ஏற்படுமிடத்து, பாடசாலை தவிர்ந்த நேரங்களில் பெற்றோர்களை வீடுதேடிச் சென்று சந்தித்து, மேற்படி மாணவர்களின் விடயங்களை எடுத்துச் சொல்வார்.

புதிய வெண்கட்டி கொண்டு கரும்பலகையில் எழுதவிரும்பும் எத்தனையோ அசிரியர்களுக்கு மத்தியில், கரீம் ஆசிரியர் அவர்கள் தனியிடம் பெறுகிறார். கடலை அளவு ஓர் வெண்கட்டி இருந்தாலும் தனது நகம் கரும்பலகையில் உரசும்வரைக்கும் அதனைப் பாவித்த பின்னரே புதிய வெண்கட்டியைக் கொண்டு பாடத்தை ஆரம்பிப்பார். பொதுச் சொத்துக்களின் அமானிதம் பேணுதலில் அதிகூடிய கவனம் செலுத்தி வந்தார்.

careem

1986ம் ஆண்டு, அல்-ஹிறா வித்தியாலயத்தில் தான் அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் காத்தான்குடி வரலாறு காணாத அல்-ஹிறாவின் 50வது ஆண்டு பொன்விழாவை இலங்கை போற்றுமளவுக்கு நடாத்தி அல்-ஹிறாவின் புகழை ஓங்கச் செய்தார்.

கல்வி, கலை, கலாச்சாரம் என்பன ஒருங்கிணைந்த மாணவர் சமூகத்தைக் கட்டியெழுப்ப சக ஆசிரியர்களின் உதவியுடன் தன்னை அர்ப்பணித்தார். 1986ம் ஆண்டு வரைக்கும் எட்டாம் வகுப்பு வரை இருந்து வந்த அல்-ஹிறாவின் தரத்தை, க.பொ.த சா.தரம் வரைக்கும் உயர்த்துவதற்கு அதிக பிரயத்தனம் செய்தார்.

பாடசாலையை 11ம் ஆண்டு வரைக்கும் தரமுயர்த்த அப்போதைக்கு பலத்த எதிர்ப்புக்கள் வந்தன. பெற்றோர்களிடமிருந்தும் சில எதிர்ப்புக்கள் எழுந்தன. எனினும் இறைவனை நம்பி தன்னை இரவு பகலாக அர்ப்பனித்து, தானும் சக ஆசிரியர்களும் அதிகாலை மற்றும் இரவு நேர வகுப்புக்களைத் தயார்படுத்தி, அப்போது 1987ம் ஆண்டு முதன் முதலாக அல்-ஹிறா வித்தியாலயத்திலுருந்து க.பொ.த. சா/த பரீட்சைக்குத் தோற்ற இருந்த மாணவர்களை மிக நிதானமாக வழிநடாத்தி, அவ்வருடம் காத்தான்குடி வியக்கத்தக பெறுபேற்றை தனது பாடசாலைக்குப் பெற்றெடுத்து பெற்றோர்கள் மத்தியில் நீங்காத இடத்தையும் பெற்றார்.

ஆற்றங்கரை ஓரத்தில் புற்றரையில் அமைந்திருந்த அல்-ஹிறாவின் சுற்றுச் சூழல் கால் நடைகளின் உறைவிடமாக அமைந்து வந்தது. இதனால் உடனடியாக அல்ஹிறா வித்தியாலயத்தை மூன்று பக்கங்களும் சேர்த்து மதில் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

al hira school

எனினும், அப்போது எதிர்பார்த்த உதவிகள் பிரரிடமிருந்து கிடைக்காமையினால் மாணவர்களிடமிருந்தே இச்சுற்று மதில் அமைப்பதற்கான உதவியைப் பெறும் ஆலோசனை மர்ஹூம் கரீம் ஆசிரியர் அவர்களால் முன்வைக்கப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு மாணவர்களிடமிருந்தும் 10 செங்கற்கள் பெறுவது எனும் அன்னாரது ஆலோசனை மிகச் சிறப்பாக அமைந்தது. செங்கற்கள் மாணவர்களால் திரட்டப்படுகிறது. 1988ம் ஆண்டு இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு, அல்-ஹிறா வித்தியாலயத்தைச் சூழ சுற்றுச் சுவர் இல்லா 50 வருட குறைபாடு அன்று நிவர்த்தி செய்யப்பட்டது.

சாரம் அணிந்து தனியார் வகுப்புக்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு நீல்காற்சட்டை (Trouser) அணிந்து செல்வது மாணவர்களுக்கு சாலச்சிறந்தது என்பதை அன்று வலியுறுத்தி வந்தார். ஆங்கிலத்தை பாடசாலையிலும், தனது வெளி வகுப்பிலும் கற்றுக் கொடுத்தார். மாணவர்கள் மாத்திரமன்றி, வெளிநாடு செல்லவிருப்போர், வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போர் போன்ற இளைஞர்களுக்கும் விசேட, பிரத்தியோக வகுப்புக்களை ஒழுங்கு செய்து நடாத்தி வந்தார். ஆங்கில பாலர் பாடசாலையை முதன் முதலில் காத்தான்குடியில் உருவாக்கி, மலலைகளையும் ஆங்கிலம் உச்சரிக்க அன்று வழிகாட்டடினார். காத்தான்குடியின் போற்றத்தக்க ஓர் மகானாகவும் திகழ்ந்தார்.

தனக்கு தேடிவந்த பதவிகளை துச்சமென மதித்து தான் சாதாரண ஓர் மனிதனாக வாழ்ந்து மரணிக்கவே விரும்பினார். வீட்டு முன்றலில் ஜாமியுழ்ழாபிரீன் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் இருந்தும், அதில் ஓர் சாதாரன மஅல்லா வாசியாகவே இருந்து தான் மரணிக்கும்வரைக்கும் இறைவனைப் பிரார்த்தித்து வந்தார்.

ஊரில் பல கட்சிகள் இருக்கும். இவர் எந்தக் கட்சி? மார்க்கப் பிரிவுகள், பாடசாலையில் இரு குழுக்கள், பள்ளி வாயலிலும் சமூகத்திலும் இரு குழுக்கள். கரீம் சேர் எந்தப் பிரிவு?? விடை தேட முடியாது.

Yourkattankudy

புன் முறுவல் முகத்துடன் பூமிக்கும் வலிக்காத நடையில் தனது தேவைகளை நிறைவு செய்து வந்தார். அவரது ஆசான் காலத்தில் யாரையும் கண்டிக்கவுமில்லை. நோகடிக்கவுமில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சுபாவமும் அவரது புன்னகையும் இன்றும் அல்ஹிறாவில் படித்து விடைபெற்ற எந்த மாணவ, மாணவிகளாலும் மறக்க முடியாதவை.

சுமார் 40 வருடங்கள் அல்ஹிறா மாணவர்களின் ஆசானாக இந்த மண்ணுக்குத் தன்னை அர்ப்பணித்து, மக்கள் ஏற்றுக் கொண்ட ஓர் உண்மை ஆசானாக இன்று இறைவனைச் சந்திக்கும் முதல் பயணத்தில் அவர் எங்களை முந்திவிட்டார்.

அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை அருள்பாளிப்பானாக! ஆமீன்.