வத்திகான்: வத்திக்கானில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நான்கு பெண்கள் மற்றும் முஸ்லீம் பெரியவர் உட்பட 12 பேரின் காலைக் கழுவி போப் பிரான்சிஸ் முத்தமிட்டுள்ளார். இயேசு கிறிஸ்துவர்களின் நம்பிக்கைபடி சிலுவையில் அறையப்பட்ட நாளை கிறிஸ்துவர்கள் புனித வெள்ளி என்று கூறுகின்றனர்.
சிலுவையில் அறைவதற்கு முந்தைய நாள் இரவு இயேசு கிறிஸ்து தனது 12 சீடர்களுக்கு விருந்தளித்தார். பின்பு அவர்களின் கால்களைக் கழுவி சுத்தம் செய்து முத்தமிட்டார். தலைவராக இருந்தாலும் தொண்டர்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று அவர்களுக்கு அன்பு கட்டளையிட்டதன் பேரில், புனித வெள்ளிக்கு முதல் நாளான வியாழக்கிழமை அன்று புனித வியாழன் என்கிற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் வத்திக்கானில் நடைபெற்ற புனித வியாழன் வழிபாட்டு நிகழ்ச்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், பாதிரியார்களும் கலந்து கொண்டனர்.
போப் பிரான்சிஸ் பேசுகையில்,
‘பாதிரியார்கள் மிக எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும். கிறிஸ்தவ தேவாலயங்களின் கதவுகள் திறந்து கிடக்கும் வீடாக, பாவப்பட்டவர்களின் முகாம் ஆக தெருக்களில் வாழ்பவர்களின் இல்லமாக, நோயாளிகளின் அன்பு நிலையமாக இளைஞர்களின் முகாம் ஆக திகழ வேண்டும்’ என்றார்.
பின்பு போப் ரோம் புறநகரில் கிறிஸ்தவ தேவாயலம் நடத்தும் மறுவாழ்வு மையத்தில் தங்கியுள்ள 12 உடல் ஊனமுற்றோரின் கால்களை கழுவி சுத்தம் செய்து முத்தமிட்டார். இதில் 16 முதல் 86 வயதுவரை உள்ளவர்கள் அடங்குவர்.
அவர்களில் நான்கு பெண்கள், ஹமீத் (75) என்ற லிபியாவைச் சேர்ந்த முஸ்லீம் பெரியவரும் அடக்கம். இதற்கு முன்பு இந்த நிகழ்ச்சி வத்திக்கான் அல்லது ரோமில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.